Breaking

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம்..


முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம்..


முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பற்றி `இந்திரா, இந்தியாவின் சக்திவாய்ந்த பிரதமர் ' என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரபல பத்திரிகையாளர் சகாரிகா கோஷ் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தில், இந்திரா காந்தி வங்கதேசத்தை உருவாக்கியவிதம் குறித்து சுவைபட குறிப்பிடப்பட்டுள்ளது. இரு அண்டைநாடுகளுடனுமே இந்தியா போர் புரிந்துள்ளது. 1962-ம் ஆண்டில் சீனாவுடன் முதல் போர். அதில் தோல்வியே மிஞ்சியது. அடுத்த இரு போர்கள் பாகிஸ்தானுடன். இரண்டிலுமே இந்தியாவுக்கு வெற்றி. அந்தப் புத்தகத்தில், 1971-ம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து கிழக்குப் பாகிஸ்தானைப் பிரித்து, வங்கதேசத்தை உருவாக்க இந்திரா செய்த ராஜதந்திரங்கள் குறித்தும், வங்கதேச மக்களுக்குப் பாகிஸ்தான் செய்த கொடுமைகள் பற்றியும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.1970-ம் ஆண்டில் பாகிஸ்தானில் முதன்முறையாகப் பொதுத் தேர்தல் நடந்தது. கிழக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த முஜிபூர் ரஹ்மானின் அவாமி லீக் கட்சி பெரும்பான்மையைப் பிடித்தது. மேற்கு பாகிஸ்தான் அரசியல் கட்சிகள் அரண்டுபோயின. சுல்ஃபிகர் அலி பூட்டோவின் `மக்கள் கட்சி' மேற்கு பாகிஸ்தானின் பெரிய கட்சி. அப்போதைய பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் யாயா கான், பூட்டோவுடன் சேர்ந்துகொண்டு அவாமி லீக் கட்சியின் வெற்றியை அங்கீகரிக்க மறுத்தார்.இதனால் கிழக்குப் பாகிஸ்தானில் மிகப்பெரிய மக்கள் புரட்சி ஏற்பட்டது. மேற்கு பாகிஸ்தானுக்குக் கீழ்படிய கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் மறுத்தனர். பெரிய போராட்டம் வெடிக்க, ஜெனரல் யாயா கான், ராணுவத்தினரை ஏவினார். பாகிஸ்தான் ராணுவம் மிருகவெறியுடன் சொந்த மக்கள் மீதே பாய்ந்தது. சுமார் மூன்று லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 40 ஆயிரம் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்கள். பெண்களின் மார்பகங்களை வெட்டி வீசினர். குழந்தைகளின் கண்கள் பிடுங்கப்பட்டன. நடக்க முடியாதபடி சிறுவர்களின் மூட்டுகள் உடைக்கப்பட்டன.ராணுவத்தின் கொடுமை தாங்க முடியாத ஒரு கோடி மக்கள், இந்தியாவுக்கு அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். கிழக்குப் பாகிஸ்தானில் மக்களுக்கு நிகழ்த்தப்பட்டக் கொடுமைகள் குறித்து பிரதமர் இந்திரா காந்திக்கு உளவுத்துறை தகவல் தெரிவித்தது. பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அகதிகள் முகாமுக்கு, பிரதமர் இந்திரா காந்தி சென்றிருந்தார். பரிதாப நிலையில் கிடந்த அந்த மக்களைப் பார்த்தபோது,  இரும்பு மனுஷியான அவரே நிலைகுலைந்துபோனார். அந்த அளவுக்குக் கொடுமைகள் இழைத்திருந்தது பாகிஸ்தான் ராணுவம்.`பாகிஸ்தானின் மிருகத்தனத்தை நிறுத்த வேண்டும்; உள்நாட்டில் பாகிஸ்தான் செய்துவரும் தீவிரவாதத்தை உலக நாடுகளுக்கு முதலில் புரியவைக்க வேண்டும்' என்பது இந்திரா காந்தி வகுத்த திட்டம். அப்போது பாகிஸ்தானுக்கு அமெரிக்காதான் முக்கிய ஆயுத விற்பனையாளர். