Breaking

நம்முடைய வீடுகளில் வாங்கி வைத்து உடல்நிலையைப் பரிசோதித்துக்கொள்ள உதவும் கருவிகள், மருத்துவமனைகளில் உள்ள அடிப்படையான மருத்துவக் கருவிகள் பற்றி அறிவோம்..


நம்முடைய வீடுகளில் வாங்கி வைத்து உடல்நிலையைப் பரிசோதித்துக்கொள்ள உதவும் கருவிகள், மருத்துவமனைகளில் உள்ள அடிப்படையான  மருத்துவக் கருவிகள் பற்றி அறிவோம்..


ஸ்டெதஸ்கோப் (Stethoscope)
மருத்துவர்களின் அடையாளமாக இருப்பது. அலோபதி மருத்துவர்கள் எப்போதும் உடன் வைத்திருக்கும் ஒரு கருவி இந்த ‘ஸ்டெதஸ்கோப்’. இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், நுரையீரல் செயல்பாடு போன்றவற்றைப் பிற கருவிகளின் மூலமாகப் படம் பிடித்து நோய் பாதிப்பைக் அறிவதற்குமுன் இதன்மூலம் கண்டறியலாம்.


நாடி அழுத்தமானி (Sphygmomanometer)
பொதுவாக இதை ‘பிபி அப்பாரட்டஸ்’ (BP Apparatus) என்று அழைப்போம். இது பல்ஸ் ரேட், சிஸ்டோலிக் மற்றும் டயாஸ்டோலிக் பிரஷர்களை (Systolic & Diastolic Pressures) கணக்கிடப் பயன்படுகிறது. பல்ஸ் ரேட் என்பது இதயத்துடிப்பு; சிஸ்டோல் என்பது இதயம் ரத்தத்தை பம்ப் செய்து, வெளித்தள்ளும்போது ஏற்படும் அழுத்தம். ‘டயாஸ்டோல்’ என்பது இதயம், ரத்தத்தை உள்வாங்கும்போது ஏற்படும் அழுத்தம்.
சராசரியாக ஒருவருக்கு சிஸ்டோல் மற்றும் டயாஸ்டோல் 120/80 (mm/hg) என்ற அளவில் இருக்க வேண்டும். அதிகபட்சமாக 130/80 என்ற அளவு இருக்கலாம். பெண்களில் பலர் 100/70 கூட இருக்கிறார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியம் குறைவானவர்கள் என்று அர்த்தம் இல்லை. அவர்களது உடலமைப்பைப் பொறுத்தது அது. யாராக இருந்தாலும் குறைந்தபட்சம் 90/70 என்ற அளவுவரை இருக்கலாம். அதற்குக் குறையக் கூடாது. எப்போதும் ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது மிகவும் நல்லது. இதனால் உடல் உறுப்புகள் சேதமடையாமல் பாதுகாக்கப்படும்.


எலெக்ட்ரானிக் பிபி அப்பாரட்டஸ் (Electronic BP Apparatus) கருவியைச் சிலர் வீடுகளில் வாங்கிவைத்துப் பயன்படுத்துகிறார்கள். அது, துல்லியமான அளவைக் கொடுக்கும் என்று சொல்லமுடியாது. காரணம், கணக்கிடும்போது கையை அசைத்தால் அளவு மாறுபட வாய்ப்புள்ளது. வீடுகளில் பார்க்கும்போது கை அசைய வாய்ப்புள்ளது. தோராயமான அளவை வேண்டுமானால் கணக்கிட்டுக் கொள்ளலாம். கருவி வீட்டில் இருக்கிறது என்பதற்காகச் சிலர் அடிக்கடி பரிசோதித்துப் பார்ப்பார்கள். அதைத் தவிர்ப்பது நல்லது. தேவையில்லாமல் பரிசோதனை செய்து பீதிக்குள்ளாவதைத் தவிர்க்கலாம்.ரத்த அழுத்தப் பரிசோதனைக்காக ஒருவர் மருத்துவமனை வந்ததும் உடனடியாக அவருக்குப் பரிசோதனை செய்யமாட்டோம். அரைமணி நேரம் அமைதியாக உட்கார்ந்திருக்கச் செய்வோம். அதன் பிறகே சோதனை செய்வோம். சிகரெட் பிடித்திருந்தாலோ, வெகுதூரம் நடந்து வந்திருந்தாலோ அது சரியான அளவைக் காட்டாது. அதற்கு முந்தையநாள் இரவு நன்றாகத் தூங்கியிருக்கவேண்டும். சூடான உணவு எதையும் சாப்பிட்டிருக்கக் கூடாது. சோதனைக்குப் பிறகும் ஒருவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் அந்த ஒரு சோதனையை மட்டுமே வைத்துச் சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை. பலமுறை பரிசோதித்த பிறகே சிகிச்சையளிக்கிறோம்.


