நம் பெற்றோர்களை நம் கண் இமைபோல் காப்பது ஒவ்வொருவரின் கடமை...!. இன்றைய சிந்தனை (21.10.2020)
பெற்றோர்கள் நம்மை பெற்று, வளர்த்து, ஆளாக்கியவர்கள்...
நாம் பசியார வேண்டும் என்பதற்காக அவர்கள் பட்டினியிருந்தார்கள்...
நாம் நல்ல உடை உடுத்த வேண்டும் என்பதற்hக அவர்கள் கந்தையை அணிந்தார்கள்...
நாம் உறங்க வேண்டும் என்பதற்காக அவர்கள் விழித்திருந்தார்கள்...
இந்த அன்புக்கு ஈடு இணை கிடையாது...
இன்றைக்கு நாம் இன்று நல்ல நிலைமைக்கு வந்ததற்கு நம் பெற்றோர்கள் நம்மை நன்கு பராமரித்துத் தந்ததால் தானே...?!
நாம் இந்த பூமியில் வந்த நாளில் இருந்து நமக்காக உணவை தேடிக் கொள்ளக்கூட நம்மிடம் எந்தத் திறனும் இல்லை...
முற்றிலும் கையாலாகாமல் கிடந்த நம்மை, நம் அம்மா எடுத்து மார்போடு அணைத்துப் பாலூட்டவில்லை என்றால், நாம் இந்நேரம் என்னவாகி இருப்போம்...?
உணவு மட்டும் அல்ல, மொத்த உலகமே நமக்கு அவள் தானே...! .உலகம் தோன்றிய நாளில் இருந்து இதுநாள் வரை யாரவது கடவுளைக் கண்டதுண்டா...?
ஆனால்!, நமது கற்பனையில் எண்ணும் அந்த கடவுள் தன்மைக்கு நெருக்கமாக நாம் அனைவரும் உணர்ந்த, உலகில் ஒரேயொருவர் நம் தாய்தானே...!
அவர்களால்தான் நாம் என்ற எண்ணம் நம் மனதில் என்றும் நிலைத்திருக்க வேண்டும்...
தாயும், தந்தையும் தான் நம்மை இத்தரணியைக் காண செய்தவர்கள். அவர்களே நம் முதல் வாழ்வின் வழிகாட்டிகள்...
பெற்றோர் தம் குழந்தைகளை சிறுவயது முதல் பெரியவனாகும் வரை தங்களின் அரவணைப்பில் வளர்த்து ஆளாக்கின்றனர்...
பேச கற்றுத் தருகின்றனர். நடக்கக் கற்றுத் தருகின்றனர். அனைத்துக்கும் மேலான கேடில் விழுச்செல்வமான கல்வியை கற்பதற்கு வழிவகை செய்கின்றனர்...
"அறிவே ஆற்றல்" என்பதை உணர்த்துகின்றனர். பள்ளிப் படிப்போடு நிறுத்தி விடாமல் மேற்படிப்பை நாம் பயில அவர்கள் கண் அயராமல் உழைக்கின்றார்கள்..
ஒழுக்கம் விழுப்பம் தரும் என்பது உலகோர் வாக்கு. ஆம்!, பெற்றோர்கள் உயிரினும் மேலான ஒழுக்கத்தை நமக்கு போதிக்கின்றனர்...
பின்னர் வேலை வாய்ப்பு, நல்ல வாழ்க்கைத் துணை ஆகியவற்றை அமைத்து நம்மை நிம்மதியாகயும், மகிழ்வுடன் வாழ வைத்து நம் வாழ்வில் ஏணியாக இருக்கின்றனர்...
மொத்தத்தில் நமக்கு முதல் ஆசான் அன்னை, தந்தையே என்பதில் அய்யம் இல்லை.இதற்கான நன்றி கடனை பெற்றோருக்கு செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவர் கடமை...
ஆனால்!, இன்றைய இளைஞர்களோ வாழ்வில் நல்ல நிலையை எய்தியவுடன் ஏற்றி விட்ட ஏணியை எட்டி தட்டி விடுகின்றனர். அது மட்டுமின்றி பெற்றோர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளாத பிள்ளைகளாக வாழ்ந்து வருபவர்களும் உண்டு...
நாகரீகம் எனும் பெயரில் பெற்றோரை உதாசீனப்படுத்துகின்றனர். நாளை தன் குழந்தைகளால் தனக்கும் இந்நிலைதான் என்பதை உணராமல் இருக்கிறார்கள்...
*ஆம் நண்பர்களே...!*
*நமக்கு நடக்க கற்றுக் கொடுத்த பெற்றோர்கள், அவர்கள் வயதான காலத்தில், ஒரு கௌரவமான வாழ்க்கை வாழ எல்லா முயற்சிகளையும் செய்யவேண்டியது நமது பொறுப்பும், கடமையுமாகும். இதை மறந்த எந்த மனிதரும் திருந்தியதாக வரலாறு இல்லை...!*
*பெற்றோர் நம் வாழ்வின் மாபெரும் கொடை. அவர்கள் இல்லை எனில் இம் மண்ணிலே நாம் ஒரு மனிதன் இல்லை என அறிவோம்...!!*
*வெய்யிலை எண்ணிப் பாருங்கள். மரத்தின் அருமை தெரியும்...!*
*அனாதைகளை எண்ணிப் பாருங்கள், பெற்றோர்களின் அருமை தெரியும்...!!*
_*பெற்றோரை பேணுவோம்...! பேறுகள் பல பெறுவோம்...!!*_
நம் பெற்றோர்களை நம் கண் இமைபோல் காப்பது ஒவ்வொருவரின் கடமை...!
🌹🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹
No comments: