Breaking

கல்வியே மாற்றத்தை ஏற்படுத்தும்.. ஸ்ரீதன்யா சுரேஷ் IAS..அவர்கள்


கல்வியே மாற்றத்தை ஏற்படுத்தும்..

ஸ்ரீதன்யா சுரேஷ்  IAS..

நாடு சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 73 ஆண்டுகளாகி விட்ட நிலையில், இப்போதுதான் கேரளத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் ஐஏஎஸ் தேர்வில் தேர்வு பெற்று விரைவில் ஆட்சியர் பொறுப்பை ஏற்க உள்ளார்.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி அருகே பொழுதனா பஞ்சாயத்து அம்பலக்கொல்லியிலுள்ள இடியம் வயல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதன்யா சுரேஷ் (26). இவரது
பெற்றோர் சுரேஷ், கமலா இருவரும் தினக்கூலித் தொழிலாளர்கள்.
இளம்வயதில் அரசுப்பள்ளியில் கல்வி கற்ற ஸ்ரீதன்யா கோழிக்கோடில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், காலிகட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பையும் முடித்தார்.
சிறுவயதில் இருந்தே கலெக்டர் ஆகி விட வேண்டும் என்ற கனவு இருந்த போதிலும், தன் குடும்பச்சூழல் காரணமாக படிப்பை முடித்ததும், 2016-இல் வயநாட்டில் உள்ள அரசு பழங்
குடியினர் வளர்ச்சித் திட்டப் பிரிவில் உதவியாளர் பணியில் சேர்ந்தார். அப்போது மானந்தவாடி கோட்டத்தின் சார்-ஆட்சியராகப் பணிபுரிந்த சீராம் சாம்பசிவ ராவ் மீது மக்கள் காட்டிய மரியாதையைக் கண்ட தன்யாவுக்கு தானும் கலெக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையை மீண்டும் துளிர்விடச் செய்தது.
சீரம் சாம்பசிவ ராவ் தலைமையில் தொடர்ந்து பணிபுரிந்தபோது தனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்தார் ஸ்ரீதன்யா. அவர்தான், ஐஏஎஸ் தேர்வெழுதுவதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறியதுடன், திருவனந்தபுரத்தில் உள்ள ஐஏஎஸ் பயி ற்சி மையத்தில் சேர்ந்து படிக்க உதவி புரிந்தார்.
தீவிர முயற்சி மேற்கொண்ட ஸ்ரீதன்யா 2019-ஆம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 410-ஆவது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றார்.

முசெளரியில் தனது ஐஏஎஸ் தேசிய ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்துக் கொண்ட ஸ்ரீதன்யா, விரைவில் கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயிற்சி ஆட்சியராக விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் , முன்பு சார்- ஆட்சியராக இருந்த சீராம் சாம்பசிவ ராவ் தான் தற்போது கோழிக்கோடு மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார். தற்போது அவரது தலைமையின் கீழ்தான், ஸ்ரீதன்யாவும் தனது பயிற்சி ஆட்சியர் பணியை தொடங்க இருக்கிறார்.
இவரது சொந்த ஊரான வயநாட்டின் பொழுதனா பஞ்சாயத்து, வயநாடு எம்.பி. ராகுல்காந்தியின் தொகுதியில் அமைந்துள்ளது. கடந்த மாதம் வயநாடு வந்த அந்த தொகுதியின் எம்.பி.யான ராகுல்காந்தியை, தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்தார் ஸ்ரீதன்யா.
அவரைப் பற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், "ஸ்ரீதன்யா குறித்து நாங்கள் மிகவும் பெருமையும், பெருமிதமும் கொள்கிறோம். அவரது வெற்றி பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் உத்வேகத்தைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.
பொது முடக்கம் காரணமாக மே 17-ஆம் தேதி கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயிற்சி கலெக்டராக ஸ்ரீதன்யா பணியில் சேர்ந்து இருக்கிறார்.
""வயநாடு மாவட்டம் உள்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் கணிசமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் இன்னும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. கல்வியால் மட்டுமே அவர்கள் வாழும் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். கல்வி, பொருளாதார நிலையில் அவர்கள் உயர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே லட்சியம். அதை நோக்கியே என் மகள் ஸ்ரீதன்யாவின் பயணமும் இருக்கும்'' என்கிறார் அவரது தந்தை சுரேஷ்.

No comments:

Powered by Blogger.