தெர்மாமீட்டர் (Thermometer)
நம்மில் பலருக்கும் தெரிந்த ஒரு கருவி தெர்மாமீட்டர். பெரும்பாலானோர் வீடுகளில் வாங்கிவைத்துப் பயன்படுத்தும் ஒரு கருவி இது. உடலின் வெப்பநிலையைக் கணக்கிட தெர்மாமீட்டர் பயன்படுகிறது. தெர்மாமீட்டரைப் பயன்படுத்துவதற்குமுன் சில விஷயங்களைக் கடைப்பிடிக்க .வேண்டும். முக்கியமாக, சுடுநீரில் போட்டு எடுத்திருக்கக் கூடாது. மெர்க்குரியை நன்றாக உதறி ரீடிங் அளவு ஜீரோ இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பிறகு, நாக்கின் கீழே முழுமையாக ஒரு நிமிடம் வைக்க வேண்டும். அதன்பிறகு அதை எடுத்து என்ன அளவு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
குழந்தைகளின் வாயில் தெர்மாமீட்டரை வைத்துப் பரிசோதிக்க முடியாது. அதனால், அக்குள் பகுதியில் வைத்துப் பரிசோதிக்க வேண்டும். சிலருக்கு மலக்குடலில் வைத்தும் அளவிடப்படும். இதற்கு வேறுவகையான தெர்மாமீட்டர் பயன்படுத்தப்படுகிறது. வெப்பநிலை 99°F (37.2°C) நார்மல். அதைவிட அதிகமாக இருந்தால் உடலில் வெப்பம் அதிகமாயிருக்கிறது; ஜுரம் என்று அர்த்தம்.


குளூக்கோமீட்டர் (Blood Sugar Monitor)
பெரும்பாலானோருக்குச் சர்க்கரை பாதிப்பு இருக்கிறது. அவர்கள், ஒவ்வொரு முறையும் ரத்தப்பரிசோதனை மையம் சென்று ரத்தச் சர்க்கரையின் அளவைத் தெரிந்து கொள்வது சிரமம். காலையில் எதுவும் சாப்பிடாமல் 2 மி.லி ரத்தம் எடுத்துச் சோதனை செய்ய வேண்டும். சாப்பிட்ட பிறகு மீண்டும் 2 மி.லி ரத்தம் எடுத்துப் பரிசோதனை செய்ய வேண்டும். இதுபோன்ற சிரமங்களைத் தவிர்க்க இந்த குளூக்கோமீட்டர் கருவி மிகவும் உதவியாக இருக்கிறது. அனைத்து மருத்துவர்களிடம் இது இருக்கிறது. பலர் வீடுகளிலும் வாங்கி வைத்துப் பரிசோதித்துக் கொள்கிறார்கள். ஏற்கெனவே சர்க்கரை இருப்பது கண்டறியப்பட்டவர்கள் இந்தக் கருவியின் உதவியுடன் பரிசோதித்துக்கொள்ளலாம்.
புதிதாக ஒருவருக்குச் சர்க்கரை இருப்பதை குளூக்கோஸ் டாலெரன்ஸ் டெஸ்ட் (Glucose Tolerance Test) மூலமே கண்டறிய முடியும். இந்தப் பரிசோதனையை மருத்துவர்களின் ஆலோசனையின்பேரிலேயே செய்ய வேண்டும். 140 – 199 mg/dl என்பது நார்மல். அதைவிட அதிகமானால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.பல்ஸ் ஆக்சிமீட்டர் (Pulse Oxymeter)
ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் அளவைக் கணக்கிட இந்தக் கருவி உதவும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கும் அதிகமாக சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease – COPD), இதய பலவீனம் உள்ளவர்களுக்கும் மூளை பாதிப்பு மற்றும் புகையில் வேலை செய்பவர்களுக்கும் இளைப்பு மற்றும் அதிகமாக மூச்சு வாங்கும் நிலை ஏற்படும். ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் அளவு குறைவதே இதற்குக் காரணம். இப்படிப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறிய இந்தக் கருவி பயன்படுகிறது.


