Breaking

இந்தியாவுக்கான முதல் கொரோனா தடுப்பு மருந்து- தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணா எல்லா...கடந்து வந்த பாதை..


இந்தியாவுக்கான முதல் கொரோனா தடுப்பு மருந்து- தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணா எல்லா...கடந்து வந்த பாதை..

இந்தியாவுக்கான முதல் கொரோனா தடுப்பு மருந்தை, தமிழரான கிருஷ்ணா எல்லா எனும் நபருக்கு சொந்தமான பாரத் பயோடெக் நிறுவனம், தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடித்துள்ளது.கோவாக்சின் என பெயரிடப்பட்ட அந்த மருந்து பல்வேறு கட்ட சோதனைகளை வெற்றிகரமாக கடந்து, தற்போது மனிதர்களிடையே சோதித்து பார்க்க, ஐசிஎம்ஆரின் அனுமதியை பெற்றுள்ளது. இதே நிறுவனம் தான் முன்னர் ஸிகா வைரசுக்கு முதன்முதலில் தடுப்பு மருந்து கண்டறிந்தது மற்றும் ஹெபடைட்டிஸ் நோய்க்கு உலகின் மலிவு விலையிலான மருந்தை கண்டறிந்ததும் இந்த நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு சிறப்பு மிக்க சாதனைகளைப் புரிந்த பாரத் பயோடெக் நிறுவனனத்தை நிறுவியவர் திருத்தணிக்கு அருகே உள்ள நெமிலியில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த டாக்டர் கிருஷ்ணா எல்லா என்பது தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.படிப்பை முடித்துவிட்டு குடும்பத் தொழிலான விவசாயத்தை மேற்கொள்ள நினைத்த கிருஷ்ணா எல்லா, குடும்ப வறுமை காரணமாக பேயர் எனும் கெமிக்கல் நிறுவனத்தின் விவசாயத் துறையில் பணியில் சேர்ந்தார். பின்னர் ஒரு ரோட்டரி நிறுவனத்தின் உதவித் தொகை பெற்று, அமெரிக்காவில் முதுகலை மற்றும் முனைவர் படிப்பை 1995’ல் முடித்தார்.


அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்துவிட்டு இந்தியா வர விரும்பாத கிருஷ்ணாவை அவரது தாயார் தான் வற்புத்தி இந்தியாவுக்கு வரவழைத்தார் என 2011’ல் அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.தாயின் வற்புறுத்தலால் இந்தியா வந்தவர் 1996’ம் ஆண்டு ஹைதராபாத்தில் கையிலிருந்த சிறிய உபகனங்களுடன் ஒரு ஆய்வுகூடத்தை அமைத்தார். அப்படி உருவானது தான் இந்த பாரத் பயோடெக் நிறுவனம்.மற்ற நிறுவனங்கள் ஹெபடைட்டிஸ் நோய்க்கு 30 முதல் 40 அமெரிக்க டாலர்கள் வரையில் விலை வைத்து மருந்துகளை விற்ற நிலையில், முதன் முதலாக ஒரு அமெரிக்கா டாலர் விலையில் மருந்தை அறிமுகப்படுத்தினார்.இவர்கள் கண்டுபிடித்த மருந்தை 1999’ல் அப்போதைய இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் அறிமுகப்படுத்தி வைத்து கிருஷ்ணாவுக்கு பெருமை சேர்த்தார்.பின்னர் இந்திய நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ், 10 ரூபாய்க்கு ஒரு மருந்து என்ற அடிப்படையில் 35 மில்லியன் மருந்துகளை உற்பத்தி செய்து கொடுத்தது.

இது மட்டுமல்லாமல் அன்றைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பேசி 1996’ல் ஹைதராபாத்தில் ஜீனோம் வேலி எனும் பெயரில் உயிரியல் தொழிற்பூங்கா அமைக்க வழிவகை செய்தார். பின்னர் இதை அடிப்படையாகக் கொண்டு பெங்களூர் மற்றும் புனேவில் உயிரியல் பூங்காக்கள் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக முன்னர் ரெடிப் நியூஸ்’க்கு அளித்த பேட்டியில், “இந்தியாவில் மூன்று உயிரியல் தொழில்நுட்ப பூங்காக்கள் இருந்தாலும் முதல் மூன்று இடங்களை அமெரிக்காவே பிடித்துள்ளன. இதற்கு காரணம் இந்தியா பொது பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தாதது தான். இந்திய நிபுணர்கள் அதில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.” என்று கூறினார்.தனது சேவைகளுக்காக இந்திய மற்றும் சர்வதேச அளவில் கிருஷ்ணா எல்லா பல விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு நிறுவனம், சாதாரண எளிய மனிதர்கள் அணுகக்கூடிய விதத்தில் மருந்துகளைத் தயாரித்தால், அதன் தரத்தில் குறைபாடு உள்ளதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுவது இங்கு வழக்கமாகிவிட்டது. அந்தக் குற்றச்சாட்டை நாங்களும் எதிர்கொண்டோம். ஆனால், தொழில்நுட்பம் எளிய மனிதர்களைச் சென்றடையும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். இங்கு எந்தவொரு குடிமகனும் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்காமல் தவிக்கக் கூடாது. எங்கள் நிறுவனம், அனைவருக்கும் கிடைக்கக்கூடிய மலிவு விலையில் மருந்துகளைத் தயாரிக்க முனைவதற்கும் அதுவே காரணம்” என்று 2011’ம் ஆண்டு அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மனித சோதனை முடிந்தவுடன் அடுத்த ஓராண்டுக்கு 30 கோடி மருந்துகளை உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ளதாக கிருஷ்ணா எல்லா கூறியுள்ளார். உலகளவில் 140’க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் மருந்துகள் சோதனையில் இருக்கின்றன.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மருந்துடன் இந்த பட்டியலில் இந்தியாவும் இணைய உள்ளது. அதை நிறைவேற்றிய பெருமை தமிழக விவசாயியின் மகன் கிருஷ்ணா எல்லாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தையே சாரும்.

No comments:

Powered by Blogger.