Breaking

கொரோனா கற்றுக் கொடுத்த சுகாதாரம்... இனி எந்த வைரஸையும் எதிர்கொள்ளலாம்!

கொரோனா கற்றுக் கொடுத்த சுகாதாரம்...

இனி எந்த வைரஸையும் எதிர்கொள்ளலாம்!

'எந்த தீமையிலும் நன்மை உண்டு' என்பதைப் போல் கொரோனா நமக்கு பல நல்ல விஷயங்களைப் பரிசளித்திருக்கிறது. சாப்பிடும் முன்பு சரியாக கைகளைக் கழுவாதவர்கள் கூட, இப்போது நாள் ஒன்றுக்கு 6 முறை கவனமுடன் கை கழுவுகிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகள் எது என்று தேடி சாப்பிடுகிறார்கள். இயற்கையோடு இயைந்த வாழ்வியல் எத்தனை மேன்மையானது என்று சிலாகிக்கிறார்கள். உடல்நலன் எல்லாவற்றையும் விட முக்கியமானது என்று மற்றவருக்கு அறிவுரை சொல்கிறார்கள். உடற்பயிற்சிகள் செய்ய விரும்புகிறார்கள்.
வீடுகளை சுத்தமாக வைத்திருக்கிறார்கள். சமூக இடைவெளி என்பது எல்லோர் மனதிலும் பதிந்துவிட்ட மந்திரமாகிவிட்டது.

இவை எல்லாமே மருத்துவர்கள் எப்போதுமே சொல்லி வரும் நல்ல அறிவுரைகள். ஆனால், அப்போதெல்லாம் கேட்டும், கேட்காமல் போனவர்கள் கூட இப்போது ஆரோக்கியம் என்பதைப் பற்றி நிறைய புரிந்துகொண்டுவிட்டார்கள். கொரோனா கற்றுக் கொடுத்திருக்கும் இந்த சுகாதாரம் நம்மிடம் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றம். இந்த சுகாதார விழிப்புணர்வு நம்மிடையே தொடர வேண்டும். அப்படி தொடர்ந்தால் கொரோனாவை நாம் விரைவிலேயே வென்றுவிடலாம். கொரோனா மட்டுமின்றி, எதிர்காலத்தில் வரக் கூடிய எந்த வைரஸையும் வெல்லலாம் என்பதில் சந்தேகமில்லை. 'சுத்தம், சுகாதாரம்' என்ற பாதையில் நம் நாட்டு மக்கள் இப்போதுதான் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது.


கொரோனா வைரஸுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளில், கை கழுவதை முக்கியமாக சொல்லிக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் இந்த விஷயத்தில் நம் நாட்டு கிராமப்புற மக்கள் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறார்கள் என்று இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு ஒன்று கவலை தெரிவிக்கிறது.
இந்திய கிராமப்புற மக்களிடத்தில் மேற்கொண்ட கைகளின் சுத்தம் பற்றிய சமீபத்திய ஆய்வின்படி, 26.3 சதவீதத்தினர் மட்டுமே தங்கள் குழந்தைக்கு உணவு ஊட்டுவதற்கு முன்பு கைகளைக் கழுவுகிறார்கள். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்குமுன்பு 14.7 சதவீதத்தினர் கைகளைக் கழுவுகிறார்கள்.

குழந்தையின் மலத்தை அப்புறப்படுத்திய பின்னர் 16.7 சதவீதத்தினரும், குழந்தைகளின் பின்புறத்தை சுத்தம் செய்வதற்காக 18.4 சதவீதத்தினரும் மட்டுமே கைளை கழுவுவதாக தரவுகள் பெறப்பட்டதாக ஆய்வு சொல்கிறது. நகர்ப்புறவாசிகளும் இந்த சுகாதார விஷயத்தில் சளைத்தவர்கள் இல்லை. பொது இடங்களிலேயே தலை சொறிவது, எச்சில் துப்புவது, சத்தமாக ஏப்பம் விடுவது என ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு பழக்கம் இருக்கிறது. இந்த நிலையில் செல்போனில் எண்களை அழுத்தும்போது இருமலும், கை கழுவுங்கள் என்ற குரலும் ஒலிப்பதைக் கேட்டு பலரும் சலித்துக் கொள்கிறோம்.

உண்மையில், நாம் எல்லோருமே 100 சதவீதம் சுயசுத்தத்தை பின்பற்றுகிறோமா என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ளும் தருணம் இது. இந்தத் தரவுகள் நம் மக்களிடையே எவ்வளவு பெரிய நடத்தை மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கிறது என்பதையே காட்டுகிறது. சாப்பிடுவதற்கு முன்பு, கழிவறை உபயோகத்திற்குப் பின்பு, வீட்டிலுள்ள பெண்கள் சமைக்க ஆரம்பிப்பதற்கு முன்பு, குடும்ப உறுப்பினர்களுக்கு உணவு பரிமாறுவதற்கு முன்பு, எங்கெங்கெல்லாம் சுத்தம் அவசியம் தேவையோ அங்கெல்லாம் கைகளைக் கழுவ வேண்டும். ஆல்கஹால் அல்லது ஆன்டிபயாடிக் கலந்த லிக்விட் சோப் சேர்த்து குழாய்த்தண்ணீரில் 20 வினாடிகள் வரை கை கழுவ வேண்டும். சாதாரண சோப் கொண்டும் கை கழுவலாம்.


பொது இடங்களில் எச்சில் துப்புவது, கர்ச்சீப் கொண்டு முகத்தை மூடாமல் பலமாகத் தும்மல், இருமல், மூக்கை, வாயை நோண்டுதல், எச்சில் தொட்டு ரூபாய் நோட்டுகளை எண்ணுதல் அல்லது புத்தகங்களை புரட்டுதல் என்று பலரை பொது வெளியில் பார்த்திருப்போம். இது மிகவும் தவறான செயல். நம்முடைய இந்த கெட்ட செயல்களால் மற்றவர்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கிறோம் என்ற சுய நினைவே இல்லாமல் செய்கிறார்கள். வெளியிலிருந்து வீட்டிற்குள் வந்தவுடன் கை, கால்களை கழுவும் பழக்கம் பலரிடம் இருப்பதில்லை. அப்படியே நேராக சோபாவிலும், பெட்டிலும் போய் உட்கார்கிறார்கள். இதுவும் தவிர்க்க வேண்டிய பழக்கம்.

இன்றைய இளைஞர்கள் பலர் லேட்டாக தூங்கி எழுந்து, குளிக்காமல், அப்படியே முந்தைய நாள் கழட்டிப்போட்ட டிரஸ்ஸையே அவசர அவசரமாக மாட்டிக்கொண்டு வேலைக்கு கிளம்புபவர்களாக இருக்கிறார்கள். இதன்மூலம் நோய்த் தொற்று பரவக்கூடும். குறைந்தபட்சம் வெயிலில் போட்டு எடுத்தாவது மறுமுறை உபயோகிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். சுத்தமான உடை அணிவது முக்கியம். தலைமுடி, பாதங்கள், கை, கால் நகங்கள் இவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை கை, கால் நகங்களை வெட்டிக் கொள்வது நல்லது. தலையை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால், வேர்க்கால்களில் அழுக்கு படிந்து பொடுகு தொல்லை வரும். இதனால் அடிக்கடி தலையை சொறிந்து கொள்வார்கள்.

வீட்டில் மற்றும் பொது இடங்களிலும் கழிப்பறை சுத்தம் கடைபிடிக்க வேண்டும். கழிப்பறைக்குள் எச்சில் துப்புவது, சரியாக தண்ணீர் ஊற்றாமல் வருவது போன்ற பழக்கங்களால் மற்றவர்களுக்கு தொற்றுநோய் பரவக்கூடும். இதை வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் சொல்லித் தர வேண்டும். நம் நாட்டில் குழந்தைகளை தெருவோரங்களிலும் மலம் கழிக்க வைக்கிறார்கள். பெரியவர்களே பொது இடங்களில் இதைச் செய்கிறார்கள். பெரியவர்களிடமிருந்துதான் குழந்தைகள்
கற்றுக்கொள்கிறார்கள். பஸ், ரயில்களில் ஜன்னலோர இருக்கைகளில் அமர்ந்து கொண்டு, கை அலம்புவது, எச்சில் துப்புவதும் மிக மோசமான பழக்கம். குப்பைகளை அதற்கான குப்பைத் தொட்டிகளில் போடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Powered by Blogger.