காலில் விழலாமா..?? புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்
காலில் விழலாமா..?? புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனுக்கு, திருச்சியில் மணிவிழா நடந்தது.
அந்த மேடையில் அமர்ந்து இருந்தவருக்கு, மகாகவி பாரதியின் மனைவி செல்லம்மாள், திருச்சி வந்து இருப்பதாக, ஒரு தகவல் வந்தது. உடனே, அவர் தங்கிருந்த வீட்டிற்கு நண்பருடன் சென்றார்.
பாவேந்தரை, அடையாளம் காண முடியாமல், முதலில் திணறினார் செல்லம்மாள். பின், ‘அடடே… பாரதிதாசனா… நல்லா இருக்கிறாயா…’ என, விசாரித்தபடி, ‘உன் முரட்டுக் குணத்தை எல்லாம் விட்டுட்டியாப்பா…’ என, தொடர்ந்தார்.
பாவேந்தர் கைகளைக் கட்டியபடியே, ‘அதையெல்லாம் விட்டுட்டேனம்மா…’ என, பணிவாய் கூறினார்.
விடைபெற்ற போது, செல்லம்மாள் பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஆசி பெற்றார்.
உடனிருந்த நண்பர், ‘காலில் முள் குத்தினால் கூட, குனிந்து எடுப்பதை, தலைகுனிவாக எண்ணும் நீங்கள், செல்லம்மாள் பாதங்களில் விழுந்து வணங்கினீர்களே…’ என, கேட்டார்.
‘இந்த நாட்டில் எல்லா நோய்களும் தீர வேண்டும் என, எண்ணியவர் பாரதி. அப்படிப்பட்ட உத்தம சீலரை, அருகில் இருந்து கவனித்தவர் இந்த அம்மையார்; அதனாலேயே விழுந்து வணங்கினேன்…’ என்றார், பாவேந்தர்.
No comments: