Breaking

இன்று ஒரு செய்தி... இரவு நேரத்தில் கிராமத்தில் சுற்றி திரியும் மின்மினிப் பூச்சிகள் தற்போது எங்கே சென்று விட்டது.. சிறப்பு கட்டுரை..இன்று ஒரு செய்தி...

இரவு நேரத்தில் கிராமத்தில்
சுற்றி திரியும் மின்மினிப் பூச்சிகள் தற்போது எங்கே சென்று விட்டது..
சிறப்பு கட்டுரை..

இந்தப் பிரபஞ்சத்தில் இயற்கையாக ஒளிரும் தன்மை கொண்ட உயிரினங்கள் பல இருந்தாலும், நம் கண்களில் தென்படுபவை சில மட்டுமே. உதாரணத்திற்கு ஆழ்கடலின் உள்ளே பல அறிய வகை மீன்கள், ஜெல்லிமீன்கள், நத்தை ஓடுகள், சுறாக்கள், கடல் ஆமைகள் மற்றும் பவளப்பாறைகள் என கடல்வாழ் உயிரினங்கள் இயல்பாக பிரகாசிக்கும் திறனைக் கொண்டிருந்தாலும், அவைகளை நாம் எளிதாக காண்பது அவ்வளவு சுலபமல்ல! பூஞ்சைகளில் சுமார் 71 வகை பூஞ்சைகள் இயல்பாக ஒளிரும் தன்மை கொண்டவை. சூரியன் மற்றும் நிலவின் ஒளியாலும், புற ஊதாக்களின் தாக்கத்தினால், தனித்துவமான இயற்கை சூழலால், உயிரினங்கள் அதனிடத்தே கொண்டுள்ள வேதிய எதிர்வினையால் உயிரினங்களிடம் இருந்து ஒளி-உற்பத்தியோ அல்லது ஒளி-உமிழ்வோ ஏற்படுகிறது. இவ்வாறு வெளிப்படும் இயற்கையான ஒளியின் அழகை நாம் காணும் போது ஏற்படும் மகிழ்ச்சியினை நாம் எதனோடும் ஒப்பிட முடியாது.

அப்படி பார்த்தால், நம் வாழ்நாளில் நாம் பார்த்த முதல் ஒளிரும் உயிரினம் எது என்றால்? நிச்சயம் அது மின்மினிப்பூச்சிகளாகத் தான் இருக்கும். 15 ஆண்டுகளுக்கு முன்பு கோடைக்கால இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வந்தால், பச்சையும், மஞ்சலும் சேர்ந்த நிறத்தில், மின்னும் பூச்சிகள் அங்குமிங்குமாய் பறந்து நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். கிராமத்து வீதிகளிலும், வயல் வெளிகளிலும், ஒளியை சொட்டியபடி பறந்து திரிந்த மின்மினிப்பூச்சிகளின் இன்றைய நிலையை நாம் சற்று சிந்திக்க வேண்டும். இன்றை கோடைக்கால இரவுகளை முழுவதுமாக மின்மினிப்புச்சிகளைப் பார்க்க நாம் செலவழித்தாலும், நம்மால் ஒரு மின்மினிப்பூச்சைக் கூட காண முடியாது.  கால மாற்றத்தில், நாம் பலவற்றை இழந்து விட்டோம் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் தான் மின்மினிப்பூச்சிகள்!. மின்மினிகள் அனைத்தும் எங்கே போனது, எப்படி மறைந்தது, ஏன் அழிந்து வருகிறது என்பதற்கு சரியான காரணம் இங்கு யாருக்கும் தெரியாது.

ஆரம்ப காலங்களில் மின்மினிப்பூச்சிகளை மனிதனர்கள் கையாண்ட விதம் சற்று வித்தியாசமானது, ஐரோப்பிய நாடுகளில், மின்விளக்குகள் பரவலாக பன்யன்பாட்டில் இல்லாத போது, அவர்கள் மீன்களையும், மின்மினிப்பூச்சிகளையுமே நம்பி இருந்தனர். இரயில் சுரங்கங்களிலும், நிலக்கரி சுரங்கங்களில் பயணிக்க வெளிச்சத்திற்காக ஒளிரும் மீன்களின் தோல்களை, கண்ணாடி குடுவையில் அடைத்துக் கொண்டு சென்றனர், அதே போல மின்மினிப்பூச்சிகளை மிடித்து குடுவைகளில் அடைத்து, அது தரும் ஒளியில் பயணத்தை மேற்கொண்டனர்.

