Breaking

நாகரீகத்தின் தொட்டில் எறும்புகளை பற்றிய அறிய தகவல்கள்....


நாகரீகத்தின் தொட்டில்
எறும்புகளை பற்றிய அறிய தகவல்கள்....


விலங்குகள் சாம்ராஜ்யத்தில் புத்திசாலித்தனத்தைப் பற்றிய பேச்செடுத்தாலே நம் பட்டியலில் முக்கியமாக இடம்பிடிப்பவை குரங்குகளும் மனிதக் குரங்குகளும்தான். ஆனால், அவற்றையும் தாண்டிய அறிவார்ந்த, சமுதாய மனப்பான்மையுடைய உயிரினம் இருக்கிறதென்றால் அவை எறும்புகள்தான். எறும்புகளின் கூட்டுச் சமுதாய வாழ்க்கைமுறை மனித நாகரிகங்களை ஒத்த சிறப்புடையவை. அவற்றின் வாழ்வியல் புத்திசாலித்தனத்தைத் தாண்டிய ஆழமான பல பண்புகளைக் கொண்டது. உலகில் இதுவரை தோன்றிய உயிரினங்களிலேயே மனித இனம் மட்டுமே கால்நடைகளை வளர்க்கவும், விவசாயம் செய்யவும் கற்றுக்கொண்ட நாகரிகமடைந்த உயிரினமென்று கூறி நமக்கு நாமே பெருமையடித்துக் கொண்டிருக்கிறோம். அது உண்மையில்லை. மனிதனைவிடப் பல மடங்கு சிறப்பான விவசாயத்தை, சிறப்பான நகரங்களைக் கட்டமைக்கும் திறனுடைய ஓர் உயிரினம்தான் எறும்பு.

எறும்புகளின் சாம்ராஜ்யங்கள் மனித ஆராய்ச்சியாளர்களின் பார்வைக்கு முழுமையாக வருவதற்குப் பல வருடங்கள் தேவைப்பட்டன. அப்படிப்பட்ட ஆய்வுப் பயணங்களில் ஈடுபட்டவர்கள் அவற்றின் அறிவாற்றலைக் கண்டு வியக்கவோ அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவோ தயங்கவில்லை.  

எறும்புகள் உணவு சேகரிக்கும், தற்காப்புத் தாக்குதல் நடத்தும், தன் கூட்டத்தைச் சேர்ந்தவர்களைத் தொடர்புகொள்ள வேதிம சமிக்ஞைகளை செய்யும், சில சமயங்களில் அந்த வேதிமங்களை வெளிப்படுத்தியே எதிரிகளைத் தாக்கவும் செய்யும். ஒளி மற்றும் ஒலியைப் பயன்படுத்திப் பெருவாரியான எறும்புக் கூட்டங்கள் தகவல் பரிமாற்றம் செய்கின்றன. மதச் சடங்குகள், அரசியல் சித்தாந்தங்கள், இசை போன்றவற்றின் மூலம் நாம் வெகுஜன மக்களை எப்படி நெருங்குகிறோமோ அதைப்போலவே ஆய்வாளர்கள் இவற்றின் இத்தகைய தொடர்பு யுக்திகளைப் பார்க்கிறார்கள். உயிரியலாளர் லூவிஸ் தாமஸ் எறும்புகளை, "அவை மனிதர்களுக்குச் சமமான, மனிதர்களைவிட அறிவாற்றல் மிகுந்த ஆனால், நம்மைப்போல் மற்ற உயிரினங்களுக்குச் சங்கடம் விளைவிக்காத உயிரினம்" என்று கூறுகிறார்.

