Breaking

முடி உதிர்வைத் தடுக்கும்... கூந்தலைப் பளபளப்பாக்கும் வெங்காயம்!

முடி உதிர்வைத் தடுக்கும்... கூந்தலைப் பளபளப்பாக்கும் வெங்காயம்! 

தமிழர் உணவில் வெங்காயம் தவிர்க்க முடியாதது. தக்காளி, வெங்காயம் சேர்க்காமல் செய்த குழம்பு நமக்கு ருசிப்பதில்லை. பசி வேளையில் பழங்கஞ்சி உள்ளே இறங்க பச்சை வெங்காயம் போதும். மணம், ருசியில் மட்டுமல்ல... நம் சமையற்கட்டில் இருக்கும் வெங்காயம், மருத்துவக் குணமும் கொண்டது; ஆரோக்கியத்துக்கு பல வழிகளில் உதவுவது; முக்கியமாக, முடி உதிர்வைத் தடுக்கும்... கூந்தலைப் பளபளப்பாக்கும்!

“இளம் வயதிலேயே முடி அடர்த்தி குறைவது, வழுக்கை விழுவது இன்று பலருக்கும் சர்வ சாதாரணமாகிவிட்ட ஒன்று. வெங்காயம் போதும்... முடி உதிர்வு பிரச்னையைத் தீர்த்துவிடலாம்’’ என்கிற சித்த மருத்துவர் உலகநாதன், வெங்காயத்தின் பலன்கள் குறித்து விரிவாகப் பேசுகிறார்...

தலைமுடி கொட்டும் பிரச்னை இப்போது அதிகமாகி வருகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஊட்டச்சத்துக் குறைபாடு, இரும்புச்சத்து குறைவது, ஹார்மோன் பிரச்னை, மன உளைச்சல், பரம்பரை பரம்பரையாக முடி குறைவாக இருப்பது... இப்படி ஒருவருக்கு, ஒரு நாளைக்கு சராசரியாக 100 முடிகள் வரை உதிரலாம். அதை தாண்டினாலோ, உதிர்ந்த இடத்தில் முடி மீண்டும் வளராமல் இருந்தாலோ அதற்காக கூடுதலாக கவனம் செலுத்தவேண்டி இருக்கிறது.

வெள்ளை வெங்காயம், சிவப்பு வெங்காயம், சாம்பார் வெங்காயம் மூன்றிலுமே ஒரே மாதிரியான மருத்துவக் குணங்கள் உள்ளன. இது, கால்சியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி, சல்ஃபர் போன்ற சத்துக்கள் நிறைந்தது. குறிப்பாக, சாம்பார் வெங்காயத்தில் சல்ஃபர் மற்றும் கால்சியத்தின் அளவு அதிகம்.

முடி வளர்ச்சிக்கும், நுனி முடி பிளவுபடாமல் இருப்பதற்கும் சீரான ரத்த ஓட்டம் அவசியம். வெங்காயத்தில் உள்ள சல்ஃபர், நம் ரத்த ஓட்டத்தைச் சீர்செய்து, முடியின் வேர்களுக்கு உறுதியை அளித்து, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. வெங்காயம் சிறந்த ஆன்டிபயாடிக்காகவும் செயல்படுகிறது.

நம் உடல் இயற்கையாகவே ஹைட்ரஜன் பெரக்சைடு (Hydrogen Peroxide) எனும் மூலக்கூறுகளைச் சுரக்கும் தன்மைகொண்டது. இது அதிக அளவில் சுரக்கும்போது நரை முடி உருவாகும். இந்தச் சுரப்பை குறைத்து, முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர்வதற்கு வெங்காயச் சாற்றைத் தலையில் தடவிக்கொள்ளலாம்.

வெங்காயச் சாற்றை தொடர்ந்து வாரம் இரண்டு முறை தலையில் தடவிவர பொடுகு, பேன், ஈறு ஆகியவற்றை நீக்கி, அழுக்குப் படியாமல் இருக்கும்.

