Breaking

கொரோனாவால் கல்வியில் 6 மாத பின்னடைவு இருக்கும் - பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்





கொரோனாவால் கல்வியில் 6 மாத பின்னடைவு இருக்கும் - பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் தேசிய தர வரிசை பட்டியல் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வருகின்றது. கோவை பாரதியார் பல்கலைக்கழகம் உயர்கல்வி பட்டியலில் கடந்த ஆண்டு பெற்று இருந்த 21-வது இடத்தினை இந்த ஆண்டும் தக்க வைத்துள்ளது. இதுதொடர்பாக இன்று நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.காளிராஜ் பிரத்யேக பேட்டியளித்தார்.

அப்போது அவர், 'உயர்கல்வி துறையில் 21 வது இடத்தை தக்கவைத்து இருந்தாலும், அகில இந்திய அளவில் பல்கலைக்கழக அளவில் 14 வது இடத்தில் இருந்து 13 வது இடத்திற்கு பாரதியார் பல்கலைக்கழகம் முன்னேறியுள்ளது என தெரிவித்தார். இதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் கூட்டு முயற்சியும் சரியான ஒருங்கிணைப்புமே காரணம் என்று தெரிவித்தார்.

தமிழக உயர்கல்வி நிறுவனங்களில் பெரிய அளவு முன்னேற்றம் ஏற்படவில்லை என சொல்ல முடியாது என கூறிய அவர், தமிழகத்தின் பல கல்வி நிறுவனங்கள் முதல் 100 க்குள் இருக்கின்றது எனவும் தெரிவித்தார். தமிழக கல்வி நிறுவனங்கள் ரேங்க் குறைந்ததற்கான காரணங்களை அந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் தேர்வு நடத்துவது குறித்து இதுவரை தமிழக அரசிடம் இருந்து தகவல் எதுவும் வரவில்லை என தெரிவித்த அவர், கொரோனா காரணமாக மாணவர்களுக்கு கல்வியில் 6 மாதம் பின்னடைவு இருக்கும் என தெரிவித்தார். இந்த நேரத்தில் மாணவர்களுக்கு மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உதவ வேண்டிய நேரம் எனவும் துணைவேந்தர் காளிராஜ் தெரிவித்தார்.


பாரதியார் பல்கலைக்கழகததில் காலத்திற்கு ஏற்ப பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகின்றது எனவும் வழக்கமான வகுப்புகளுடன் ஆன்லைன் வகுப்புகளும் இருக்கும் எனவும் தனியார் கல்லூரிகளால் ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடியவில்லை எனில் பல்கலைக்கழகமே ஆன்லைனில் பாடம் நடத்தும் எனவும் தெரிவித்தார்.கொரோனா தொற்று எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்ற எண்ணத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் எனவும் ஒரு பக்கம் முடங்கினால் வேறு பக்கம் வாய்ப்புகள் உருவாகும் என்பதை மாணவர்களிடம் கொண்டு சென்று அவர்களை தயார்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மாணவர்கள் படிக்கும் படிப்பை தவிர, வேலை வாய்ப்பிற்கான இரு சான்றிதழ் படிப்புகளையும் சேர்த்து நடத்த இருப்பதாகவும், இதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவித்தார். மேலும் பாரதியார் பல்கலைகழக வளாகத்தில் பாரதியார் திறன் மேம்பாட்டு பயற்சி மையம் விரைவில் துவங்கப்பட இருக்கின்றது எனவும், இதற்கு தேவையான இடம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த மையத்தில் கிராம புற மாணவர்களுக்கு அவர்களின் கல்வி மற்றும் உடல் தகுதிக்கு ஏற்றபடி காவல், இராணுவம், குரூப் தேர்வுகள் போன்றவற்றிக்கு தயார்படுத்தப்பட இருப்பதாகவும் கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் காளிராஜ் தெரிவித்தார்.

No comments:

Powered by Blogger.