க்ளிப் போன்று இருக்கும் இந்தக் கருவியின் நடுவே கைவிரலை வைத்து ஆக்சிஜன் அளவையும் இதயத்துடிப்பையும் தெரிந்துகொள்ளலாம். பெரும்பாலும் வீடுகளில் இதை யாரும் வாங்கி வைத்துப் பயன்படுத்துவதில்லை. ஆனால், மருத்துவமனைகளில் மிகவும் அவசியமாக இருக்க வேண்டிய ஒரு கருவி பல்ஸ் ஆக்சிமீட்டர். அறை வெப்பநிலையில் 98% – 100% (Sio2) இருக்க வேண்டும். 95 சதவிகிதத்துக்கும் குறைந்தால் நுரையீரல் பாதிப்பு அல்லது சுவாசப்பிரச்னை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.


வென்டிலேட்டர் (Ventilator)
சுவாசப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுச் சீராக சுவாசிக்க முடியாதவர்களுக்குச் செயற்கை சுவாசம் அளிக்க ‘வென்டிலேட்டர்’ உதவும். மயக்கவியல் மருத்துவர்களின் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்படும். பின்னர், அவர்களால் சுயமாக சுவாசிக்க முடிந்தபிறகே இந்தக் கருவி அகற்றப்படும். ஐந்து நாள்களிலிருந்து ஏழு நாள்கள் வரைகூட இந்தக் கருவியின் உதவியுடன் சுவாசம் அளிக்கலாம்.
நுரையீரல் செயலிழந்து விட்டாலோ, ஏதேனும் தொற்றால் பாதிக்கப்பட்டுச் செயல்படாமல் இருந்தாலோ வென்டிலேட்டர்தான் நுரையீரலாகச் செயல்படும். ஆக்சிஜனை உள்ளிழுத்து, கார்பன் – டை ஆக்சைடை வெளியேற்றும் வேலையையும் இந்த வென்டிலேட்டர்தான் செய்கிறது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் இருக்கவேண்டிய மிக முக்கியமான ஒரு கருவி வென்டிலேட்டர்.


எலெக்ட்ரோகார்டியோகிராபி (Electrocardiography)
இதயத்துடிப்பைக் கணக்கிடவும் இதயத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறியவும் இந்தக் கருவி பயன்படும். பொதுவாக நம் இதயம் ஓர் எலெக்ட்ரிக் சர்க்யூட் (Electric Circuit) போன்றுதான் செயல்படுகிறது. தேவையான மின்சாரம் கிடைத்தால்தான் இதயம் துடிக்கும். தசைகள் ஏதாவது பாதிப்படைந்து இதயத்துக்கு சிக்னல் கிடைக்கவில்லையென்றாலும் இதன்மூலம் கண்டறியலாம். இதயத்துடிப்பில் மாறுதல், ரத்த ஓட்டம் சரியாக இருக்கிறதா? சரியான பாதையில் இதயம் துடிக்கிறதா? என இதயத்தில் எத்தகைய மாறுதல்கள் நிகழ்ந்தாலும் இந்தக் கருவியின் உதவியுடன் கண்டறிய முடியும். வேறு ஏதேனும் பிரச்னைகளால் இதயம் பாதிக்கப்பட்டாலும் தெரிந்துகொள்ளலாம். ஒட்டுமொத்தமாக இதயத்தின் செயல்பாடுகளைப் படம் பிடித்துக் காட்டுவதால் இது `எலெக்ட்ரோகார்டியோ கிராப்’ (Electrocardiograph) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்க மொழியில் `கார்டியோ’ (Cardio) என்றால் இதயம் என்று பொருள்.


கார்டியாக் மானிட்டர் (Cardiac Monitor)
பல்ஸ் ரேட், ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு ஆகிய மூன்றையும் அறிந்து கொள்ள இந்தக் கருவி பயன்படும். அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு இந்தக்கருவி பொருத்தப்பட்டு அவர்களின் உடலில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தையும் கவனித்து அதற்கேற்ப சிகிச்சையளிக்கப்படும். அறுவைசிகிச்சையின்போது இந்தக் கருவி மிகவும் இன்றியமையாதது.