தலை முடியில் பூச்சி வெட்டு காரணமாக, ஆங்காங்கே முடி வளர்ச்சி குறைந்து காணப்படும். இது பலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்திவிடும். அதற்காகக் கவலைப்படத் தேவையில்லை. வாரத்துக்கு மூன்று முறை 25 கிராம் வெங்காயத்தை அரைத்து சாறு எடுக்கவும். அதைத் தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் தலையில் ஊறவைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரால் தலையை அலசவும். இப்படி, குறைந்தது மூன்று மாதங்களாவது தொடர்ந்து செய்து வந்தால், தலையில் உள்ள நச்சுக்கிருமிகள் அழியும். புதிய முடி முளைக்கும்.

முடி உதிர்வுக்கு உடல் சூடும் ஒரு முக்கியக் காரணம். வெங்காயம், உடல் சூட்டைக் குறைப்பதோடு, கபம், வாதம், பித்தம் சார்ந்த வியாதியையும் குணப்படுத்தும். சீவும்போது, சிலருக்கு வேரோடு முடி வந்துவிடும். அந்தப் பிரச்னையக்கூடத் தடுக்கும்.

`வெங்காயச் சாற்றைத் தடவினால் உடல் குளுமையாகிவிடும், ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும், ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சேராது’ என்றெல்லாம் சொல்வார்கள். அது தவறு. இவர்கள் முதல் வாரம், வெங்காயச் சாற்றை 15 நிமிடங்களுக்கு ஊறவைத்து தலையை அலசலாம். அடுத்த வாரம், 20 நிமிடங்கள் ஊறவைக்கலாம். மூன்றாவது வாரம் 25 நிமிடங்கள்... இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நேரத்தை கூட்டிக்கொண்டே போய், ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கலாம். இப்படிச் செய்வதால், உடல் அதை ஏற்றுக்கொள்ளும். எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படாது.

வெங்காயச் சாற்றைத் தொடர்ந்து கூந்தலில் தடவுவதால், சில நாட்களில் கூந்தல் பளபளப்பாக மின்னும். இந்த `வெங்காய ஹேர் பேக்’கை வீட்டிலேயே சுலபாமகச் செய்ய முடியும்.


வெங்காய ஹேர் பேக்

தேவையானவை:வெங்காயம் - 2, தேன் - 2 டீஸ்பூன்.

செய்முறை: வெங்காயத்தை நன்கு அரைத்து, வடிகட்டவும். அந்தச் சாற்றுடன் தேனைக் கலந்துகொள்ளவும். வெங்காயச் சாற்றை பஞ்சால் நனைத்து, உச்சந்தலையில் நன்கு தடவவும். அரை மணி நேரத்துக்குப் பிறகு, ஆர்கானிக் ஷாம்பு அல்லது சிகைகாயால் தலை முடியை அலசவும். இதை வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் என, குறைந்தது ஐந்து மாதங்களாவது தொடர்ந்து செய்ய வேண்டும். நல்ல பலன் கிடைக்கும். தேனைகூந்தலில் தடவினால் முடி வெள்ளையாகும் எனச் சிலர் கூறுகின்றனர். இது தவறான கருத்து. ஆதலால் பயமின்றி இந்த பேக்கை பயன்படுத்தலாம்.

வெங்காயம் மற்றும் தேங்காய் எண்ணெய் பேக்

தேவையானவை:வெங்காயச் சாறு - 1 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: 

இந்த இரண்டையும் கலந்து, தலையிலுள்ள உச்சி முடி முதல் நுனி முடி வரை தேய்த்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குளிக்கலாம். வாரத்துக்கு ஒரு முறை மட்டும் செய்தால் போதுமானது.

குறிப்பு: 

உடனடித் தீர்வை எதிர்பாக்காமல், தொடர்ந்து மூன்று மாதங்களாவது செய்தால்தான் பலன் தெரியும்.

No comments:

Powered by Blogger.