Breaking

நவம்பர் - 02. தமிழுக்கு தொண்டாற்றியவரும், தமிழ் அறிஞருமான பரிதிமாற் கலைஞர் நினைவு தினம்.

நவம்பர் - 02.
தமிழுக்கு தொண்டாற்றியவரும், தமிழ் அறிஞருமான பரிதிமாற் கலைஞர் நினைவு தினம். 

பரிதிமாற் கலைஞர் எனப்படும் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் (சூலை 6, 1870 - நவம்பர் 2, 1903) ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றியவர்.

 மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த விளாச்சேரியில் (1870) பிறந்தார். இயற்பெயர் சூரியநாராயணன். தந்தையிடம் சமஸ்கிருதமும், மதுரை சபாபதி முதலியாரிடம் தமிழும் கற்றார். மதுரை உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.

ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் உதவித் தொகையைப் பெற்று, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை பயின்றார். தமிழ் மொழி, தத்துவத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். தான் பயின்ற கல்லூரியில் தத்துவத் துறை ஆசிரியர் பணியை ஏற்காமல், குறைந்த சம்பளமாக இருந்தாலும் தமிழ்த் துறைப் பணியை விரும்பி ஏற்றார்.

 செந்தமிழ் நடையில் இவர் சுவைபட விவரிக்கும் ஆற்றலில் ஈர்க்கப்பட்டு, பிற துறை மாணவர்களும் இவரது வகுப்புக்கு வந்து ஆர்வத்துடன் பாடம் கேட்பார்கள். தமிழ் அறிவும் ஆர்வமும் கொண்ட மாணவர்களை தன் இல்லத்துக்கு அழைத்துச் சென்று, தொல்காப்பியம், நன்னூல், சைவ சமய சாத்திர நூல்களைக் கற்பித்தார்.

 சென்னைச் செந்தமிழுரைச் சங்கத்தை நிறுவினார். கல்லூரித் தமிழ்ப் பாடங்களுக்கு உரை எழுதினார். மதுரையில் 4-ம் தமிழ்ச்சங்கம் நிறுவ முயற்சி மேற்கொண்டார்.

 தமிழை செம்மொழி என முதன்முதலில் மெய்ப்பித்தவர். குழந்தைகள் 12 வயது வரை தமிழிலேயே கல்வி கற்க வேண்டும் என்று முழங்கியவர். யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரனார் இவரது தமிழ்ப் புலமை, கவிபாடும் திறனைக் கண்டு ‘திராவிட சாஸ்திரி’ என்னும் பட்டத்தை வழங்கினார்.

தனது தனிப்பாசுரத் தொகை என்ற நூலில், சூரியநாராயண சாஸ்திரியார் என்ற தனது வடமொழிப் பெயரை ‘பரிதிமாற்கலைஞர்’ என தமிழில் மாற்றிக்கொண்டார். பல்கலைக்கழகப் பட்ட வகுப்புகளில் தமிழை விலக்கி சமஸ்கிருதத்தைக் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டது. இவரது எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது.

 நாவல், உரைநடை நாடகம், செய்யுள் நாடகம், கவிதை நூல், ஆய்வுநூல், நாடக இலக்கண நூல் என ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். குமரகுருபரர் எழுதிய நீதிநெறி விளக்கத்தின் 51 பாடல்களுக்கும் உரை எழுதியுள்ளார்.

பல தமிழ் அறிஞர்களின் வரலாற்றையும் எழுதியுள்ளார். சபாபதி முதலியாரின் திருக்குளந்தை வடிவேலன் பிள்ளைத்தமிழ், கலிங்கத்துப்பரணி, நளவெண்பா, பஞ்சதந்திரம் உட்பட 67 நூல்களைப் புதுப்பித்து வெளியிட்டார்.

 ஞானபோதினி, விவேகசிந்தாமணி இதழ்களில் தான் எழுதிய கட்டுரைகளை தொகுத்து ‘தமிழ் வியாசங்கள்’ என்ற பெயரில் வெளியிட்டார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதத்தில் புலமை பெற்றவர்.

 தமிழ்-தமிழர் முன்னேற்றத்துக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட பரிதிமாற் கலைஞர் 1903-ல் மறைந்தார். ‘33 ஆண்டுகளே வாழ்ந்த இவர் அரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவர் அதிக காலம் வாழ்ந்திருந்தால், தமிழ் அன்னை அரியாசனத்தில் அமர்ந்திருப்பாள் என தமிழ்த் தென்றல் திரு.வி.க. இவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

No comments:

Powered by Blogger.