Breaking

கொரோனாவை கட்டுப்படுத்த பாதை காட்டுகிறார் அமெரிக்க வாழ் இந்திய சுகாதார நிபுணர் டாக்டர் ஆசிஷ் ஜா
கொரோனாவை கட்டுப்படுத்த  பாதை காட்டுகிறார் அமெரிக்க வாழ் இந்திய சுகாதார நிபுணர்

டாக்டர் ஆசிஷ் ஜா

ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் அளவு புதிய உச்சங்களை தொட்டுக்கொண்டே சென்றால், எங்கு போய் இது முடியப்போகிறது என்ற கவலைதான் வாட்டியெடுக்கிறது.அட, என்ன செய்தாலும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வரமாட்டேன் என்கிறதே, மின்னல் வேகத்தில் பரவுகிறதே, கட்டுப்படுத்த என்னதான் செய்வது?”

- இதுதான் இன்றைய தினம் ஆட்சியாளர்களின் கவலையாக இருக்கிறது. சுகாதார துறையினரின் கவலையாகவும் இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் அளவு புதிய உச்சங்களை தொட்டுக்கொண்டே சென்றால், எங்கு போய் இது முடியப்போகிறது என்ற கவலைதான் வாட்டியெடுக்கிறது.

நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் நாட்டில் 4 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு இருக்கிறது. ஒரே நாளில் 306 பேர் பலியாகி இருக்கிறார்கள். பலி எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்து 13 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.


புதிது புதிதாக தொற்றுகள் கண்டறிகிறபோது, அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு ஆஸ்பத்திரிகளில் இடம் கிடைப்பது கடினமாக இருக்கிறது. தனியார், அரசுத்துறை என எல்லா ஆஸ்பத்திரிகளும் நிரம்பி வழிகின்றன.

பயணிக்க பயன்படும் ரெயில்பெட்டிகள், கொரோனா நோயாளிகளுக்காக தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாறி வருகின்றன.

படித்து விட்டு வந்து மாணவ, மாணவிகள் தங்குகிற கல்லூரி விடுதிகள் எல்லாம் கொரோனா பராமரிப்பு சிறப்பு மையங்களாகி வருகின்றன. அடுத்து என்ன செய்வது என்பது அரசுகளின் கவலையாக இருக்கிறது.


இதையொட்டிய ஒரு பார்வையை இங்கே விரிவாக அலசுகிறார், இந்திய வம்சாவளியை சேர்ந்த பொதுச்சுகாதார நிபுணரான டாக்டர் ஆசிஷ் ஜா. இவர் அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஹார்வர்டு குளோபல் சுகாதார நிறுவனத்தின் தலைவர் ஆவார். இதோ இந்தியாவில் கொரோனா பற்றிய அவரது கவலையுடன்கூடிய பார்வை...

இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு விரைவாக உயர்ந்து வருகிறது என்பதில் இப்போது நான் கவலைப்படுகிறேன். இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மும்பை, டெல்லி, சென்னை போன்ற மாநகரங்களில் இந்த தொற்று இன்னும் பெரிய அளவில் பரவி வருவதை பார்க்க முடிகிறது.


ஆனால் எனக்கு மிகவும் கவலை தரும் அம்சம் ஒன்று உண்டு. அதிக மக்கள் தொகையை கொண்ட பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் இன்னும் கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்படவில்லை. அந்த மாநிலங்களில் அதிகளவு பாதிப்பு ஏற்படுகிறபோது, இறப்பு வீதமும் அதிகரிக்கும். இதற்கு நாம் தயாராக வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் உலகின் முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேறி இருப்பது மிகவும் கவலைதரக்கூடிய அம்சம்.

இப்போது தொடர்ச்சியாக இந்தியாவில் 6 நாட்களாக தினசரி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இனிவரும் வாரங்களில், மாதங்களில் இது இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.தற்போது உள்ள தரவுகளை காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் தொற்று பாதிப்பு உள்ளோர் இருக்கக்கூடும். ஏனென்றால், பரிசோதனைகள் இப்போதுதான் கூடுதலாகி வருகின்றன. பல காரணிகள் நடைமுறைகள் செயலுக்கு வருவதால், இந்தியாவில் கொரோனா வைரஸ் எப்போது வெளியேறும் என்பதை கணிப்பதுவும் கடினம்.

உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்றுகளை முன்கூட்டியே ‘யூயாங் கு கோவிட்-19’ மாடல் கணித்து சொல்கிறது. இது இந்தியா பற்றியும் கணித்து இருக்கிறது.

இந்தியாவில் அக்டோபர் 1-ந் தேதிக்குள் கொரோனா வைரசுக்கு 1 லட்சத்து 36 ஆயிரத்து 56 பேர் பலியாவார்கள், மொத்தம் 2 கோடியே 73 லட்சத்து 33 ஆயிரத்து 589 பேரை கொரோனா தொற்று பாதிக்கும் என்று இந்த மாடல் கணிக்கிறது.