எறும்புகள் பூஞ்சை விவசாயம் செய்கின்றன. அதோடு கால்நடைகளும் வளர்க்கின்றன. அஃபிட்ஸ் (Aphids) எனப்படும் தாவரங்களிலிருந்து ஊட்டச்சத்துகளை உறிஞ்சியெடுக்கும் பூச்சியினத்தைக் கால்நடைகளாக வளர்க்கின்றன. அஃபிட்ஸ் என்ற எறும்புகளைவிடச் சிறிய பூச்சியினங்கள் தாவரங்களிலிருந்து ஊட்டச்சத்துகளை உறிஞ்சியெடுத்துக்கொண்டு தன் உணவுக்குழாயில் தேன்மெழுகு போன்ற திரவத்தைச் சுரக்கின்றன. இந்தத் தேன்மெழுகு எறும்புகளுக்கு மிகவும் ஆரோக்கியமான புரதச்சத்து மிகுந்த உணவு. அஃபிட்ஸ்களை வளர்த்து, தம் உணர்கொம்புகள் மூலம் அதன் உணவுக்குழாயிலிருந்து அந்தத் தேன்மெழுகை எடுத்து உணவாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. நாம் புரதச்சத்துக்காக பால் பொருட்களைப் பயன்படுத்துவதைப் போலவே இவை இந்தத் தேன்மெழுகைப் பயன்படுத்துகின்றன. இவற்றோடு நிற்கவில்லை. எறும்புகள், படை திரட்டிப் போர் புரிகின்றன. தம் கூட்டத்தை எச்சரிக்கவும், எதிரிகளைக் குழப்பவும் வேதிமங்களைத் தெளிக்கின்றன. வேதிமப் போர்முறைகளையும் சில சமயங்களில் கையாளுகின்றன. அடிமைகளைப் பிடித்துவந்து வேலைசெய்ய வைக்கின்றன, குழந்தைத் தொழிலாளிகளைப் பணியமர்த்துகின்றன, ஆச்சர்யப்படும் விதத்திலான தகவல் தொடர்பு முறைகளைக் கையாளுகின்றன. மனிதர்கள் செய்யும் அத்தனையையும் எறும்புகள் பல லட்சம் ஆண்டுகளாகச் செய்துவருகின்றன, ஒன்றைத் தவிர. எறும்புகள் நுகர்வுக் கலாசாரத்திற்கு அடிமையாகவில்லை. அது தற்சார்புப் பொருளாதாரம். அதோடு இன்னொன்றையும் எறும்புகள் செய்வதில்லை. எறும்புகள் சினிமா பார்ப்பதில்லை.

கலாசார ரீதியாகத் தம் வாழ்வியலை அடுத்த தலைமுறைக்குப் பகிர்ந்து செல்லும் மனிதர்களைப்போல் இல்லாமல், மரபணுக்கள் மூலமாகவே அவற்றுக்கு இந்த வாழ்வியல் முறைகள் கடத்தப்படுகின்றன. மனித இனத்தில் அப்படியில்லை, அடிப்படையான சில உள்ளுணர்வுகள் மட்டுமே மரபணு வழியாக வருகின்றன. மற்றவை கலாசாரங்களின் வழியாகக் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. அதுதான் எறும்புகளிடமிருந்து நம்மைப் பிரித்துக் காட்டுகிறது. அவை நம்மைப்போல் நெருப்பைக் கட்டுப்படுத்தக் கற்கவில்லை. நம்மைப்போல் மற்ற அசம்பாவிதங்களையும் அவை நிகழ்த்தவில்லை. எறும்புகளின் பூஞ்சை விவசாயமும் அஃபிட் (Aphid) கால்நடை வளர்ப்பும் நம் விவசாய, கால்நடை வளர்ப்புகளைவிட அதிநுட்பமானதாக இருக்கிறது. மனிதர்கள் விவசாயம் செய்யத்தொடங்கிச் சுமார் ஐயாயிரம் வருடங்களே ஆகின்றன. ஆனால், எறும்புகளின் விவசாயம் பல லட்சக்கணக்கான ஆண்டுகள் பழைமையானது. ஐயாயிரம் ஆண்டுகளிலேயே நாம் பல நவீன முறைகளுக்கு மாறியிருக்கிறோம். பல லட்சக்கணக்கான ஆண்டுகளாகச் செய்துவரும் விவசாயம் அதிநுட்பமானதாக இருப்பதில் ஆச்சர்யமில்லை.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக விவசாயம் செய்துகொண்டிருக்கும் அவை, சூழலுக்கு எந்தவிதக் கேடும் விளைவிக்காமலே இன்னமும் அதைச் செய்கின்றன. சமீபத்திய ஆய்வுகள் எறும்புகளின் விவசாயம் நுட்பமானதென்று கூறுகின்றன. அவற்றின் விவசாய முறை நவீனமயமாக்கிக் கொண்டேயிருப்பதோடு சுற்றுச்சூழலோடு இயைந்து தகவமைத்து கொள்ளும் விதத்திலும் இருப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் நாம்? நம்முடைய நவீன விவசாய முறைகள்?

எறும்புகள் பல மில்லியன் ஆண்டுகளாக விவசாயிகள். மனிதர்கள் சில ஆயிரம் வருடங்களாகத்தானே. அது சரி, அவை ஏன் பூஞ்சைகளை அறுவடை செய்கின்றன? இலைகளில் அடங்கியிருக்கும் செலுலோஸ் (Cellulose) என்ற தாதுப்பொருள் எறும்புகளுக்குச் செரிமானம் ஆகாது. ஆனால், சில பூஞ்சை வகைகளால் அதைச் செய்யமுடியும். அதனால், தம் காலனிகளில் அந்தப் பூஞ்சைகளை வளர்க்கின்றன. எறும்புகள் கூட்டம் கூட்டமாக உணவுதேடிச் செல்லும்போது இலைகளை, சின்னச் சின்ன மரத்துண்டுகளைத் தூக்கிச் செல்வதைப் பார்த்திருப்போம். அதெல்லாமே அவை வளர்க்கும் பூஞ்சைகளுக்கும் கால்நடைகளுக்கும் உணவளிக்கத் தான். அந்தப் பூஞ்சைகள் இலைதழைகளைச் சாப்பிட்டு வளரும். அப்படி வளரும் பூஞ்சைகளை எறும்புகள் உணவாக்கிக் கொள்கின்றன. இந்தப் பூஞ்சைகளை அழிக்கவும் பூச்சிகள் உள்ளன. சில பூச்சிக்கொல்லி வேதிமங்கள் உழைப்பாளர் எறும்புகளிடம் சுரக்கும். அவற்றை அந்தப் பூச்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்துகின்றன. அதோடு அவற்றின் கழிவுகளைப் பயிர்களுக்கு உரமாக்குகின்றன. 

ஆரம்பத்தில், அவை ஒரேவகையான பூஞ்சையை மட்டும்தான் விளைவிப்பதாக நம்பப்பட்டது. மேரிலாந்தைச் சேர்ந்த உல்ரிச் முல்லர் என்ற ஆய்வாளர் தனது பல வருட ஆய்வின் முடிவில், எறும்புகள் 862 வகையான பூஞ்சைகளை விவசாயம் செய்வதைக் கண்டுபிடித்துள்ளார். இதன்மூலம் அவை தொடர்ச்சியாகப் புதிய புதிய வகைகளை விவசாயம் செய்யப் பழகிக் கொண்டிருப்பது தெரியவந்தது. ஆச்சர்யங்கள் இதோடு நின்றுவிடவில்லை. எறும்புக் காலனிகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பூஞ்சைகளை மரபணுப் பரிசோதனைகளுக்கு உட்படுத்திப் பார்த்திருக்கிறார்கள். எறும்புகள் தம் பக்கத்துக் காலனிகளோடு தாம் விளைவிக்கும் பூஞ்சைகளைப் பரிமாற்றம் செய்துகொள்வதன் மூலமாகவும் கலப்பினங்களை உருவாக்க முயல்வதன் வழியாகவும் தாங்கள் வளர்க்கும் பூஞ்சைகளின் தரத்தை மேம்படுத்தவும் முயற்சிகள் எடுக்கின்றன.

வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு நகர வாழ்வு என்பதே தெரியாது. ஆனால், எறும்புகள் பல மில்லியன் ஆண்டுகளாக நகரக் கட்டமைப்புகளில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. பல்லடுக்கு அறைகள், சுரங்கப் பாதைகள் என்று அபரிமிதமான நகரக் கட்டமைப்புகளோடு தொடர்ச்சியாகத் தம்மை மேம்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. சென்னை, மும்பை, மெக்சிகோ, டோக்யோ, லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களைக் கண்டு மனிதர்களின் வளர்ச்சியை மார்தட்டிக் கொள்கிறோம். ஹோல்டாப்லர் (Hoelldobler), வில்சன் (Wilson) என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் ஓர் எறும்பினத்தைப் பற்றிய சுவாரஸ்யமானதொரு தகவலைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஃபார்மிகா எஸ்ஸென்சிஸ் (Formica Yessensis) என்ற எறும்பினம் ஆசியா, ஜப்பான் போன்ற பகுதிகளில் வாழ்கின்றது. அவர்கள் ஜப்பானின் ஹொக்காய்டோ (Hokaido) என்ற தீவிலிருக்கும் இஷிகாரி (Ishikari) கடற்கரையில் அதை ஆய்வு செய்தார்கள். அப்போது, மூன்றரை கோடிக்கும் அதிகமான உழைப்பாளி எறும்புகளையும் லட்சக்கணக்கான ராணி எறும்புகளையும் கொண்டதோர் எறும்புக் காலனியைக் கண்டுபிடித்தனர். அது 4,500 குட்டிக் காலனிகளோடு தொடர்புடைய உள்ளுக்குள்ளேயே ஒன்றொக்கொன்று சென்று வருவதற்கேற்ற பாதைகளோடு அமைக்கப்பட்டிருந்தன. இந்த எறும்பு நகரத்தின் மொத்த பரப்பளவு 2.7 சதுர கிலோமீட்டர்கள். இத்தகைய நிரந்தரமான தெளிவான நுட்பமான கட்டமைப்புகளை நம் மூதாதையர்கள்கூடச் செய்திருக்க மாட்டார்கள். 

ஆக்ஸ்போர்டு (Oxford), சஸ்ஸெக்ஸ் (Sussex), ஸூரிச் (Zurich) ஆகிய பல்கலைக்கழகங்கள் பாலைவன எறும்புகளில் செய்த சில ஆய்வுகள் அவற்றின் தகவல் பரிமாற்றத்திலிருக்கும் சுவாரஸ்யங்களைக் கட்டவிழ்த்தன. பாலைவன எறும்பினங்களில் இரைதேடிச் செல்லும் எறும்புக்கூட்டம் தாம் பயணிக்கும் பாதைகளையும் திசைகளையும் தொடர்ச்சியாகத் தம் மூளையில் பதிவேற்றிக் கொண்டேயிருக்கின்றன. அவை, பார்வைக்குப் புலப்படுகிற நிலவியல் அடையாளங்களை மூளையில் குறித்துக் கொள்கின்றன. கட்டமைப்புகளைக் கண்காணிப்பதன் மூலம் தங்கள் திசையுணரும் திறனை மேம்படுத்திக் கொள்ளத் தொடர்ந்து முயல்கின்றன. ஆம், மனிதர்கள் மட்டுமில்லை, எறும்புகளும் கற்றல் மற்றும் கற்பித்தலைச் செய்கின்றன. "உன்னை எறும்பு மாதிரி நசுக்கிடுவேன்" என்று எந்த உயிரினத்தைப் பிறரைத் தாழ்த்திப் பேசவதற்கான உதாரணமாக நாம் கையிலெடுக்கிறோமோ அதன் வாழ்வியல் நம்மைவிடப் பன்மடங்கு நுட்பமானதாக நாகரிகமானதாக இருக்கிறது.

நாம் நம் வீடுகளில், சமையலறைகளில் எறும்புக்கொல்லி மருந்துகளைத் தூவி வைக்கிறோம். எறும்புகள் வருவதைப் பிரச்னையாக நினைக்கிறோம். அதைவிட்டுவிட்டு அவற்றைச் சில நிமிடங்கள் கூர்ந்து கவனித்துப் பாருங்கள், இயற்கையை அழிக்காமலே நகரத்தைக் கட்டவும், விவசாயம் செய்யவும், நீடித்த நிலையான வாழ்வியலை மேற்கொள்ளவும் அந்த எறும்புகள் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கும்.

இனி உங்கள் சமையலறைகளில் நடக்கும்போது எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியிலும் கவனமாக இருங்கள். ஏனென்றால், அங்கு உலகின் தலைசிறந்த நாகரிகத்தைக் கொண்டதோர் உயிரினம் சென்றுகொண்டிருக்கலாம்.

No comments:

Powered by Blogger.