ஆம்பு பேக் (Ambu bag)
இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாடு ஒருவருக்குத் திடீரென்று நின்று போனால், அதன் செயல்பாடுகளை மீட்டுருவாக்கம் (Cardiopulmonary Resuscitation) செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அந்தநேரத்தில் கார்டியாக் மசாஜ் (Cardiac Massage) செய்து இதயத்தின் செயல்பாட்டை மீளச் செய்துவிடலாம். நுரையீரலின் செயல்பாட்டை மீட்டுருவாக்கம் செய்ய இந்த ஆம்பு பேக் பயன்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் முகத்தில் மாஸ்க் பொருத்தப்படும். பிறகு இதிலுள்ள பம்பை அழுத்தும்போது ஆக்சிஜன் அதிகமாக உள்ள காற்று உள்ளே செல்லும். இதை மேனுவலாகவும் செய்யலாம் அல்லது ஆக்சிஜன் சிலிண்டரைப் பொருத்தியும் பயன்படுத்தலாம். மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்குச் சிகிச்சையளிக்க இது மிகவும் அவசியம்.ஏர்வேஸ் (Airways)
நோயாளிகளில் சிலருக்கு நாக்கு தொண்டையில் சிக்கிக்கொண்டு மூச்சு விடமுடியாது. அப்படிப்பட்டவர்களுக்கு நாக்கை முன்னே இழுத்து, இரண்டு பற்களின் இடையே ஏர்வேஸை வைத்துவிட்டால் மூச்சுவிட மிகவும் உதவியாக இருக்கும்.


டெஃபிப்ரிலேட்டர் (Defibrilator)
மின்னணுக்களின்மூலம் இதயத்தைக் கட்டுப்படுத்த இது உதவும். சிலருக்கு இதயம் சீரற்ற நிலையில் துடிக்கும். துடிக்க வேண்டிய பாதையில் இல்லாமல் வேறொரு பாதையில் துடிப்பதுதான் இதற்குக் காரணம். நம் இதயத்துக்குள் எலெக்ட்ரிக் வயர்கள் போன்று சில நரம்புகள் இருக்கும். அதன்வழியாக மின்னோட்டம் சென்று இதயத்தைத் துடிக்கவைக்கும். சில நேரங்களில் இது சரியான வழியில் செல்லாமல் ஷாட் சர்க்யூட் ஆகி வேறொரு பாதையில் சென்று இதயத்தைத் துடிக்க வைக்கும். இதனால் இதயம் மட்டுமல்லாமல் மூளை மற்றும் உடலின் அனைத்து பாகங்களும் பாதிக்கப்படும். இது மிகவும் ஆபத்தானது. Radiofrequency Ablation மூலம் இந்தப் பிரச்னையைச் சரிசெய்து சரியான பாதையில் சீராகத் துடிக்க வைக்க Defibrilator பயன்படும். சிலருக்கு இதயத்துடிப்பு நின்றுபோனால் மீண்டும் இதயத்தைத் துடிக்க வைக்க இந்தக் கருவி பயன்படும். இரண்டு ஸ்டெம்களை வைத்து ஷாக் கொடுத்து இதயத்தைத் துடிக்கச் செய்யலாம்.


ட்ரெட்மில்டெஸ்டிங் மெஷின் (TMT Machine)
ஒருவருக்கு இதய பாதிப்பு இருக்கிறதா என்பதை அவர் எந்தவிதச் செயல்பாட்டிலும் ஈடுபடாமல் இருக்கும்போது கண்டறிய முடியாது. ஏதாவது ஒரு செயல்பாட்டில் இருக்கும்போதுதான் கண்டறிய முடியும். அதற்கு இந்தக் கருவி உதவும். ட்ரெட்மில்லில் ஓடச்சொல்லி இதயத்துடிப்பில் ஏதேனும் மாறுபாடு இருக்கிறதா, ரத்த ஓட்டம் குறைவாக இருக்கிறதா, வலி ஏற்படுகிறதா என்பதை இ.சி.ஜி மானிட்டரில் (ECG Monitor) கண்டறிந்து இதயநோய் இருப்பதை உறுதிசெய்யலாம்.


எலெக்ட்ரோ என்செபலோகிராபி Electroencephalography
கார்டியோகிராபி எப்படி இதயத்தின் செயல்பாடுகளைக் கண்டறிய உதவுகிறதோ அதேபோன்று மூளையின் செயல்பாட்டைக் கண்டறிய Encephalography உதவும். மூளையில் மின் தூண்டல் அதிகமாவதால்தான் வலிப்பு நோய் ஏற்படும். நரம்பு தொடர்பான நோய்களைக் கண்டறியவும் இது உதவும்.


