நவம்பர்-13.. அன்பெனும் ஒற்றை வார்த்தையாய் இருப்போம்' - உலக ஆதரவற்றோர் தினம்..
17:19
Read
நவம்பர்-13..
🏈🏈🏈🏈🏈🏈🏈🏈
அன்பெனும் ஒற்றை வார்த்தையாய் இருப்போம்' - உலக ஆதரவற்றோர் தினம்..
⚾⚾⚾⚾⚾⚾⚾⚾
உலகின் ஒவ்வொரு போரிலும் எஞ்சுவது நிராதரவாய் நிற்கும் குழந்தைகள்தான். ஆதரவற்றோர் பற்றிய பதிவுகள் கி.மு 400-ம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசர்கள் காலம் தொடங்கியே நமக்குக் கிடைக்கின்றன. ரோமானியப் பேரரசு காலத்திலேயே அனாதை இல்லங்கள்* தொடங்கப்பட்டிருக்கின்றன.
பைபிளுக்குப் பிறகு அதிகம் அச்சிடப்பட்டு விற்கப்படும் புத்தகம், இரண்டாம் உலகப்போரால் யாருமற்றவளாகி இறந்த சிறுமி ஆன் ஃப்ராங்கின் போர்க்கால நாட்குறிப்புகள்தான். இரண்டாம் உலகப்போர், ஆன் ஃப்ராங்க் போன்ற ஐந்து லட்சம் அனாதைச் சிறுவர்களை விட்டுச்சென்றுள்ளது என அன்றைய பதிவுகள் கூறுகின்றன. துரதிர்ஷ்டவசமாக போர் என்பது துப்பாக்கிகளால் மட்டுமே முடிந்துவிடுவதில்லை. பசி, பஞ்சம், நோய், உரிமைப்போர், சமூக முரண்பாடுகள் என போருக்குப் பல முகங்கள் இருக்கின்றன. உலகின் பெரும் ஆட்சியாளர்களும் மனிதநேயமிக்கவர்களும் தொடர்ந்து உருவாகிக்கொண்டிருந்தாலும் இன்றுவரை மனிதர்களை மனிதர்களே கைவிடும் சூழலுக்கு அவர்களால் எந்தவித பதிலும் தரமுடியவில்லை.
தாலிபன் மற்றும் ஆஃப்கன் மக்களிடையேயான 30 வருடப் போர், இரண்டு மில்லியன் குழந்தைகள் மற்றும் பெண்களை அடுத்தவேளை எப்படி உயிர் வாழவைக்கப் போகிறது என்ற கேள்விக்குறியான சூழலுக்கு உட்படுத்தியது. 6,00,000 பேருக்கு இன்றுவரை தெருக்கள்தான் வீடு. உச்சகட்டமாக 4,00,000 பேர் தங்கள் உறவுகளிடமிருந்து பிரித்துவரப்பட்டு ஆயுதக் கடத்தல்காரர்களாகவும் மனித வெடிகுண்டுகளாகவும் பயன்படுத்தப்பட்டார்கள்.
அனாதையாக்கப்பட்டவர்களில் நான்கில் ஒரு பங்கு பிள்ளைகள் ஐந்து வயதுக்கு முன்பே இறந்துவிடுகின்றனர் என்று சொன்னால், அதைத் தாங்கிக்கொள்ள முடியுமா? ஆனால், நிகழ்ந்தது அதுதான். உணவு இல்லாமலும், நோய்வாய்ப்பட்டும், யாருமற்றும் பிரிதொரு நாளில் அந்தப் பிள்ளைகளின் உயிர்கூட அவர்களின் வசம் இல்லாமல் போனது.
