Breaking

அக்டோபர்-06. வெப்ப அயனியாக்க கோட்பாடு, கதிர்வீச்சு அழுத்தக் கோட்பாட்டை உருவாக்கிய இந்திய வானியற்பியலாளர்- -மேகநாத் சாஹா பிறந்த தினம்.

இன்று பிறந்த நாள்:- அக்டோபர்-06.

வெப்ப அயனியாக்க கோட்பாடு, கதிர்வீச்சு அழுத்தக் கோட்பாட்டை உருவாக்கிய
இந்திய வானியற்பியலாளர்-
-மேகநாத் சாஹா பிறந்த தினம்.


பிறப்பு:-

வங்காள நாட்டில் டாக்கா மாவட்டத்தில் சியோரதாலி எனும் கிராமத்தில் 1893 ஆம் ஆண்டு, அக்டோபர்-06 ஆம் நாள், ஜகநாத சாஹா,புவனேசுவரிதேவி தம்பதியினரின் மகனாகப் பிறந்தார். குடும்ப வறுமையால் இவரது அப்பா  வேலைக்கு அனுப்ப நினைத்தார். இவரது அறிவுக்கூர்மையால் கவரப்பட்ட ஆசிரியர்கள் அவரிடம் பேசி, படிப்பைத் தொடரச் செய்தனர்.
ஆரம்பக் கல்வி முடிந்ததும் சிமுலியாவில் இருக்கும் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.  
தாக்கா கல்லூரியில் வேதியியல், கணிதவியல், ஜெர்மன் மொழி கற்றார். உதவித்தொகை பெற்று பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். இவருக்கு பிரபுல்ல சந்திரரே, ஜெகதீஷ் சந்திரபோஸ் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து வழிகாட்டினார்கள். பிறகு
இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். 

பணிகள்:-

கல்கத்தா பல்கலைக்கழகத்தில் கணிதம், இயற்பியல் 
விரிவுரையாளராகப் பணியாற்றினார். 
நீர்நிலைப்பு இயல், நிறமாலை அளவியல், வெப்ப இயங்கியல் முதலிய தலைப்புகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தினார்.

ஆராய்ச்சிகள்:-

வான் இயற்பியலில் இவரது ஈடுபாடு காரணமாக, சூரிய நிறமாலையில் காணப்படும் பிரான்ஹோபர் (Fraunhofer) என்னும் கருவரிகளின் தோற்றத்துக்குக் காரணம் புரிபடாமல் இருந்த போது இதை இவர் உருவாக்கிய வெப்ப அயனியாக்கச் சமன்பாடு மூலம் தீர்வு கண்டார். விண்மீன்கள், சூரியன் ஆகியவற்றின் வெப்பநிலை, புறநிலை மாற்றங்களை அவற்றிலுள்ள தனிமங்களே தீர்மானிக்கின்றன என்பதை இவரது சமன்பாடு வெளிப்படுத்தியது. பின்னாளில், சூரியனில் பெருமளவில் ஹைட்ரஜன் வாயு உள்ளதை ஆய்வுகள் நிரூபிப்பதற்கு இந்தச் சமன்பாடு ஆதாரமாகவும் இருந்தது. மேலும்
சக விஞ்ஞானியான சத்யேந்திரநாத் போஸுடன் இணைந்து மெய்வாயுக்களின் நிலைச் சமன்பாடு (Equation of state for Real gases) என்ற ஆய்வறிக்கையையும் சாஹா வெளியிட்டார். வெப்ப அயனியாக்க கோட்பாடு, கதிர்வீச்சு அழுத்தக் கோட்பாட்டை உருவாக்கினார்.
1920-ல் சூரிய மண்டலத்தில் அயனியாக்கம் என்ற இவரது ஆய்வுக் கட்டுரை நவீன வானியலின் திறவுகோலாக அமைந்தது. கதிர்வீச்சு அழுத்தம் குறித்த ஆராய்ச்சியைப் பாராட்டி கல்கத்தா பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது. இந்திய நாள்காட்டி முறையான சக ஆண்டு குறித்து தெளிவாக விளக்கினார்.

பதவிகள்:-

F.R.S. -1927 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெர்மனி, இங்கிலாந்து, லாகூர் போன்ற பல இடங்களுக்கு அறிவியல் பயணம் மேற்கொண்டார்.
கல்கத்தாவில்,
1948 இல் இவர், ஆராய்ச்சி நிறுவனத்தைத்  தொடங்கினார். அது இன்று அணுக்கரு இயற்பியலுக்கான சாஹா நிறுவனமாக (Saha Institute of Nuclear Physics) உள்ளது. மேலும்
இலண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக 1951 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 

நூல்கள்:-

ஜன்ஸ்டின் பொது சார்பியல் கோட்பாட்டின் நிரூபனத்தை, ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
மின்காந்த கோட்பாடுகள் மீதான ஆய்வு முடிவுகள், மேக்ஸ்வெல் தகைவுகள் என்னும் கட்டுரையை 1917 ஆம் ஆண்டு ஃபிலாசிபிகல் மேகசின்’ என்ற அறிவியல் இதழில் வெளியிட்டார்.
ஜனநாயகத்தில் மக்களின் பங்கேற்பு இன்றியமையாதது என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த இவர், அறிவியலும் கலாசாரமும் என்ற பத்திரிகையையும் நடத்தினார். 

மறைவு:-

விஞ்ஞானி, விடுதலை வீரர், கல்வியாளர், இதழாளர், நாடாளுமன்றவாதி, பொருளாதார நிபுணர், சீர்திருத்தவாதி எனப் பல முகங்களைக் கொண்ட இவர், பிப்ரவரி-16,1956 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

சிறப்புகள்:-

அலகாபாத் தேசிய அறிவியல் கழகத்தின் முதல் தலைவராகவும், தேசிய அறிவியல் நிறுவனத்தின் இரண்டாவது தலைவராகவும் விளங்கினார்..

No comments:

Powered by Blogger.