Breaking

ஜி7 என்றால் என்ன? சீனா இதில் ஏன் சேர்க்கப்படவில்லை?

ஜி7 என்றால் என்ன?
முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும், வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகள் இருக்கும் அமைப்பே ஜி7. அதாவது Group of Seven.
இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இதாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன.
சுதந்திரம், மனித உரிமை, ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற முக்கிய கொள்கைகளோடு, தங்கள் சமூகம் இருப்பதாக இந்த நாடுகள் தங்களை கருதிக் கொள்கின்றன.
இதில் என்ன நடக்கும்?
முதன்முதலில் 1975ல், உலக பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை தேடும் முயற்சியில் தங்களின் யோசனைகளை பரிமாற்றிக் கொள்வதற்காக ஆறு நாடுகள் கூடி சந்தித்தன.
அதற்கு அடுத்த ஆண்டு கனடா இந்த அமைப்பில் உறுப்பினரானது. 1998இல் உறுப்பினரான ரஷ்யா உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமியாவை தன்னுடன் 2014இல் இணைத்துக் கொண்டதால் நீக்கப்பட்டது. அதன்பின் ஜி8 மீண்டும் ஜி7 ஆனது.
ஆண்டு முழுவதும் அவ்வப்போது, ஜி7 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், சில முக்கிய விஷயங்களை விவாதிக்கக் கூடுவார்கள்.
ஆண்டுதோறும் இந்த மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு, இதன் தலைவராக சுழற்சி முறையில் இருக்கும். அந்த நாடே அந்த ஆண்டுக்கான மாநாட்டை நடத்தும்.
ஆற்றல் உற்பத்தி கொள்கை, பருவ நிலை மாற்றம், எய்ட்ஸ் மற்றும் உலகபாதுகாப்பு ஆகியவை அங்கே விவாதிக்கப்படும் சில விஷயங்களாகும்.
மாநாட்டின் இறுதியில் என்னவெல்லாம் ஒப்புக்கொள்ளப்பட்டதோ, அவையெல்லாம் அறிக்கையாக வெளியிடப்படும்.
ஜி7 மாநாட்டில் அதன் உறுப்பு நாடுகளின் தலைவர்களோடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவரும் கலந்து கொள்வார்கள்.
பொதுவாக மற்ற நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளும் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்.
இந்தாண்டு பியரிட்ஸில் நடைபெறும் மாநாட்டில் சமத்துவமின்மைக்கு எதிராக போராடுவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
இதனால் என்ன நன்மை உண்டா?

தற்போதைய காலத்திற்கு தொடர்பில்லாமல் இருக்கிறது என்று ஜி7 குழு விமர்சிக்கப்பட்டாலும், இதனால் சில நன்மைகள் கடந்த காலங்களில் நடந்திருக்கின்றன. எய்ட்ஸ், டிபி, மலேரியாவுக்கு எதிராக போராட சர்வதேச நிதி திரட்ட இந்த ஜி7 குழு உதவி இருக்கிறது. இதனால் 2002ஆம் ஆண்டில் இருந்து 27 மில்லியன் மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2016 பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தை அமல்படுத்த இந்த மாநாடு உந்துகோலாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த உறுப்பு நாடுகளில் சீனா ஏன் இடம்பெறவில்லை?
உலகின் அதிக மக்கள் தொகை மற்றும் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை சீனா கொண்டுள்ளது. எனினும் தனிநபர் சொத்து என்பது குறைவாக இருக்கிறது. ஜி7 உறுப்பு நாடுகளின் பொருளாதாரம் மேம்பட்டிருக்கும் அளவிற்கு சீனா இல்லை என்பதால் அந்நாடு இக்குழுவில் இடம் பெறவில்லை.
ஜி7 நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
ஜி7 நாடுகளுக்குள் அதிகளவில் கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது. இறக்குமதிக்கான வரி மற்றும் காலநிலை மாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகளில் கடந்தாண்டு கனடாவில் நடைபெற்ற மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முரண்பட்டார்.
சமகால சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரங்களை இந்த மாநாடு பிரதிபலிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் எந்த நாடுகளும் இந்த ஜி7-ல் இடம் பெறவில்லை.
மேலும் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள், ஜி20-ல் இடம் பெற்றிருந்தாலும் ஜி7-ன் உறுப்பினர்களாக இல்லை.

No comments:

Powered by Blogger.