2009-ல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் உச்சகட்டத்தை அடைந்தபோது தாங்கள் உயிர் எஞ்சுவது கடினம் என்று அறிந்த பெற்றோர்கள், அங்குள்ள பௌத்த மடாலயங்களில் தங்கள் பிள்ளைகளை விட்டுச் சென்றனர். பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தைகூட அதற்கு விதிவிலக்கில்லை. 2008-க்குப் பிறகு, தாங்கள் எந்தப் பிள்ளைகளையும் தமிழர்களின் ராணுவத்தில் சேர்க்கவில்லை என்று சொன்னாலும், 2005 முதல் 2007 வரையிலான காலகட்டத்தில் புலிகளின் படையில் இருந்த பிள்ளைகளின் எண்ணிக்கை 1,018. அவர்களில் பெரும்பாலானோர் போருக்காகப் பெற்றோரிடமிருந்து வலிந்து பிரித்துவரப்பட்டவர்கள். அவர்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் போர்க்காலத்தில் முன்னணிப் படையில் செயல்பட்டார்கள்.
ஆப்பிரிக்காவில் இது வேறு கதை. 12 சதவிகித குழந்தைகள் எய்ட்ஸ் போன்ற பெருநோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள். அங்கு, அனாதை விடுதிகளும் குறைவு என்னும் சூழலில் பிள்ளைகளின் இறப்பு எண்ணிக்கை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மும்மடங்கு அதிகம் என்றே சொல்லலாம்.
10 வருடகாலமாக உகாண்டாவில் பசிக்கொடுமை தாங்க முடியாமல் மக்கள் இறந்துகொண்டிருக்க அதிலிருந்து பிழைக்க பயணப்பட்ட தனிமனிதர்கள் எண்ணிக்கை 1.6 மில்லியன். பயணப்படும் தருவாயில் அவர்களுக்கு உறவென்று சொல்லிக்கொள்ள இருந்தவர்கள் பசியால் ஏற்கெனவே இறந்துவிட்டிருந்தனர். மக்களைத் தனித்துவிட, போருக்கு அப்போது துப்பாக்கிகள் தேவைப்பட்டிருக்கவில்லை.
கொள்கையிருந்தும் மனிதநேயம் குப்பையில் என்பதற்கு உதாரணமாய் ரஷ்யாவைச் சொல்லலாம். வருடாந்திரமாக அங்கே 6,50,000 சிறார்கள் எவருமின்றித் தனித்து அனாதைகளாக விடப்படுகின்றனர். ஆதரவற்ற அவர்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அவர்களின் 16 வயதுவரை அரசு ஏற்கிறது. அதன்பிறகு தங்கள் வாழ்வை அவர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், அதன்பிறகு நடப்பதோ வேறு. 10 சதவிகித பிள்ளைகள் என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை செய்துகொள்ளும் சூழலில் 20 சதவிகிதம் பேர் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். 40 சதவிகிதம் பேர் வீடற்று அதே சூழலுக்குத் திரும்புகின்றனர்..
இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் யுத்தமாகக் கருதப்படும் சிரியப் போரால் இன்றுவரையில் உறவுகளிடமிருந்து பிரிந்து சிதறுண்ட மனிதர்களின் எண்ணிக்கை இரண்டரை மில்லியன். நடுக்கடலில் தத்தளித்து ஒரு விடியற்காலையில் துருக்கியின் கடற்கரையோரம் ஒதுங்கிய மூன்று வயது சிறுவன் அய்லான் குர்தியின் உடல் அதற்குச் சாட்சியம். எங்கோ ஒருவருக்கு அதீதமாகிக் போவதுதான் மறுகரையில் யாரோ ஒருவரை எதுவுமற்றவராக்கிவிடுகிறது
அனாதைச் சிறுவன் ஆலிவர் ட்விஸ்ட்’ பற்றிய புனைவை எழுதிய சார்லஸ் டிக்கன்ஸ்எல்லாம் தன்னை கைவிட்ட சூழலில் தன்னைப்போன்ற ஒரு சிறுவன் கூறிய அன்பான ஒற்றை வார்த்தையைத்தான் ஆலிவர் பற்றிக்கொண்டான்” எனக் கூறுகிறார்.
அந்த ஒற்றை வார்த்தையாய் (அன்பு,பாசம்) நாம் இருப்போம்!
🎾🎾🎾🎾🎾🎾🎾🎾
நவம்பர்-13.. அன்பெனும் ஒற்றை வார்த்தையாய் இருப்போம்' - உலக ஆதரவற்றோர் தினம்..
Reviewed by JAYASEELAN.K
on
17:19
Rating: 5

Tags :
NOVEMBER
No comments: