Breaking

ஜூலை-26. கார்கில் வெற்றி திருநாள்; வாழ்க பாரதம்!..

ஜூலை-26, கார்கில் வெற்றி திருநாள்; வாழ்க பாரதம்!..
பல போர்களை சந்தித்து, இந்தியா வெற்றி கண்டுள்ளது. ஆனாலும், 'விஜய் திவஸ்' என்று இந்தியா முழுதும் கொண்டாடப்படும் வெற்றித் திருநாள், ஜூலை 26, கார்கில் வெற்றி நாள் தான்!இந்தியப் போர்களை மூன்று விதமாக பிரிக்கலாம். வெள்ளையர், இந்தியர் வருவதற்கு முன், நம் நாட்டளவில் மன்னர்களுக்குள் நடந்தது, முதல் வகை போர்; வெளிநாட்டவர் வந்த பின், அவர்களுக்கும், நம் மன்னர்களுக்கும் நடந்தது, இரண்டாம் வகைப் போர்; நாம் சுதந்திரம் பெற்ற பின் நடந்த போர்கள் மூன்றாம் வகை.இந்தியா சுதந்திரம் பெற்ற பின், நம்மிடமிருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தானுக்கும், நமக்கும் முதல் போர் நடந்தது. காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு இல்லை. இரு தரப்பிலும், இந்த பிரச்னை நீறு பூத்த நெருப்பாக உள்ளது.வல்லபாய் படேல், சத்தமில்லாமல் பல சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்து, ஏக இந்தியாவை உருவாக்கியது, வரலாற்றில் மாபெரும் புரட்சி.கோவா, டையூ, டாமன் ஆகிய மாநிலங்கள், 1961ல் ஒரே நாள் யுத்தத்தில் மீட்கப்பட்டன.
1962ல் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் ஒரு எல்லை போர் மூண்டது. சில வாரங்களிலேயே அந்தப்போர் முடிவுக்கு வந்து, 'மக்மோகன் கோடு' என்ற எல்லை நம்மாலும், சீனாவாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.இந்தியாவுக்கு இரட்டை வெற்றிஇந்தியா,1950 ஜனவரி,26 அன்று குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டாலும், நம்மிடம் போர் கருவிகள் முற்றிலும் இல்லாத நிலையில், வீரர்கள் தம்மைக் காத்துக் கொள்ள, போதிய கம்பளி உடை, உபகரணங்கள் கூட இல்லாத நிலையில், நடந்த போர் என்றால் மிகையில்லை. நாம், நம்மை பெரிய அளவுக்கு வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற சிந்தனையை விதைத்த போர் அது; செயல்படுத்தவும் பட்டது. இந்தியா - பாகிஸ்தான் போர், 1965 மற்றும் 1971ல் நடந்தது.


இரண்டு போரிலுமே இந்தியா தான் வெற்றி பெற்றது. பாகிஸ்தானை சரணடைய கெடு நிர்ணயித்து, வெற்றியை உறுதி செய்தார், ஜெனரல் மானெக் ஷா.வங்கதேசம் என்ற தனிநாடு, பாகிஸ்தானிலிருந்து பிரிந்து உருவாகியது. இதில், இந்தியாவுக்கு இரட்டை வெற்றி.கார்கில் என்ற இடம், இமயத்தின் மடியில் ஸ்ரீநகரிலிருந்து, லே என்ற லடாக்கின் தலைநகர் செல்லும் பாதையில், 200 கி.மீ., துாரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து, 15 ஆயிரம் அடி முதல் 20 ஆயிரம் அடியில் உள்ளதால், ஆண்டில் மூன்று மாதம் தான் கோடை மாதம்; மீதி நாள் குளிர், மழை என்பது என்னவென்று உள்ளூர்வாசிகளுக்கு தெரியாது; நாமும் பார்க்க முடியாது.

