Breaking

இணைய வகுப்புகள்: நிகழ்கால பிரச்சனைகளும் வருங்கால வாய்ப்புகளும்..

💥💥💥💥💥💥💥💥💥💥 

இணைய வகுப்புகள்: நிகழ்கால பிரச்சனைகளும் வருங்கால வாய்ப்புகளும்..

💥💥💥💥💥💥💥💥💥

ஜூன் மாதம் தொடங்கிவிட்டாலும் பள்ளிகளை தொடங்க முடியவில்லை. கரோனா அச்சுறுத்தலால் வீட்டில் முடங்கியிருக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் இணையவழி (ஆன்லைன்) வகுப்புகளை நடத்துகின்றன. இணையமும் தடையற்ற மின்சாரமும் பலருக்கு எட்டாக்கனியாக இருக்கும் சூழலில் பள்ளிகள், ஆன்லைன் வகுப்பு நடத்துவதைப் பல தரப்பினர் எதிர்த்தாலும் அரசு அவற்றுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

👉அதேநேரம் ஆன்லைன் வகுப்புகளை சாக்காக வைத்து பள்ளி திறக்கப்படும் முன்பே கல்விக் கட்டணம் வசூலிப்பதைத் தடை செய்துள்ளது. இது தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளின் சாதக பாதகங்கள், அரசு, பள்ளிகள், பெற்றோர், மாணவர்கள் இது தொடர்பாக செய்யவேண்டியவை என்ன ஆகியவற்றைப் பற்றி துறை நிபுணர்கள் விளக்குகிறார்கள்:

வழக்கமான பாடப் பகுதிகளைக் கற்பிக்கக் கூடாது

 *சுடரொளி- அரசுப் பள்ளி ஆசிரியர், குழந்தை நேயப் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்* ,


👉அரசின் திட்டமிடல் எதுவாயினும் அனைத்து குழந்தைகளுக்கானதாகவும் இருக்கவேண்டும். ஆனால் இணையவழிக் கல்வியானது பத்து சதவீதத்துக்கும் குறைவான குழந்தைகளை மட்டுமே சென்றடைய முடியும். அப்படியே இணையவழிக் வகுப்புகளை நடத்தினாலும் ஆசிரியர் நேரடியாகவோ அல்லது இணையதளம் தொலைக்காட்சி என எதன் மூலமாக கற்பித்தல் பணியைத் தொடங்கினாலும் வழக்கமான பாடப் பகுதிகளை கற்பிக்க முயற்சிக்கக் கூடாது.

👉பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு, வாழ்வியல் திறன்கள், விளையாட்டு, கலை போன்ற பொதுவாக சென்றடைய வேண்டிய திறன்களை அளிக்கலாம். தற்போது கற்பிக்கும் பள்ளிப் பாடப்பகுதியை இணையவழி கற்பித்து முடித்ததாகக் கணக்கில்கொண்டு தேர்வில் மதிப்பிடக் கூடாது. இணையதளத்தை தவறாக பயன்படுத்துதல். பெற்றோரிடம் கணினி/ஸ்மார்ட்போன் இல்லாத சூழலில் வேறு நபர்களிடமிருந்து உதவிபெறும் நிலைமையில் குழந்தைகள் தவறாக நடத்தப்படும் வாய்ப்பு, இந்த வசதிகள் இல்லாதவர்களின் மனநிலை சிக்கலுக்குள்ளாகுதல்.

👉உணவுக்கே சிக்கலாகும் குடும்ப நிலைமை புரியாமல் ஸ்மார்ட்போன் வாங்கவோ இணையதள இணைப்பு தர வேண்டும் என்றோ பெற்றோருக்கு நெருக்கடி தருதல். எல்லாவற்றையும் விட தன் குழந்தையின் படிப்பு பாழாகிவிடுமோ எனும் அச்சத்தில் கடன்வாங்கி ஸ்மார்ட்போன், இணையதள இணைப்பு வாங்கவேண்டிய நிலைக்கு பெற்றோர் நகர்தல். ஆகிய பிரச்சினைகள் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்காதவரை இணையவழி கல்வி என்பதை ஏற்க முடியாது.

கற்பித்தலுக்கு முற்றிலும் உகந்த சூழல் அல்ல

 *லட்சுமி விஜயகுமார், உளவியல் நிபுணர்* 
👉பள்ளிகள் திறக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்ட காலத்தில் மாணவர்கள் கல்வி சார்ந்து எதுவும் செய்யாமல் இருப்பது நல்லதல்ல. அந்த வகையில் இந்த இணையவழி வகுப்புகள் நடத்துவது நல்லதுதான்,. அதேநேரம் பள்ளியைப் போலவே 5-6 மணி நேரம் வகுப்பு நடத்தினால் குழந்தைகளுக்கு பார்வைக் கோளாறு உட்பட பல உடல்நலப் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. அதிகபட்சம் மூன்றுமணி நேரம் இணையவழி வகுப்பு நடத்தலாம். அதையும் போதிய இடைவெளிகள் விட்டு நடத்த வேண்டும். இணையவழி வகுப்புகளை எப்படி நடத்த வேண்டும் என்ற பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

