Breaking

காய்ச்சலை பற்றி பரப்பப்படும் மூடநம்பிக்கைகளும் அறிவியலும்





காய்ச்சலை பற்றி பரப்பப்படும் மூடநம்பிக்கைகளும் அறிவியலும் 

மூட நம்பிக்கை---

காய்ச்சல் என்பது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உடல் செய்யும் யுக்தி. ஆகவே காய்ச்சல் வந்தால் மாத்திரை மருந்து எடுத்து உஷ்ணத்தை குறைக்க கூடாது 

அறிவியல் பதில் 

நமது உடலின் மீது வைரஸ் / பாக்டீரியா போன்ற ஒரு செல் உயிரிகள் தொடர்ந்து படையெடுத்து போர் செய்து கொண்டே இருக்கின்றன இவற்றில் இருந்து நமக்கு வெற்றியை தேடித் தருவது நமது நோய் எதிர்ப்பு சக்தியாகும்.

எதிரி பலமானவனாக இருக்கும் போதும் 
நாம் சிறிது பலவீனமாக இருக்கும் போதும் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து , எதிரியின் கை சிறிது காலம் ஓங்குகிறது. 


இந்த அவசர நிலையை தான் நமது உடல் நமக்கு காய்ச்சல் எனும் அறிகுறியாக காட்டுகிறது..

இப்படி காய்ச்சல் வந்ததும்.. 
ஒருவர் ஓய்வு நிலைக்கு செல்ல வேண்டும். 
எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவுகளை எடுக்க வேண்டும் 

நோயின் காரணத்தை மருத்துவரின் உதவியோடு அறிந்து அதை சரிசெய்ய வேண்டும். 

சில காய்ச்சல் பாக்டீரியாவால் வருவது, உதாரணம் - டைபாய்டு.. ஒரு காலத்தில் டைபாய்டு என்பது அச்சுறுத்தக்கூடிய நோயாக இருந்தது ஆனால் ஆண்டி பயாடிக் மருந்துகளின் வருகையால் அந்த நோயை நாம் எளிதில் குணப்படுத்த முடிகிறது

அது போல் தான் இந்த டெங்கி நோயும் ஒரு வைரஸால் வருவது. இதற்கென ஆண்டிபயாடிக்குகள் இல்லை. ஆனால் அந்த நோய் தரும் தாக்கம். அந்த நோயின் படிநிலைகள் அறிந்து சிகிச்சை அளித்தால் நாம் எளிதாக டெங்கிவை கடந்து வந்துவிடலாம் 


மூடநம்பிக்கை----

காய்ச்சல் வந்தால் தண்ணீர் கூட அருந்தாமல் பட்டினி கிடக்க வேண்டும் 

அறிவியல் 

டெங்கி போன்ற நோய்களில் உயிரிழப்பை ஏற்படுத்துவது நீரிழப்பு தான். ஆகவே உணவையே கஞ்சியாக்கி கொடுக்க சொல்கிறோம். ஓ.ஆர்.எஸ் பொடியை கலக்கி குடிக்க சொல்கிறோம். 
நீர்சத்தை சரிவர பராமரிக்கவில்லையெனில் அதுவே நம்மை மரணத்திற்கு கூட்டிச்செல்ல வாய்ப்புண்டு 

மூடநம்பிக்கை---

வாந்தி வயிற்றுப்போக்கு அனைத்தும் கழிவுகளை உடல் வெளியேற்றும் யுக்தி . 
மருந்து மாத்திரை போட்டு தடுப்பது தவறு. 

அறிவியல் 

வயிற்றுக்கு ஒவ்வாத அல்லது கிருமிகள் அண்டிய உணவை நாம் உண்ணும் போது அந்த கிருமிகள் வயிற்றுக்கு சென்று வளர ஆரம்பித்து நமக்கு நோய் தொற்றை உண்டாக்குகின்றன

உண்மையில் உடல் அந்த கிருமிகளை வெளியேற்ற நினைத்து வாந்தி வயிற்றுப்போக்கை உண்டாக்குகிறது

ஆனால் அது எந்த அளவு நிகழ்கிறது என்பதில் இருக்கிறது எல்லாம்.. 

குழந்தைகளுக்கு ஒரே நாளில் பத்து தடவை வயிற்றுப்போக்கு செல்வது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். 

வாந்தியும் கூட இருந்தால் பிரச்சனை முற்றுவது இன்னும் சீக்கிரம் நடக்கும். 

நாம் உண்மையில் மருத்துவம் செய்ய வேண்டியது.. நோய்க்கான காரணத்தை தான்.. நோயை உண்டாக்கிய கிருமியை களையாமல் நம்மால் நோயை சரிசெய்ய இயலாது. 

ஆகவே வாந்தி வயிற்றுப்போக்கு எல்லை மீறுகையில் நிச்சயம் அதற்கு வைத்தியம் பார்த்தே ஆக வேண்டும். இல்லையெனில் நம் நீர்சத்தை இழந்து உயிருக்கு ஆபத்தான கட்டத்தை எட்ட வாய்ப்புண்டு...

No comments:

Powered by Blogger.