பல முறை, பனி மழை பெய்யும்.அங்குள்ள குளிரை சொல்லால், எழுத்தால் விவரிக்க முடியாது. தண்ணீர் தேவை என்றால், பனிக்கட்டியை உருக்கி தான் உபயோகிக்க வேண்டும்.பணியில் இருக்கும் போது, உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை கம்பளி சீருடை, ஓய்விலிருக்கும் போது கம்பளிகளுக்குள்ளே, 'ஸ்லீப்பீங் பேக்'கில், 24 மணி நேரமும் சூடு பரப்பிக் கொண்டிருக்கும்.மண்ணெண்ணெயில் இயங்கும், புகாரி எனும் தணல் பரப்பும் உபகரணம் இயங்கும். பங்கர் வாழ்வு, டென்ட் வாழ்வு தான், படை வீரர்களுக்கு!அங்கு, எல்லையின் இருபுறமும் காவல் பார்க்கும் வீரர்கள், குளிர் காலத்தில் பங்கர்களை அப்படியே விட்டு விட்டு, கீழே சென்று, மீண்டும் குளிர் குறையும் போது (அக்டோபர் - மார்ச் வரை), பழையபடி வந்து கடமையை மேற்கொள்வர்; இது, இரு தரப்பும் கடைப்பிடித்த எழுதப்படாத சட்டம்.'ஆப்பரேஷன் விஜய்'ஆனால், 1999ல் இந்தியப் படை கீழிறங்கி வந்த போது, வஞ்சகமான பாகிஸ்தான் படைகள் தங்கி, கொஞ்சம் கொஞ்சமாக, நம் படைகள் தங்கி இருந்த இடத்தை, நம் மண்ணை ஆக்கிரமித்து, 150 - 200 கி.மீ.,யை உருவிக் கொண்டது; அதை மீட்டெடுத்தது தான், கார்கில் போர்.உள்ளூர் மாடு மேய்ப்போர் மூலம், நம் படைக்கு தகவல் வந்தது. செய்தி கேள்விப்பட்டு, நிலைமையை கண்டறிய, ரோந்து சென்ற சில இந்திய வீரர்களை, பாகிஸ்தானியர் பிடித்து, சித்ரவதை செய்து, கொன்றனர்.


இது, தீவிரவாதிகள் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் நாம் இருந்த போது, நம் ராணுவக் கிடங்கில் பாகிஸ்தான் சுட்டதில், ஆக்கிரமிப்பு உறுதியானது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய், போர் பிரகடனப்படுத்தினார். 'ஆப்பரேஷன் விஜய்' அறிவிக்கப்பட்டது; முப்படைகளும் களத்தில் இறங்கின. கடற்படை, கராச்சி துறைமுகத்திற்கு உதவி, துருப்பு எதுவும் வராமல் பார்த்துக் கொண்டது.

பாகிஸ்தான் படை உயரமான இடத்தில் இருந்ததால், நம் நடமாட்டம் எளிதாக கவனிக்கப்பட்டு விடும் என்ற காரணத்தால், நம் படை, அங்குலம் அங்குலமாக, இரவு நேரத்தில் முன்னேறியது.எல்லைக் கட்டுப்பாடு கோட்டை, எக்காரணத்தாலும் கடக்கக் கூடாது என்ற கட்டளையோடு, கரடு முரடான கருங்கல் மலையடியில், மைனஸ் 20 டிகிரி குளிரில், நம் படை முன்னேறியது. நம் படை வீரர்கள் மனதில், உயிரா, நாடா என்ற ஒரே சிந்தனை தான்.தாய்த்திரு நாட்டை தகர்த்திடும் மிலேச்சரை மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வா? நம்பற்குறிய அவ்வீரர்கள் தங்கள் உயிரை ஈந்தும், தாய்த்திரு நாட்டின் மண்ணை காக்க முடிவு செய்தனர்.விமானப்படை மேலிருந்து குண்டு மழை பொழிந்தது. ஒரு, 'மிக் 21, மிக் 27, எம்.ஐ.18' ஹெலிகாப்டர் சேதமடைய, நான்கு வீரர்கள் இறந்தனர்; பைலட் நாசி கேதா சிறை பிடிக்கப்பட்டார்.

கடந்த, 1999 மே 3ல் துவங்கிய போர், ஜூலை 26ல், வெற்றி கொடி நாட்டியது. இந்தப் போரில், 1,860க்கு மேற்பட்டோர் காயமடைய, 527 வீரர்கள் வீர மரணத்தை சந்தித்தனர்.இந்தப் போரில், 'ஹீரோ ஆப் படாலிக்' என்று தேசமே புகழ்ந்த, திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணன் நாட்டுக்கும், தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்தார். ஒரு கட்டத்தில், அவரை திரும்ப வந்து விடும்படி, தகவல் கொடுக்கப்பட்டது.'தலைமை எதிரியை நெருங்கி விட்டேன்; வெற்றி அல்லது வீர மரணம்...' எனக் கூறி, ராக்கெட் லாஞ்சரை பயன்படுத்தி, எதிரிகளை பந்தாடி, முதல் வெற்றியை பிரகடனப்படுத்தினார்; அதைத் தொடர்ந்து, இறுதி வெற்றி தானாக வந்தது. அன்றைய பிரதமர், 'இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த இந்திய மகன்' என பாராட்டி, 'பரம்வீர் சக்ரா' என்ற மிகப்பெரிய விருதை அளித்து, கவுரவித்தார்.இந்திய நாடு பழம் பெரும் நாடு; நீரதன் புதல்வர்; இந்நினைவகற்றாதீர்!

No comments:

Powered by Blogger.