👉வகுப்புகள் இல்லாத நேரத்தில் பொழுதுபோக்குக்காகவும் கணினி/ஸ்மார்ட்போனிலேயே மாணவர்கள் நேரம் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும். மாடிப்படிகள் ஏறி இறங்குவது. ஸ்கிப்பிங் போன்ற உடல்ரீதியான செயல்பாடுகளை ஊக்கிவிக்க வேண்டும். நூல் வாசிப்பு, பாட்டுப் பாடுதல் ஆகியவற்றையும் செய்யலாம். இன்னொரு விஷயம், இணையவழி வகுப்பு வாயிலாக பாடம் சார்ந்த அறிவை மட்டுமே புகட்ட முடியும். பள்ளிகளில் கிடைக்கும் மற்ற விஷயங்கள் இதன் மூலம் கிடைக்காது. எனவே இணையவழி வகுப்பு என்பது கற்பித்தலுக்கு முற்றிலும் உகந்த சூழல் அல்ல. இது என்றுமே பள்ளிக் கல்விக்கு மாற்றாகி விடமுடியாது. பள்ளிகள் திறக்க முடியாத சூழலில் இது ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

இணையம் கல்வி அறிவை ஜனநாயகப்படுத்தும்

 *வினோத் ஆறுமுகம் – டிஜிட்டல் சமூக ஆய்வாளர்* 
👉முதல் விஷயம் இணையமும் தடையற்ற மின்சாரமும் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. எல்லோரிடமும் ஸ்மார்ட்போனோ மடிக்கணினியோ இருப்பதில்லை. இணையம், ஸ்மார்ட்போன்/மடிக்கணினி ஆகியவற்றுக்கான பணத்தை ஒதுக்க ஓரளவு நல்ல வருமானம் இருக்க வேண்டும். கிராமப்புறங்களில் இவை எல்லாம் இருந்தாலும் அதிக நேரம் மின்வெட்டு நடக்கிறது. எனவே ஏழை, கீழ் நடுத்தரக் குடும்பங்கள், கிராமப்புறங்களைச் சேர்ந்த குழந்தைகள் இணையவழிக் கல்வியைப் பெற முடியாது.

👉இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் தகவல் தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கொண்டு சேர்க்கப் போவதாக நீண்ட காலமாக கூறிவருகிறது. அதற்கான திட்டங்களை முன்பே தொடங்கியிருந்தால் இணையவழிக் கல்வி இன்று எல்லோருக்கும் கிடைக்க வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் இப்போது பலர் இணையத்திலிருந்து வெளியில் இருக்கிறார்கள். தனியார் பள்ளிகள் மட்டும்தான் இணையவழி வகுப்புகளை நடத்துகிறார்கள். தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொடங்கிவிட்டது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்னும் தொடங்கவில்லை என்பதே ஏற்றதாழ்வு இல்லையா? தனியார் பள்ளிகளிலும் ஏழை மாணவர்கள் படிக்கிறார்கள்.

👉இந்தக் கல்வி ஆண்டில் மற்றவர்களுக்கு கிடைக்கத் தொடங்கிவிட்ட கல்வி இவர்களைச் சென்றடையவில்லையே?. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அதே நேரம் இணையவழி வகுப்புகளே கூடாது என்ற நிலைப்பாடும் தவறானது. வருங்காலத்தில் இணையம் மீதான சார்பு மென்மேலும் அதிகரிக்கப் போகிறது. எனவே குழந்தைகளை இணையவழிக் கல்விக்குப் பழக்கப்படுத்துவது நல்லதுதான். இணையவழிக் கல்வியின் மூலம் அறிவு ஜனநாயகப்படுத்தப்படுகிறது. இங்கிருக்கும் ஒரு குழந்தை உலகின் எந்த ஒரு பல்கலைக்கழகத்திலிருந்தும் கல்வி கற்க முடியும்.

👉ஆனால் அதற்கு நம்முடைய குழந்தைகளைத் தயார்படுத்த வேண்டியது நம் கடமை. கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் குழந்தையும் அமெரிக்காவில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்கான சூழலை அரசுதான் உறுதி செய்ய வேண்டும். இன்னொரு விஷயம் மாணவர்கள் இணையத்தைப் பயன்படுத்தும்போது தவறான விஷயங்களின் பால் ஈர்க்கப்பட வாய்ப்பிருக்கிறது. இதற்காகப் பயன்படுத்தப்படும் கணினி/ஸ்மார்ட்போனில் தவறான இணையதளங்கள், விளம்பரங்களைத் தடுக்கும் ஏற்பாடுகள் இருப்பதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அதற்கான பயிற்சி பெற்றோருக்கு வழங்கப்பட வேண்டும்.

💥💥💥💥💥💥💥💥💥💥💥

No comments:

Powered by Blogger.