Breaking

புதுச்சேரி விடுதலை வரலாறு...

புதுச்சேரி விடுதலை வரலாறு.!!

இந்தியாவுக்கு 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி ஆங்கிலேயர் விடுதலை அளித்தபோது பிரஞ்சியர் வசமிருந்த புதுச்சேரி, மாகே, காரைக்கால், ஏனம் மற்றும் சந்திரநாகூர் ஆகிய பகுதிகளுக்கு விடுதலை கிடைக்கவில்லை. இதனால் இந்திய விடுதலைக்கு பிறகு, புதுச்சேரியில் பிரெஞ்சியருக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாகின.

ஆனால் இந்தியாவில் இருந்து வெளியேற பிரெஞ்சியருக்கு துளிகூட விருப்பமில்லை. 1948-ம் ஆண்டு அக்டோபரில் வழக்கம்போல் பஞ்சாயத்து தேர்தலை பிரான்ஸ் நடத்தியது. இதற்கிடையே சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு பிரெஞ்சு ஆதிக்கத்தில் உள்ள மக்களின் விருப்பத்துக்கு ஏற்பவே இந்தியாவுடன் அந்த பகுதிகளை இணைப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என்றார். அந்த அறிவிப்பை தொடர்ந்து இந்தியாவுடன் முதலில் இணைந்தது பிரெஞ்சு பகுதியான சந்திர நாகூர். மேற்கு வங்காளத்தில் மாநகராட்சியாக உள்ள அந்த நகரம் 1951-ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தது.

அதன்பிறகு, புதுச்சேரி மற்றும் கரைக்கால் பகுதிகளில் வலுப்பெற்ற விடுதலை போராட்டத்தை அடக்க பல வழிகளிலும் பிரான்ஸ் அரசு தீவிரம் காட்டியது. எனவே தனது ஆளுகையில் இருந்த வெளி நாடுகளில் இருந்து ராணுவத்தை பிரான்ஸ் வரவழைத்தது. இதற்கு பதிலடியாக சுதந்திர இந்தியாவும் தனது கெடுபிடிகளை கடுமையாக்கியதோடு புதுச்சேரியை சுற்றி சுங்கச்சாவடி அமைத்து அத்தியாவசிய பொருள் செல்ல கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. அந்த சமயத்தில் புதுச்சேரியில் இருந்து காரைக்கால் செல்வதற்கு கூட தனியாக பாஸ்போர்ட் முறை அமலில் இருந்திருக்கிறது.

இவ்வளவு கெடுபிடிகளுக்கு பிறகு புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிகளிடம் வாக்கெடுப்பு நடத்தி புதுச்சேரியை இந்தியாவுடன் இணைப்பது குறித்து முடிவு எடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை செய்தவர் அப்போதைய இந்திய அரசின் பிரதிநிதியாக இருந்த கேவல்சிங் என்பவர். அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள கீழுர் என்ற இடத்தை வாக்குப்பதிவு மையமாக தேர்வு செய்தனர். 1954-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி நடைபெற்ற அந்த தேர்தலில் இந்தியாவுடன் புதுச்சேரி இணைவதற்கு 170 பேர் ஆதரவு தெரிவித்தனர். 8 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர்.

புதுச்சேரியின் வரலாற்றை மாற்றி எழுதிய அந்த வாக்குபதிவை நினைவுகூரும் வகையில் கீழுர் பகுதியில் நினைவிடம் உள்ளது. அந்த தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர்களும் அங்கு பொறிக்கப்பட்டுள்ளன. 

கீழுர் வாக்கெடுப்பு முடிவுப்படி புதுச்சேரி உள்ளிட்ட பிரெஞ்சு ஆதிக்க பகுதிகளுக்கு விடுதலை அளிக்கும் விடுதலை மாற்ற ஒப்பந்தம் (De facto transfer) 1954 ஆம் ஆண்டு நவம்பர் - 01 ஆம் நாள் டெல்லியில் கையெழுத்தானது.

வரலாற்று சிறப்பு மிக்க புதுச்சேரியின் விடுதலைக்கான அந்த ஒப்பந்தத்தில் பிரெஞ்சு அரசாங்கத்தின் சார்பில் திரு.பியர்லாந்தியும்,
இந்திய அரசின் சார்பில் திரு.கேவல்சிங்கும்,
புதுச்சேரி மக்கள் பிரதிநிதியாக மண்ணின் மைந்தர் செவாலியர். திரு. செல்லான் நாயகர் அவர்களும் கையொப்பமிட்டனர். ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே புதுச்சேரிக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை.

பிரெஞ்சு அரசால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள், பிரெஞ்சு சட்டங்கள் மற்றும் இந்தியாவில் இருந்து பிரெஞ்சு மொழி ஆவணங்களை மொழி
பெயர்ப்பது என பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண பிரான்ஸ் அரசாங்கம் அவகாசம் கேட்டது. இதனால் 2 ஆண்டுகள் கழித்து 1956-ம் ஆண்டு மே மாதத்தில் அதிகாரத்தை மாற்றும் (De facto transfer) ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்துக்கு 1962 ம் ஆண்டு மே மாதம் பிரான்ஸ் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அதன்பிறகு 1962ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி அன்று இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே ஆட்சி பரப்பு அதிகாரத்தை மாற்றும் ஒப்பந்தம் (De facto transfer) அமலுக்கு வந்தது. ஏற்கெனவே மாகே, ஏனாம் பிராந்தியங்களும் இந்தியாவுடன் இணைய தனித்தனியாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தன. எனவே அந்த பகுதிகளையும் உள்ளடக்கி புதுச்சேரி யூனியன் பிரேதேசத்தை இந்தியா உருவாக்கியது.

இதனால் ஆகஸ்ட் 16-ம் தேதியை அதிகாரம் மாற்ற தினம் (De facto transfer day) என ஆண்டுதோறும் புதுச்சேரி அரசு கொண்டாடி
வருகிறது. ஆனால் 1954-ம் ஆண்டு நடைபெற்ற கீழுர் வாக்கெடுப்பு முடிந்ததுமே நவம்பர் 1-ம் தேதி அன்று விடுதலை மாற்ற ஒப்பந்தம் (De facto transfer) கையெழுத்தாகி விட்டதால் அந்த தினத்தையே புதுச்சேரி விடுதலை தினமாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே புதுச்சேரியில் ஒலித்து வந்தது. இந்நிலையில் அந்த கோரிக்கையை மேனாள் புதுவை முதல்வர் ந.ரங்கசாமி ஏற்றுக்கொண்டு, நவம்பர் 1-ம் தேதியை விடுதலை நாளாக கொண்டாடுவதோடு அரசு விடுமுறை விடப்படும் என்று கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவித்தார். 

அதன்படி ஆண்டு தோறும் நவம்பர் - 01 ஆம் நாள் புதுச்சேரி விடுதலை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

No comments:

Powered by Blogger.