Breaking

யாருக்கோ நாம் செய்த உதவி, நமக்கு உதவி தேவைப்படும்போது, வேறு யாரோ ஒருவர் வழியாகக் கிடைப்பதை நீங்கள் அனுபவித்திருக்கலாம்..!!


யாருக்கோ நாம் செய்த உதவி, நமக்கு உதவி தேவைப்படும்போது, வேறு யாரோ ஒருவர் வழியாகக் கிடைப்பதை நீங்கள் அனுபவித்திருக்கலாம்..!!

அமெரிக்க ஐக்கிய நாட்டில், ஒருநாள், ஒரு நெடுஞ்சாலை ஓரமாக, ஒரு Mercedes-Benz கார் நின்றுகொண்டிருந்தது.

பழுதான அதன் சக்கரத்தை மாட்ட முடியாமல், ஒரு பெண், தவிப்புடன், வழியில் செல்வோரிடம் உதவி கேட்டுக் கொண்டிருந்தார். எல்லாருமே வேகமாகச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாகச் சென்ற ஒருவர், அந்தப் பெண்ணுக்கு உதவச் சென்றார். தன்னைப் பார்த்து அந்தப் பெண் பயப்படுவதைப் புரிந்து கொண்டார் அவர்.

அதனால், அவர், கனிவான குரலில், “நான் உங்களுக்கு உதவி பண்ணத்தாம்மா வந்திருக்கேன். ஏன் இந்தக் குளிர்ல வெளியே நிக்கறீங்க? கார் உள்ளே போய் உட்காருங்க.

நான் நொடியில ஸ்டெப்னி மாட்டித் தரேன்”னு சொல்லி, கிடுகிடுன்னு வேலை செய்து அதை மாட்டிக் கொடுத்தார். அந்த மனிதரின் உடம்பெல்லாம் அழுக்கு. முழங்கையில் இலேசாக சிராய்ப்பு. “ஓகேம்மா! வேலை முடிஞ்சுது. இனிமே நீங்க கிளம்பலாம்”னார்.

“உனக்கு எவ்வளவு பணம் தரவேண்டும்?”என, அந்தப் பெண் கேட்டார்.

எவ்வளவு கேட்டாலும், அந்தப் பெண் கொடுக்கத் தயாராக இருந்தார்.

ஆயினும், அந்த மனிதர், ஒரு புன்னகையோடு, “நான் மெக்கானிக் இல்லம்மா. இது என் தொழில் இல்லை. இது ஓர் உதவிதான். அதனால, எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் பத்திரமாகப் போங்கள் என்றதும்,

இல்லப்பா… நீங்கள் இந்த நடு வழியில் உதவி செய்யவில்லை யென்றால் என் கதி என்னவோ, அதனால், எவ்ளோ வேணும்னு தயங்காம கேளு. கொடுக்கிறேன்” என்று அந்தப் பெண் சொன்னார்.

அதற்கு அவர், “அப்படின்னா ஒண்ணு பண்ணுங்க, மேடம். என் பேர் பிரெய்ன் ஆண்டர்சன். அடுத்த முறை உதவி தேவைப்படற யாரையாவது பார்த்தீங்கன்னா, அப்போ எனக்குக் கொடுக்க நினைக்கிற தொகையை அவங்களுக்குக் கொடுத்துட்டு, என்னை மனசுல நினைச்சுக்கோங்க. அது போதும்!”னு சிரிச்சுட்டு, வந்த வழியைப் பார்த்து சென்று விட்டார் பிரெய்ன்.