நெபுலைசர் (Nebulizer)
ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்தக் கருவி பெரிதும் உதவும். தேவையான அளவு மருந்தை இந்தக் கருவிக்குள் செலுத்தினால் அதைக் காற்றாக மாற்றிக்கொடுக்கும். சுவாசிக்கச் சிரமமாக உள்ள நேரங்களில் இதை உள்ளிழுக்கச் செய்தால் சுருங்கிப் போன ஏர்வேஸ் சரியாகி எளிதாக சுவாசிக்க உதவும். மாத்திரை, மருந்து சாப்பிட்டு அது நம் ரத்தத்தில் கலந்து அது செயல்படும் நேரத்தைவிட இது மிகவிரைவாகச் செயல்படும். பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது. ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களுக்கு லேசான தூசு பட்டாலே காற்று செல்லும் டியூப்கள் சுருங்கிக்கொண்டு சுவாசிக்க மிகவும் சிரமப்படுவார்கள். அந்த நேரத்தில் நெபுலைசர் கருவி உயிர் காக்கும். இந்தக் கருவியைப் பலர் வீடுகளில் வாங்கி வைத்துப் பயன்படுத்துகிறார்கள். அதில், எவ்வளவு மருந்து, எவ்வளவு தண்ணீர் ஊற்றவேண்டும் என்று மருத்துவர்கள் விளக்குவார்கள்.


இன்ஃபியூஷன் டியூப் (Infusion Tube)
மாரடைப்பு மற்றும் பல்வேறு பிரச்னைகளால் உடல்நிலை பாதித்து மிகவும் ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு மருந்தை நேரடியாக வாய்வழியாகக் கொடுக்கமுடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொடுக்கவேண்டும். அதற்கு இந்த இன்ஃபியூஷன் டியூப் பெரிதும் உதவும்.


இதயமுடுக்கி (Pacemaker)
இதயத்துடிப்பு சீராக இல்லாதவர்களுக்கு இது பொருத்தப்படும். இதில் உள் இதயமுடுக்கி (Internal Pacemaker), வெளி இதயமுடுக்கி (External Pacemaker) என்று இரண்டு வகை இருக்கிறது. உள் இதயமுடுக்கி இதயத்துக்குள்ளே பொருத்தப்பட்டு அறுவைசிகிச்சை செய்யப்படும். வெளி இதயமுடுக்கி வெளியே இருக்கும். மின்சாரத் தூண்டலால் இதயத்துடிப்பில் மாறுதல் ஏற்படும். அந்தப் பிரச்னையை Radiofrequency Ablation மூலம் சரி செய்யலாம். இந்த முறையாலும் சரி செய்ய முடியாதவர்களுக்கு இதயமுடுக்கி பொருத்தப்படும்.

ரைல்ஸ் டியூப் (Ryles Tube)

சாப்பிட முடியாதவர்கள், எதையும் விழுங்க முடியாதவர்கள், தொண்டையில் ஏதேனும் பாதிப்புள்ளவர்கள், சுயநினைவு இல்லாதவர்களுக்கு இந்த ரைல்ஸ் டியூபை வாய்வழியாகச் செலுத்தினால் அது உணவுக்குழல் வழியாக வயிற்றுக்குள் சென்றுவிடும். உணவை எளிதில் செலுத்த இந்த வழிமுறை பின்பற்றப்படுகிறது. அதேபோல் யாராவது விஷம் குடித்துவிட்டால் அவர்களின் வாய்க்குள் இந்த டியூபைச் செருகி அதன் வழியாகத் தண்ணீரை ஊற்றி வெளியே எடுத்துவிட முடியும்.


எலெக்ட்ரோமையோகிராபி (Electromyography)
தசைகளின் செயல்பாடுகளைக் கண்டறிவதற்கு இந்த எலெக்ட்ரோமையோகிராபி உதவும். தசைகளும் நரம்புகளும் இணைந்து செயல்பட்டால்தான் நம்மால் எந்த ஒரு வேலையையும் செய்யமுடியும். ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுச் செயல்பட முடியாவிட்டால் நரம்பில் பிரச்னையா, தசைகளில் பிரச்னையா அல்லது இரண்டும் சந்திக்கும் இடங்களில் ஏதேனும் பாதிப்பா என்பதைக் கண்டறிய இந்தக் கருவி பயன்படும்.


