Breaking

நவம்பர் - 05. தேசபந்து சி. ஆர். தாஸ் பிறந்தநாள்

தேசபந்து சி. ஆர். தாஸ் பிறந்தநாள்

சுயராஜ்யக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், விடுதலைப் போராட்ட வீரரும், கொல்கத்தாவின் மேயராக பதவி வகித்தவருமான தேசபந்து என்று அழைக்கப்பட்ட சி. ஆர். தாஸ் அவர்களின் பிறந்தநாள் இன்று...


வழக்கறிஞர், பத்திரிக்கை ஆசிரியர், சிறந்த அரசியல் தலைவர் என பல பரிமாணங்களில் சிறப்பு பெற்று விளங்கிய சித்தரஞ்சன் தாஸ் அவர்கள்
நவம்பர் 5, 1870ஆம் ஆண்டு  கொல்கத்தாவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை கொல்கத்தா மிஷனரி சொசைட்டி பள்ளியிலும், தனது மெட்ரிகுலேஷன் படிப்பை கல்கத்தா சர்வகலா சாலையிலும் படித்து தேறினார். ராஜதானிக் கல்லூரியில் பி. ஏ. பட்டம் பெற்றார். சட்டம் கற்பதற்காகவும் ஐ.சி.எஸ் தேர்வு எழுதுவதற்காகவும் லண்டன் சென்றார். அங்கு *இந்தியாவின்முதுபெரும் மனிதர்* *தாதாபாய் நௌரோஜிக்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதால், ஐ.சி.எஸ் தேர்வில் தேசபந்து சி .ஆர். தாஸ் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.1893 முதல் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் பாரிஸ்டராக பணியாற்றினார். பல்வேறு இலக்கிய கழகங்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர். 1893 ,1905 ஆகிய ஆண்டுகளில் இரு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டார்.
 *வந்தே மாதரம், ஃபார்வேர்டு போன்ற நாளிதழ்களையும், நாராயணா என்ற மாத இலக்கிய இதழையும் திறம்பட நடத்தினார்* . வங்கப் பிரிவினையில் பங்குகொண்டு
தேசிய விடுதலைக்காக போராடினார். கொல்கத்தா மாகாண காங்கிரஸ் தலைவராகவும், தேசிய காங்கிரஸின் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். 1918 டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் (முழு தன்னாட்சி ) பூரண சுயாட்சிக் கோரிக்கையை நிறைவேற்றினார். ரௌலட் சட்டத்திற்கு 1919 இல் கொல்கத்தாவில் ஏற்பட்ட எதிர்ப்பிற்கு இவர் ஒரு முக்கிய காரணமாக இருந்தார். அதே ஆண்டு காந்தியடிகளை முதன் முதலில் சந்தித்தார். எனினும் காந்தியடிகளின் கொள்கையில் இவருக்கு பல முரண்பாடுகள் இருந்தன . ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்துதான் சுயராஜ்ஜியம் அடைய வேண்டும் என குரல் எழுப்பினார். 1920இல் நாடு முழுவதும் காந்தியடிகளின் கீழ் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு தம் வழக்கறிஞர் தொழிலை கைவிட்டார். தனது சொத்துக்கள் அனைத்தையும் தேசிய பள்ளிகள், தேசிய கல்லூரிகளை கட்டுவதற்கு வழங்கினார். இவரது தியாகங்களின் காரணமாக *மக்களின் நண்பன்* என பொருள்படும் *தேசபந்து* என்ற பட்டத்தை மக்கள் அவருக்கு வழங்கினர். 1921இல் வங்காளத்தில் டாக்கா பல்கலைக் கழகத்தை துவங்கினார். அக்காலகட்டத்தில் ஒத்துழையாமை இயக்கம் தீவிரமடைந்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1922 இல் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை கைவிட்ட போது சி. ஆர். தாஸ், மோதிலால் நேரு அவர்களுடன் இணைந்து 1923 இல் சுயராஜ்ய கட்சியை ஆரம்பித்து இந்தியா முழுவதும் தேர்தலில் களம் காண வித்திட்டார். வங்காளத்தில் அதை பெரிய கட்சியாக உருவாக்கினார்.  ஆங்கிலேயர்களுக்கு இதன் மூலம் நெருக்கடியை அதிக அளவில் கொடுத்தார். 1924இல் கொல்கத்தா நகராட்சி  தேர்தலில் சுயராஜ்ய கட்சி பெரும் வெற்றி பெற்று கொல்கத்தா நகராட்சி தலைவரானார் சி.ஆர். தாஸ். வங்கத்தில் மாபெரும் தலைவராக முடிசூடா மன்னராக பேராண்மை மிக்க ஆளுமையாக விளங்கினார் .1925 ஆம் ஆண்டு ஜூன் 6 நாள் உயிர் நீத்தார் .இவரது இறுதி  ஊர்வலத்தில் காந்தியடிகள் தலைமையில் 3 லட்சம் மக்கள் கலந்துகொண்டுதேசபந்து சி. ஆர். தாஸ் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். நாட்டுக்கு உழைத்த நல்லோரை வணங்குவோம் , நாம் உண்மையான தேசபக்தர்களை, சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவோம்...

No comments:

Powered by Blogger.