சில மைல் தூரம் போனதும், ஒரு சிறிய உணவகத்தில் காரை நிறுத்தி உணவருந்தச் சென்றார் அந்தப் பெண். அங்கு, ஒரு பணிப்பெண் வேகமாக வந்து, முகத்தைத் துடைக்க, முதலில் ஒரு துண்டைக் கொடுத்தார். சாப்பிட என்ன வேண்டும் எனக் கேட்டு, சுறுசுறுப்பாகப் பரிமாறினார். அந்தப் பணிப்பெண், எட்டுமாதக் கர்ப்பிணியாக இருந்து கொண்டு, முகத்தில் எவ்விதச் சோர்வுமின்றி, இப்படி வேலை செய்வதை இரசித்தார் அந்தப் பெண்.

சாப்பிட்டு முடிந்ததும், அவர் நூறு டாலர் கொடுத்தார். அதைக் கொடுக்கும் போது பிரெய்ன் ஆண்டர்சனை நினைத்துக் கொண்டார். அந்தப் பணிப்பெண், கட்டணத் தொகை போக, கல்லாவிலிருந்து மீதி சில்லறை வாங்கிக் கொண்டு வருவதற்குள், அந்தப்பெண் வெளியேறி, காரில் கிளம்பிப் போய்விட்டார்கள். ‘அடடா… மீதியை வாங்காமல் போயிட்டாங்களே!’ன்னு நினைத்துக் கொண்டே, மேஜையில் பார்த்தால், கைதுடைக்கும் துணிக்குக் கீழே, இன்னும் 400 டாலர் பணம் இருந்தது.

கூடவே, ஒரு துண்டுச்சீட்டில், ‘மை டியர்! இந்தப் பணம் உனக்குத் தான். இந்தச் சமயத்தில் உனக்கு இது தேவைப்படலாம். மற்றபடி, நீ எனக்கு எதுவும் தரவேண்டியது இல்லை. ஒரு நெருக்கடியில், முகம் தெரியாத ஒருத்தர் எனக்கு உதவி செய்தார். அதன் தொடர்ச்சியாக, இப்போது உனக்கு நான் செய்திருக்கிறேன்.

ஒருவேளை, எனக்கு நீ ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், இந்த அன்புச் சங்கிலி அறுந்துவிடாமல், உதவி தேவைப்படும் வேறு ஒருவருக்கு உன்னால் முடிந்த உதவியைச் செய் என்று எழுதி வைத்திருந்தார்கள்..

அடுத்த மாதம் பிரசவச் செலவுக்கு என்ன செய்யவதென்று அந்தப் பணிப் பெண்ணும், அவர் கணவரும் அதிகமாகவே கவலைப்பட்ட நேரத்தில், இந்தப் பணம் அவர்களுக்குப் பெரிய உதவி! இரவு வீட்டுக்குப் போனதும், அந்தப் பணிப்பெண், தன் கணவரிடம் நடந்ததை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக விவரித்து, “எல்லாம் நல்லபடியா போயிட்டிருக்கு. கவலையை விடு, மை டியர் பிரெய்ன் ஆண்டர்சன்!”னு சொன்னாராம். ஸ்கேட்போர்ட் விளையாட்டில் புகழ்பெற்றவர் தான் பிரெய்ன் ஆன்டர்சன்

இந்த உண்மை நிகழ்வைக் கேட்கும்போது, உதவி தேவைப்படும் ஒருவருக்கு நாமும் உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதல்லவா?

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும் என்பார்கள். தக்க நேரத்தில், யாருக்கோ நாம் செய்த உதவி, நமக்கு உதவி தேவைப்படும்போது, வேறு யாரோ ஒருவர் வழியாகக் கிடைப்பதை நீங்கள் அனுபவித்திருக்கலாம்.

இரக்கச்செயல் சங்கிலி அறுந்துவிடாமல் இருக்க கரம் கோர்ப்போம். நாம் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால், யாரோ ஒருவர் நம்மீது காட்டும் அன்பினால் தான்.

தேவையில் இருப்போருக்கு, நம் இரக்கக் கரங்களை நீட்டுவோம். இதுவே இன்றைய நம் சிந்தனையில் கொள்வோம்.

No comments:

Powered by Blogger.