ஹீமோடயாலிசிஸ் மெஷின் (Hemodialysis Machine)
சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு அவர்களின் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற இந்த ஹீமோடயாலிசிஸ் மெஷின் பயன்படுகிறது. ஒருமுறை சிறுநீரகம் செயலிழந்துவிட்டால் மாத்திரை, மருந்துகளின்மூலம் சரிசெய்ய முடியாது. சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தை இந்த மெஷினுக்குள் செலுத்தினால் அது, தேவையற்ற கழிவுகளை நீக்கி நல்ல ரத்தத்தை உடலுக்குள் செலுத்தும். வாரத்துக்கு, இரண்டு, மூன்று முறைகூட டயாலிசிஸ் செய்து கொள்ளலாம்.


எண்டோஸ்கோபி (Endoscopy)

வயிற்றுக்குள் என்ன பிரச்னை இருக்கிறது என்பதைக் கண்டறிய எண்டோஸ்கோபி பயன்படும். எக்ஸ்ரே, ஸ்கேன் ஆகியவற்றால் வெளிப்புறத்தில் உள்ளவற்றைத்தான் பார்க்கமுடியும். ஆனால், வயிற்றுக்கு உள்ளே, குடல், கல்லீரல் ஆகியவற்றின் உள்ளே கட்டிகள் இருக்கிறதா, புண் இருக்கிறதா என்பதைக் கண்டறிய எண்டோஸ்கோபி உதவுகிறது. உள்புற நிலையைப் புகைப்படங்களாகவும் எடுத்துக் கொடுக்கும். ஏதேனும் பிரச்னை இருந்தால் அதை இதன்மூலமாகச் சரிசெய்யவும் முடியும்.


லேப்ராஸ்கோபி (Laparoscopy)
வயிற்றுக்குள்ளே இருக்கும் உறுப்புகளில் அறுவை சிகிச்சை செய்ய ‘லேப்ராஸ்கோபி’ கருவி பயன்படும். பித்தப்பைக் கல், கர்ப்பப்பை நீர்க்கட்டி போன்றவற்றை அகற்ற லேப்ராஸ்கோபி சிகிச்சை முறை உதவும்.


எக்ஸ்ரே மெஷின் (X Ray Machine)

மருத்துவ வளர்ச்சியில் ஒரு முக்கியமான மைல் கல் எக்ஸ்ரே மெஷின். எக்ஸ்ரே கதிரியக்க முறையில் உடலின் உள்ளே ஊடுருவிச் சென்று எலும்பு, மூட்டு, நரம்பு மற்றும் வயிற்றில் உள்ள கற்கள், சிறுநீரகக் கற்கள், பித்தப்பைக் கற்கள் என உடலில் எத்தகைய பாதிப்புகள் இருந்தாலும் அவற்றைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டிவிடும். தேவையில்லாமல் எக்ஸ்ரே எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிலும் குறிப்பாகக் கர்ப்பிணிகளுக்கு முதல் இரண்டு மாதங்களுக்கும் பிறந்த குழந்தை என்றால் முதல் மூன்று மாதங்களும் எக்ஸ்ரே எடுக்கக் கூடாது.


அல்ட்ரா சவுண்டு மெஷின் (Ultrasound Machine)

கதிரியக்கம்மூலமாக இல்லாமல் கேளா ஒலிகளின் (Ultrasound) மூலம் உடலின் பாகங்களைப் படம் பிடிப்பது அல்ட்ராசவுண்டு மெஷின். கதிரியக்க முறையில் அடிக்கடி பரிசோதனை செய்தால் உடல்நலப் பிரச்னைகள் வர வாய்ப்புண்டு. ஆனால், இந்தமுறையில் எத்தனை முறை பரிசோதனை செய்தாலும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 2 – 20 khz என்பது நம்மால் கேட்க முடிந்த ஒலி அளவு. அதைவிட அதிகமான ஒலிகளை வயிற்றுக்குள் செலுத்தினால், அது எதிரொலித்துத் திரும்பும். அந்த ஒலிகளை, இமேஜ்களாக மாற்றினால் உடல் உறுப்புகளின் தன்மை அப்படியே தெரியும்.


இந்த மெஷினில்  புரோப் (Probe) என்கிற கருவி இருக்கும். எந்த இடத்தில் பரிசோதனை செய்யவேண்டுமோ அந்த இடத்தில் இந்த புரோபை வைத்தால், அது கேளா ஒலி அலைகளை அந்த இடத்துக்குள் செலுத்தும். பின்னர் எதிரொலித்துத் திரும்ப வரும் ஒலியைக் கருவிக்குள் அனுப்பும். மானிட்டரில் உறுப்புகள் தெளிவாகத் தெரியும். இதன் மூலம் வயிறு, குடல், கல்லீரல், பித்தப்பை, கணையம், மண்ணீரல், சிறுநீரகம், சிறுநீர்ப்பை ஆகிய உடலின் அனைத்துப் பாகங்களில் ஏற்படும் பிரச்னைகளையும் கண்டுபிடிக்க முடியும். கருவுற்றிருக்கும் தாய்மார்களின் வயிற்றில் உள்ள குழந்தைகளின் உடல் வளர்ச்சியைப் பார்க்கமுடியும்.சிடி ஸ்கேன் (Computed Tomography Scan)

எக்ஸ்ரே கருவியின் வளர்ந்த வடிவம் சி.டி ஸ்கேன். இதுவும் கதிரியக்கத்தின் மூலமாகவே உடலின் பாகங்களைப் படம் பிடித்துக் காட்டக் கூடியது. எக்ஸ்ரேவால் படம் பிடிக்க இயலாத பல பாகங்களையும் இதனால் படம் பிடிக்கமுடியும். தலை, மார்பு, நுரையீரல், சிறுநீரகம் என உடலின் அனைத்துப் பாகங்களையும் இதன்மூலம் படம் பிடிக்கலாம். தலையில் அடிபடுதல், எலும்பு முறிவு, பக்கவாதம், காசநோய், புற்றுநோய், நிமோனியா, சி.ஓ.பி.டி ஆகிய அனைத்துப் பிரச்னைகளையும் இதன்மூலம் துல்லியமாகக் கணிக்கலாம்.


எம்.ஆர்.ஐ ஸ்கேன் (MRI Scan)

நோய்களைக் கண்டறிய தற்போது அதிகமாகப் பயன்படுத்தப்படும் நவீனத் தொழில்நுட்பம் எம்.ஆர்.ஐ ஸ்கேன். எம்.ஆர்.ஐ என்றால் மேக்னெடிக் ரெசொனன்ஸ் இமேஜிங் (Magnetic Resonance Imaging) என்று பெயர். அதாவது கதிரியக்கத்தின் மூலமாகவும் இல்லாமல் கேளா ஒலிகளின் மூலமாகவும் இல்லாமல் காந்தப் புலங்களின் துணையுடன் உடலின் பாகங்களைக் கண்டறிவதால் இதற்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டது. நம் உடலில் ஒரு காந்தப்புலத்தை உண்டாக்கி, ரேடியோ அதிர்வலைகளின் துணையோடு உடல் உறுப்புகளைப் படம் பிடிக்கக்கூடியது.


எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், அல்ட்ராசானிக் ஸ்கேன் ஆகிய அனைத்தையும்விட மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் படம் பிடித்துக்காட்டும். இதன்மூலம் மூளை, நரம்பு மண்டலம், எலும்பு, மூட்டு, தசை என உடலின் முக்கியமான பாகங்கள் அனைத்தையும் துல்லியமாகக் காணலாம்.
இது காந்தப்புலத்தால் இயங்கக் கூடியது. அதனால் ஸ்கேன் அறைக்குள் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். கைக்கடிகாரம், மோதிரம், மொபைல்போன், ஹெட்போன், நாணயங்கள் உள்ளிட்ட எந்த உலோகப் பொருள்களையும் எடுத்துச் செல்லக் கூடாது. அதேபோல் மருத்துவர்களும் ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட எந்தப் பொருளையும் உள்ளே எடுத்துச் செல்லக் கூடாது. இதனால் பல இடங்களில் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. எனவே இந்த ஸ்கேன் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


ஏ.பி.ஜி. அனலைசர் Arterial Blood Gas (ABG) Analyzer

ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன், கார்பன்டை ஆக்ஸைடு, சோடியம் பொட்டாசியம், மக்னீசியம் பை கார்பனேட் ஆகியவற்றைக் கண்டறிய உதவக்கூடியது. இந்தக் கருவியின் மூலம் ரத்தத்தில் உள்ள பி.ஹெச் அளவைக் கண்டறியலாம்.

No comments:

Powered by Blogger.