Breaking

தமிழகத்தை அச்சுறுத்தும் இளவயது மரணங்கள்: மக்கள் கூடுதல் கவனமாக இருக்க மருத்துவர்கள் எச்சரிக்கை


😷😷😷😷😷😷😷😷😷😷😷


     தமிழகத்தை அச்சுறுத்தும் இளவயது மரணங்கள்: மக்கள் கூடுதல் கவனமாக இருக்க மருத்துவர்கள் எச்சரிக்கை

😷😷😷😷😷😷😷😷😷😷😷     கரோனா தொற்றால் வயது முதிர்ந்தோர் மற்றும் குழந்தைகளுக்குத்தான் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டது. இறப்பும் அவர்களுக்குத்தான் அதிகமாக இருக்கும் என்பதால் அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இந்த நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.


  *இதுகுறித்து மருத்துவரும், எழுத்தாளருமான சென் பாலன்* கூறியதாவது:


"முதியோர்கள், குறிப்பாக இதயக் கோளாறு, ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளோருக்குத்தான் கரோனாவால் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று அரசும், மருத்துவர்களும் தொடர்ந்து கூறி வந்தனர். மற்றவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் கூறப்பட்டது. தமிழக அரசின் சுகாதாரத்துறை தினமும் வெளியிடுகிற செய்தி அறிக்கையில், இறந்தவரின் பெயர் இருக்காதே ஒழிய, அவரது வயது, அவர் சிகிச்சை பெற்ற நாட்கள், அவருக்கு ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பிற நோய்கள் இருந்ததா என்பது போன்ற புள்ளிவிவரங்கள் இடம்பெறுகின்றன. அவற்றை ஆராய்ந்து பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் இதுவரையில் இறந்த 208 பேரில், 27 பேர் நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இதய நோய், சிறுநீரக நோய் போன்ற எந்த தொற்றா நோயும் இல்லாதவர்கள். வயதும் 20 முதல் 60-க்குள்தான். அதாவது மொத்த இறப்பில், இப்படி திடகாத்திரமான இளவயது மரணத்தின் விகிதம் 13.5 சதவீதம். அரசின் கவனத்துக்கு வராத, அல்லது கணக்கில் காட்டப்படாத இளைஞர்களையும் சேர்த்தால் இந்த சதவீதம் இன்னும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் களப்பணியில் இருக்கும் மருத்துவர்கள்.

        கோவிட் வைரஸ் வந்தால் வயதானோர் மட்டுமே இறப்பார்கள். அதிலும், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு போன்றவை இருந்தால்தான் இறப்புக்கு வாய்ப்பு அதிகம் என்கிற கூற்றை எல்லாம் இது பொய்யாக்கிவிட்டது. எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். தமிழக அரசு கரோனா ஒழிப்பு நடவடிக்கையில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டில் பாதிப்பு மிக மிக மோசமாக இருக்கும். காரணம், தென்னிந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கரோனா பாதிப்பும், மரண விகிதமும் அதிகமாக இருக்கிறது.


     தமிழ்நாட்டில் கரோனா தொற்று இன்னமும் சமூகப் பரவலாக மாறவில்லை என்று அரசு தொடர்ந்து கூறிவருகிறது. ஆனால், சென்னையில் உள்ள உறவினர்கள் யாருக்கு போன் போட்டாலும் பக்கத்து வீட்டில் வந்துவிட்டது, நம் உறவினருக்கு வந்துவிட்டது என்று பெரிய பட்டியலே போடுகிறார்கள். முன்பெல்லாம் கரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர், செவிலியர்களில் 10 பேருக்குச் சோதனை செய்தால் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு மட்டுமே பாசிட்டிவ் என்று ரிசல்ட் வரும். இப்போது 10 பேரில் எட்டுப் பேருக்கு பாசிட்டிவ் என்று ரிசல்ட் வருவதாகச் சொல்கிறார்கள்.

இதே நிலை நீடித்தால் மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினரில் பெரும்பாலானோர் அடுத்த மாதத்தில் பணிக்கு வர முடியாத சூழல் ஏற்படலாம். எனவே, பரிசோதனைகளை அதிகப்படுத்துவதுடன், நெருக்கடியான நகரங்களில் மக்களை வீட்டிற்குள்ளேயே இருக்கச் செய்வதற்கான முயற்சியில் அரசு இறங்க வேண்டும்.

     அதே நேரத்தில், விவிஐபிக்கள் சிலர், வாரந்தோறும் திரும்பத் திரும்பத் தங்களுக்கு கரோனா பரிசோதனை செய்து கொள்வதாகவும்  தகவல் வருகிறது. இது நல்ல செய்தி அல்ல. ஒட்டுமொத்தப் பரிசோதனையில் விவிஐபியின் குடும்பத்தினரே அதிக அளவில் பரிசோதனை செய்வதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. சமூகம் காக்கப்பட்டால்தான் அவர்களும் காக்கப்படுவார்கள். இல்லையென்றால் எந்த வழியிலாவது அவர்களும் பாதிக்கப்பட வாய்ப்புண்டு".No comments:

Powered by Blogger.