Breaking

பறவை இனங்கள் காலங்காலமாக நாடு விட்டு நாடு செல்வது ஏன்?

நாம் வாழும் இந்த பூமியில் பலவிதமான பறவை இனங்களும் வாழ்ந்து வருகின்றன. 

நாடு விட்டு நாடு செல்ல மனிதர்களுக்கு ‘பாஸ்போர்ட்’, ‘விசா’ போன்ற ஆவணங்கள் தேவை என்றாலும், கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பறவைகளுக்கு இதுபோன்ற ஆவணங்கள் எதுவும் தேவையில்லை.


யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற வாசகம் இந்த பறவை இனங்களுக்குத்தான் பொருந்தும். 

தனது உடல் சக்திக்கு ஏற்ப பறந்து, விரிந்த இந்த உலகில் பறவைகளால் திசை எட்டும் சுதந்திரமாக பறந்து திரிய முடியும்.


சங்ககால இலக்கியங்களிலேயே பறவை இனங்கள் நாடுவிட்டு நாடு சென்று வருவது குறித்து கூறப்பட்டுள்ளது. 

உதாரணமாக, சத்திமுத்தப் புலவர் ‘நாரைவிடு தூது’ என்ற தலைப்பில் எழுதிய, “நாராய் நாராய் செங்கால் நாராய்...” என்ற பாடல் வரிகளில், பொருள் ஈட்ட சென்ற இடத்தில் தான் படும் கஷ்டத்தை மனைவியிடம் போய் சொல்லுமாறு நாரை மூலம் தூது அனுப்புவதாக சொல்லப்பட்டுள்ளது. அதில், “தென் திசையில் உள்ள கன்னியாகுமரியில் நீராடிய பிறகு, வடதிசை நோக்கி செல்லும்போது என்னுடைய ஊருக்கு சென்று எனது வறுமை நிலையை மனைவியிடம் எடுத்துச்சொல்” என்று நாரையிடம் அவர் சொல்வது போல் அந்த பாடல் அமைந்திருக்கும்.


இப்படி பறவை இனங்கள் காலங்காலமாக நாடு விட்டு நாடு செல்வது ஏன்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுவது உண்டு.


அதாவது, பூமியின் வடதுருவத்தில் குளிர் காலம் தொடங்கும்போது, அங்குள்ள பறவை இனங்களுக்கு அதுபோன்ற சீதோஷ்ண நிலை பிடிப்பதில்லை. இதனால் தென் துருவம் நோக்கி அவை கிளம்பிவிடுகின்றன. அவ்வாறு வரும் பறவைகள் தான், இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வருகை தருகின்றன.


தமிழ்நாட்டில் உள்நாட்டு பறவைகள் மட்டுமல்லாது, வெளிநாட்டு பறவைகளையும் வரவேற்பதற்காக 15 இடங்களில் சரணாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சரணாலயங்களுக்கு ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை தொடங்கும் அக்டோபர் மாதம் முதல் வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கும்.


சைபீரியா, ரஷியா, ஆஸ்திரேலியா, பர்மா, கனடா, மியான்மர், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பறவைகள் வருகை தரும். நத்தைகுத்தி நாரை, கூழைக்கடா, பாம்புத்தாரா, சாம்பல்நாரை, வெட்டிவாயன், கரன்டிவாயன், வெள்ளை அரிவாள் மூக்கன் என்று வெளிநாட்டு பறவைகள் பெயர் பட்டியலுடன் 360 வகையான பறவை இனங்களின் பெயர்கள் இடம்பெறுகின்றன.


தேனிலவுக்கு வருவதுபோல் தமிழகத்தில் குவியும் விதவிதமான பறவைகள், இங்கேயே கூடுகட்டி தங்கி, முட்டையிட்டு, குஞ்சு பொறித்து, குஞ்சுகளுக்கு பறக்க கற்றுக்கொடுத்து, மார்ச் மாத இறுதியில் புதிய குடும்பமாய் சொந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்.


சரணாலயங்களில் இந்த பறவைகள் தங்கியிருக்கும்போது, உணவுக்காக அருகில் உள்ள நீர்நிலைகள், வயல்வெளிகளுக்கு சென்று வருவது உண்டு. இவ்வாறு 6 மாத காலம் வெளிநாட்டு பறவைகள் தமிழகத்தில் உள்ள சரணாலயங்களில் தங்கிச் செல்வது வழக்கம்.


வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த 15 சரணாலயங்களில் ஆண்டுதோறும், டிசம்பர் மாதம் இறுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். முன்பெல்லாம் ஆண்டுக்கு ஆண்டு தமிழகத்திற்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருந்தது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக பறவைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.


இதற்கு மாறிவரும் பருவநிலை மாற்றம் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. பருவநிலை மாறுவதால், பறவைகளும் திசை மாறிச் செல்கின்றன. இது பறவை ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முன்பெல்லாம் வடகிழக்கு பருவமழை என்பது உரிய காலத்தில் தொடங்கி, சரியான நேரத்தில் முடிவடையும். அதற்குள் நீர்நிலைகள் எல்லாம் நிறைந்துவிடும். விவசாயமும் செழித்தோங்கும். வெளிநாடுகளில் இருந்து நம்மை நாடி வரும் பறவைகளும் இதுபோன்ற ரம்மியமான சூழ்நிலையைத்தான் விரும்புகின்றன. இனப்பெருக்கம் செய்வதற்கு பாதுகாப்பான இடமும், தேவையான உணவும், மிதமான வெப்பமும் ஒருங்கே கிடைப்பதால், பறவைகளும் ஆண்டுதோறும் இங்கே விரும்பி வருவது உண்டு.


ஆனால், இப்போது போதிய மழை இல்லை. நீர்நிலைகளிலும் குறைந்த அளவு தண்ணீரே இருக்கிறது. விவசாயமும் குறைந்த அளவே நடைபெறுவதால், பறவைகள் சாதகமற்ற சூழ்நிலையை உணர்ந்து கொண்டு திசைமாறி செல்லத் தொடங்கிவிடுகின்றன. குறைந்த அளவு பறவைகள் இங்கே இருந்தாலும், உடனே கூடு கட்டி தங்கிவிடுவது கிடையாது. இரைக்காக அங்கும்... இங்கும்... அலைய வேண்டி இருக்கும் கஷ்டத்தை அனுபவித்து, கடைசியில் நொந்து, இனப்பெருக்கம் செய்யாமலேயே சொந்த நாடுகளுக்கு புறப்பட்டு விடுகின்றன.


இனி வருங்காலங்களிலாவது வெளிநாட்டு பறவைகளை, சிவப்பு கம்பளம் விரித்து தலைவர்களை வரவேற்பது போல், பச்சை நிற பசுமை போர்த்தி வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வனத்துறை மேற்கொள்ள வேண்டும். அதாவது, சரணாலயம் இருக்கும் நீர்நிலைகளில் போதுமான நீரை இருப்பு வைக்க வேண்டும். அந்த நீர்நிலைகளில் இரைக்கான மீன் குஞ்சுகளை முன்கூட்டியே விட வேண்டும். அருகில் கட்டுமானங்களுக்கு அனுமதி கொடுக்காமல், அமைதியையும், பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும்.


இதுபோன்ற முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே வெளிநாட்டு பறவைகள், ஆண்டுதோறும் இன்முகத்துடன் தேனிலவு கனவில் தமிழக சரணாலயங்களை நோக்கி உற்சாகமாக படையெடுக்கும்.

No comments:

Powered by Blogger.