Breaking

ஒரு சாதனை விஞ்ஞானி...


ஒரு சாதனை விஞ்ஞானி...

நம் உடல் கோடி கோடி அணுக்களால் (cells) ஆனது.  அணுக்களில் ஒரு உட்கரு (nucleus) உள்ளது. இந்த உட்கருவில் 46 குரோமோசோம்கள் உள்ளது. ஒவ்வொரு குரோமோசோம்களிலும் இரண்டு மிக நீளமான மரபணு (DNA) துண்டுகள் இருக்கிறது.  இந்த மரபணு அடினைன் (Adenine, A), கோவானைன் (Guanine, G), தையமின் (Thyamine, T), மற்றும் சைடோசைன் (Cytocine, C) என்ற வேதிப்பொருளை பாஸ்பேட் (Phosphate) மற்றும் டியாக்சி ரைபோஸ் (deoxyribose) என்ற சர்க்கரைப் பொருளால் இணைக்கப்பட்ட ஒரு சங்கிலித் தொடர்.  இதனை நிளமான இரட்டை பிரி கயிறாக நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு துண்டு DNAவில் இரண்டு நுனிகள் உண்டு. இந்த மரபணுவின் நுனியை டீலோமியர் (telomere) என்று அழைப்பார்கள். 

டீலோமியரில் TTAGGG என்ற தொடர் அடுக்கு அடுக்காக நிறையக் காணப்படுகின்றன. அதனால் TTAGGG என்ற தொடரை டீலோமியர் அடுக்குத் தொடர் என அழைப்பார்கள்.  இந்த டீலோமியரில் நாங்கள் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரண்டு புதிய தொடர்களை சில மாதங்களுக்கு முன் கண்டறிந்தோம். டீலோமியரின் நீளம் நம் வயதுடன் தொடர்புடையது எப்படி என்று பார்ப்போம்.

ஒரு  அணு இரண்டாகப் பிரியும் போது இந்த டீலோமியரின் நீளம் சற்று குறைகிறது. இதன் காரணமாக நாம் வளர வளர நம்  டீலோமியரின் நீளம் குறைய ஆரம்பிக்கிறது.  பின் வயதாகும் போது   முகத்தில் சுருக்கங்கள் வருவது போல் உட்கரு சுவரிலும் சுருக்கங்கள் வர ஆரம்பிக்கும். முடிவாக அந்த அணு மீண்டும் இரண்டாகப் பிரியும் தகுதியை இழக்கும். வயதான அணுக்களின் உட்கரு சுவரில் வரும் சுருக்கங்களை 2007ல் நான் கண்டறிந்தேன். பின்  அணுக்கள் மீண்டும் பிரிந்து பல்கிப் பெருகும் தகுதியை இழப்பதால்  நமக்கு வயதாகிறது. 

டீலோமியரின் நீளம் குறைவதை நம்மால் தடுக்க முடிந்தால் வயதாவதை நம்மால் தடுக்க முடியும். மேலும் டீலோமியரின் நீளத்தைக் கணக்கிட முடிந்தால் நம்மால் மிதமுள்ள வாழ்நாளைக் கணக்கிட முடியும். டீலோமியரின் நீளத்தைக் கணக்கிட நடை முறையில் உள்ள தொழில்நுட்பத்தை சதன் பிளாட் (Southern blot) என்று அழைக்கப்படுகிறது. இது
மிகவும் சிக்கல் நிறைந்தது.  இதனைச் செய்து முடிக்க சில நாட்கள் செல்வாக்கும். மேலும் உயிருள்ள அணுக்களில்  இந்த தொழில் நுட்பத்தைப் பயன் படுத்த முடியாது. அணுக்களை உடைத்து உள்ளே உள்ள DNAவை பிரித்தெடுத்துத் தான் டீலோமியரின் நீளத்தைக் கணக்கிட முடியும். இதனைச் செய்து முடிக்கப் பணச்செலவும் அதிகம் தேவைப்படும்.

பேராசிரியர் கணேஷ் நமச்சிவாய பாண்டியன் அவர்கள் திருநெல்வேலியில் பிறந்து சென்னையில் கல்வி பெற்று பின் ஜப்பானில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றார் . இவர் இப்போது ஜப்பானில் உள்ள புகழ்பெற்ற கியோட்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகின்றார். இவரின் ஆய்வுக்குழு இந்த டீலோமியரை நன்கு புரிந்து கொள்ள ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அதற்காக உயிருள்ள மனித  அணுவில் உள்ள டீலோமியரில் இருக்கும் TTAGGG என்ற தொடரில்  இணையும் சிவப்பு வண்ண வேதிப்பொருள் (silicon-rhodamine linked with pyrrole-imidazole polyamide (PIP) probe) ஒன்றை உருவாக்கினார்கள். இந்த சிவப்பு வண்ண வேதிப்பொருள் பொருட்கள் டீலோமியரில் இருக்கும் TTAGGG இணையும். பின் ஒரு வகை வெப்பக் கதிர்களைக் கொண்டு இந்த சிவப்பு வண்ண வேதிப்பொருள் ஒளிரும் படி செய்து டீலோமியரை கண்ணால் பார்க்க வகை  செய்தனர். இந்த தொழில் நுட்பத்தால்  டீலோமியரின் நீளத்தைச் சுலபமாகக் கண்டறியலாம்.  அதுவும் அணுக்களைக் கொல்லாமல் டீலோமியரின் நீளத்தை இந்த தொழில் நுட்பத்தால் குறைந்த பணச் செலவில் விரைவாகக் கண்டறியும். மேலும் இந்த தொழில் நுட்ப வளர்ச்சி டீலோமியரை விரைவாக அறிந்து கொள்ளப் பயன்படும். இதனால் வயதாவதைப் பற்றிய அறிவியல் உண்மைகளை நன்கு அறிந்து கொள்ளலாம்.

வயதாக வயதாக டீலோமியரின் நீளம் அணுக்களில் குறைய வேண்டும். ஆனால் தவறுதலாக சில அணுக்களில் டீலோமியரின் நீளம் குறைவதற்கு மாறாக அதிகரிக்க ஆரம்பிக்கிறது. இதனாலும் புற்றுநோய் வருகிறது. சுமார் 90% புற்று அணுக்களில் இந்த  டீலோமியரின் நீளம் குறைவதில்லை அல்லது அதிகரிக்கிறது. அதனால் டீலோமியரைப் பற்றிய அறிவியல் முன்னேற்றம்  புற்றுநோயைப் பற்றியும் புரிந்து கொள்ள உதவும். 

மேலும் பேராசிரியர் கணேஷ் நமச்சிவாய பாண்டியன் அவர்கள் கண்டறிந்த டீலோமியரின் நீளம் கண்டறிய உதவும் அந்த  சிவப்பு வண்ண வேதிப்பொருள்  விரைவில் விற்பனைக்கு  வரும். இதனை மற்ற ஆராய்ச்சியாளர்கள் வாங்கி டீலோமியரின் தன்மையை ஆய்வு செய்யப் பயன்படுத்துவார்கள். இதனால் டீலோமியரில் அடங்கியிருக்கும் மர்மங்களும் வினோத உண்மைகளும் விரைவில் வெளிவர ஆரம்பிக்கும். இதனால் புற்றுநோய்   மற்றும் வயதாவதைத் தடுக்க மருந்துகள் கண்டறிய வாய்ப்புகள் பெருகும். மேலும் மருத்துவத் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  

இந்த கண்டுபிடிப்பு JACS (Journal of American Chemical Society) என்ற பத்திரிகையில் வெளிவந்துள்ளது. பத்திரிகைகளின் தரத்தை Impact Factor (IF) என்ற எண்ணினைக் கொண்டு அளவிடலாம். JACS-ன்‌ lF 14.7 ஆகும். 
இந்த கண்டுபிடிப்பை முழுமையாகத் தெரிந்துக் கொள்ள கீழ்க்கண்ட  இணைப்பை பயன் படுத்தவும்.

10.1021/jacs.0c04955

ஒரு திருநெல்வேலிக்காரர் உலகத் தரக் கண்டுபிடிப்புக்களை நிகழ்த்திவருவது நாம் அனைவருக்கும் பெருமையே. 

மேலும் நாங்கள் இருவரும் சேர்ந்து ஆடிசம் என்ற சிறு குழந்தைகளைத் தாக்கும் நோயின் காரணத்தைக் கண்டறியும் ஆய்வை மேற்கொண்டு வருகிறோம்.  


No comments:

Powered by Blogger.