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் ரிச்சர்ட் நிக்சன். இந்தியா தரப்பில், சில தகவல்களை அமெரிக்க அரசிடம் தெரிவித்தும் நிக்சன் கவனம் செலுத்தவில்லை. அமெரிக்க அதிகாரிகளும் வாய் மூடி மௌனியாக இருந்தனர். அந்தச் சமயத்தில் இந்தியாவுக்கு வந்திருந்த அமெரிக்கப் பாதுகாப்புத் துறை ஆலோசகர் ஹென்றி கிஸ்ஸிங்கர், `பாகிஸ்தானுடன் போர் மூண்டால், அமெரிக்காவிடமிருந்து எந்த உதவியையும் இந்தியா எதிர்பார்க்க வேண்டாம். பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை  நாங்கள் எடுக்க மாட்டோம்' என்று இந்திராவுக்கு மறைமுகமாக உணர்த்தினார். பாகிஸ்தானுடன் வலியப்போய் போர் தொடுப்பதில் இந்தியாவுக்குச் சிக்கல் இருந்தது.இதனால், மாற்றுத் திட்டத்தைத் தயார்செய்தார் இந்திரா. ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டார். 21 நாள்கள்கொண்ட நீண்ட நெடிய சுற்றுப்பயணம் இது. பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளைத் திரட்டுவதுதான் அவரின் நோக்கம். பிரிட்டனில் பி.பி.சி-க்கு இந்திரா காந்தி பேட்டியளித்தபோது,  `பாகிஸ்தான் உள்நாட்டு விவகாரத்தில் நீங்கள் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள்?' என்ற கேள்வி கேட்கப்பட, வெகுண்டெழுந்த இந்திரா `ஹிட்லர், யூதர்களைக் கொன்று குவித்தபோது மற்ற நாடுகள் ஏன் அமைதியாக இருக்கவில்லை?' எனக் கோபமாகக் கேட்டார்.கடைசியாக அமெரிக்காவுக்குப் பயணம். சேலை கட்டிய `பாகுபலி'யாகவே அமெரிக்காவில் இந்திரா காந்தி வலம்வந்தார். அதிபர் நிக்சன், வெள்ளை மாளிகையில் விருந்து அளித்தார். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட நிக்சன் பேசவில்லை. நிக்சனால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதையும் இந்திரா புரிந்துகொண்டார். ஆனால், பாகிஸ்தானுக்கு சம்மட்டி அடி கொடுப்பதற்கான காரணத்தை மட்டும் இந்திரா தேடிக்கொண்டிருந்தார். காரணத்தையும் பாகிஸ்தானே உருவாக்கித் தந்தது.1971-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி, இந்தியாவின் மேற்குப் பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டு வீசும்போது, கொல்கத்தாவில் ஒரு பொதுக்கூட்டத்தில் இந்திரா காந்தி பங்கேற்றுக்கொண்டிருந்தார். அந்தக் கூட்டத்திலேயே `நன்றி கடவுளே... போர் தொடுக்க எங்களுக்கு ஒரு காரணம் கிடைத்துவிட்டது ' என இந்திரா பேச,  ஜெனரல் சாம் மானக்‌ஷாவின் உத்தரவை அடுத்து இந்தியத் துருப்புகள் கிழக்குப் பாகிஸ்தானுக்குள் நுழைந்தன. சரமாரியான தாக்குதல்களால் பாகிஸ்தான் அலறியது.  இந்த அதிரடியை அமெரிக்காவும் எதிர்பார்க்கவில்லை.அணு ஆயுதக் கப்பல் `என்டர்பிரைஸ்' உள்ளடக்கிய அமெரிக்கக் கடற்படையின் 7-வது பிரிவு இந்தியப் பெருங்கடலை நோக்கி நகர, நிக்சன் உத்தரவிட்டார். என்டர்பிரைஸ், இந்தியப் பெருங்கடலை நெருங்கிக்கொண்டிருக்கையில், டிசம்பர் 12-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பேசிய இந்திரா காந்தி, `முன் வைத்த காலை பின் வைக்கவே முடியாது. என்டர்பிரைஸ் இந்தியக் கடல் பகுதிக்குள் நுழைந்தால், எங்கள் போர் விமானங்கள் பார்த்துக்கொண்டிருக்காது' என முழங்கினார்.என்டர்பிரைஸ் இந்தியப் பெருங்கடலுக்கு வருவதற்கு முன்னரே, மேற்கு பாகிஸ்தான் இந்தியாவிடம் மண்டியிட்டுவிட்டது. டிசம்பர் 16-ம் தேதி, டாக்காவில் ஜெனரல் ஆரோரா முன்னிலையில் ஒரு லட்சம் பாகிஸ்தான் படை வீரர்கள் இந்தியாவிடம் சரண் அடைந்தனர். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, இவ்வளவு வீரர்கள் இன்னொரு நாட்டிடம் சரண் அடைந்தது அதுவே முதன்முறை. கடைசிமுறையும் கூட.

அதே நாளில் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இந்திரா காந்தி, `வங்கதேசம் இனிமேல் சுதந்திர நாடு. டாக்கா சுதந்திர நாட்டின் தலைநகர்' என அறிவித்தார்.இந்திரா காந்தி.

No comments:

Powered by Blogger.