இந்த எண்ணிக்கையெல்லாம் வெறும் கணிப்புதான். நாங்கள் அறிந்திருக்கும் விஷயம் என்ன என்று கேட்டால், நாங்கள் நம்பியபடி நோயின் பாதை இல்லை. இது நீண்ட பாதையாக இருக்கிறது. இது 12 மாதங்களோ அதற்கு கூடுதலாகவோ போராட வேண்டிய சூழலை கொண்டு வரும்.

இந்தியாவில் ஊரடங்கு போட்டதெல்லாம் சரியான நடவடிக்கைதான். ஆனால் அது நிலையானதாக இருக்காது. நாடு முழுவதும் ஊரடங்கு நடவடிக்கைக்காக மக்கள் கொடுத்த விலையையும் அங்கீகரிக்கிறேன். இது சரியான நடவடிக்கை என்றபோதும் நீடித்து நிற்கத்தக்கதல்ல. பொது முடக்கம் என்பது அவகாசம் வாங்குவதுதான். எனவே உண்மையான கேள்வி, நாம் ஊரடங்கை எவ்வாறு பயன்படுத்திக்கொண்டோம் என்பதுதான்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு, ஒரு வலுவான அடித்தளத்தை அமைப்பதற்கு இந்த கால அவகாசம் போதுமான அளவுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்பது எனக்கு தெளிவாக தெரியவில்லை. பொது முடக்கம் சரியாக பயன்படுத்தப்பட வேண்டியது கட்டாயம் ஆகும்.


தற்போது கடந்த 2 மாதங்களாக பரிசோதனை திறன் கொஞ்சம் அதிகரித்து இருக்கிறது. உலகிலேயே இந்தியாவில்தான் ஆயிரம் பேருக்கு உத்தேசமாக 4.2 பேருக்குத்தான் பரிசோதனை நடைபெறுகிறது. இது உலகின் மிகக்குறைந்த வீதங்களில் ஒன்று.

அமெரிக்காவில் ஆயிரத்துக்கு 72, இங்கிலாந்தில் ஆயிரத்துக்கு 59, ரஷியாவில் ஆயிரத்து 106 என்ற அளவுக்கு பரிசோதனைகள் நடத்தப்படுகிறது.

இப்போது ‘காண்டாக்ட் டிரேசிங்’ என்று சொல்லப்படுகிற தொடர்பு தடமறிதல் வளர்ந்திருக்கிறது. இதற்கான செயலியான ஆரோக்கிய சேது சரியான திசையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும். அதே நேரத்தில் மக்களின் தனி உரிமை பற்றி கவலைகள், இதன் செயல்திறனை பாதிக்க வாய்ப்பு இருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு என்னதான் வழி?

* ஊரடங்கை பொறுத்தமட்டில் அது நீண்ட கால உத்தி ஆகாது. அடுத்த 12 மாதங்களுக்கு கொரோனா தொற்று இருக்கும் என்பது உண்மையானால், இந்த வைரசை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதற்கான விரிவான திட்டம் இந்தியாவுக்கு தேவைப்படுகிறது.

* பரிசோதனைகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு கணிசமாக அதிகரிக்க வேண்டும். நோய்வாய்ப்படாதவர்களையும் பரிசோதிக்க வேண்டும். அதேபோன்று தொடர்பு தடமறிதலும், தனிமைப்படுத்துதலும் இத்துடன் இணைய வேண்டும். மாநிலங்களுக்கு உண்மையான ஆதரவு கிடைக்க வேண்டும். கொரோனா தொற்று அதிகரிப்புக்கு ஏற்ற வகையில் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத மாநிலங்களுக்கு உண்மையான ஆதரவு தேவை.

* கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கையை பொறுத்தமட்டில், அது முடிந்தளவுக்கு அறிவியல் மற்றும் தரவுகளின் அடிப்படையில் அமைய வேண்டும். குறிப்பாக, தொற்று பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை போன்றவற்றை கண்காணிக்க வேண்டும். பரவலான பரிசோதனை, தொடர்பு தடமறிதல் பற்றிய தரவு இல்லாமல் அரசாங்கத்தால் எதையும் செய்ய முடியாது, ஆதார அடிப்படையிலான முடிவுகளை எடுக்கவும் முடியாது.

* முறைசாரா தொழிலாளர்களை தவறாமல் சோதிப்பதற்கு, தொடர்பு தடம் அறிவதற்கு, பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்புடன் ஆதரவான நிலையில் தனிமைப்படுத்துவதற்கு நிலையான மற்றும் நாடு தழுவிய அர்பப்ணிப்பு தேவை...

- இப்படி பாதை காட்டுகிறார் டாக்டர் ஆசிஷ் ஜா.

ஆனாலும் கொரோனாவின் நீண்ட கரங்கள், ஆபத்தான கரங்களாகத்தான் தோன்றுகின்றன. அவற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்வது நமது கரங்களில்தான் இருக்கிறது என்பதை நினைவில் கொள்வோம். கொரோனாவில் இருந்து மீள்வதற்கு இது கண்டிப்பாக தேவை!

No comments:

Powered by Blogger.