உலகம் முழுவதிலும் மிதமான மற்றும் வெப்ப மண்டலங்களில் பரவலாக ஆயிரக்கணக்கா மின்மினிப்பூச்சிகள் வாழ்கின்றன. குளங்கள், நீரோடைகள் மற்றும் வனப்பகுதிகள், சதுப்பு நிலங்கள், மக்கிய மரங்கள் போன்றவைகளே மின்மினிப்பூச்சிகளின் மிகமுக்கிய பிறப்பிடம் விளங்குகிறது. பொதுவாக பல இன மின்மினிப்பூச்சிகள் தங்களின் பிறப்பிடத்தை விட்டு வேறெங்கும் செல்லமாட்டார்கள். காரணம் அவர்கள் பிறந்த இயற்கைச் சூழல் மட்டுமே அவர்கள் வாழ்வதற்க்கு ஏற்ற இடம்.

இன்றைய சூழலில் மின்மினிப்பூச்சி ஏன் மறைந்து கொண்டிருக்கிறது என்பதற்கு பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கும் இரண்டு முக்கிய காரணங்கள் வளர்ச்சியால் ஏற்படும் மாற்றங்கள், மற்றும் ஒளி மாசுபாடு. 

தற்போது காடுகளை அழிக்கப்பட்டு, நீர் நிலைகள் அடைக்கப்பட்டு, நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. செயற்கையான காடுகள் ஏற்படுத்தி, அங்கு புல்வெளிகளை அமைத்து அதை பார்த்து ஆஹா, ஓஹோ என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்., அது அழகென உங்களுக்கு தோன்றலாம் ஆனால் அதில் உயிர் இல்லை. இயற்கையாய் அமைந்த நிலப்பரப்பையும் நிர் நிலைகளையும் பராமரித்து பாதுகாத்தால் மட்டுமே அங்கு சில மின்மினிப்பூச்சிகள் மட்டுமல்ல இன்னும் பல சிறிய பெரிய உயிர்களும் வாழும்..

மின்மினிப்பூச்சிகளில் பொதுவாக பெண் மற்றும் ஆண் மின்மினிப்பூச்சிகள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளவும்,  இனப்பெருக்கம் செய்யவும், இனத்தோடு இனமாக சேர்ந்திருக்கவும், அவர்களிடம் உள்ள ஒளிரும் தன்மையே அவர்களுக்கு உதவுகிறது.  தாயும் தந்தையும் சேர்ந்தால் மட்டுமே அடுத்த தலைமுறை மின்மினிப்பூச்சிகள் உருவாகும், ஆனால் குறிப்பாக கடந்த கடந்த சில ஆண்டுகளாக அதற்கு தடையாக இருப்பது, வசதிக்காகவும், ஆடம்பரத்திற்காகவும் நம் தேவைக்கு அதிகமாக பயன்படுத்தும் மின்விளக்குகளும், பல அடி தூரம் வீசும் நமது கார் ஹெட்லைட்களும் தான், மின்மினிப்பூச்சிகளின் அழிவு நிலைக்கு மிகமுக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். வெப்பமில்லாமல் வெளியிடப்படும் ஒளியானது மின்மினிப்பூச்சிகளிடம் இருந்து வெளிப்படும் ஒளி மட்டுமே. பொதுவாக ஆண் பூச்சிகள் சராசரியாக 5.8 விநாடிகளுக்கு ஒருமுறை ஒளிச் சைகை வெளியிடும். வெப்பநிலை அதிகமாயிருக்கும்போது குறைவான நேர இடைவெளியிலும், வெப்பநிலை குறையக் குறைய அதிகமான நேர இடைவெளியிலும் ஒளிச் சைகைகள் வெளியிடும்.

 மின்மினிப்பூச்சிகள் அழிந்து வருவதில் நம் அனைவருக்குமே பங்கு உண்டு, இந்நிலை இப்படியே நீடித்தால் மின்மினிப்பூச்சிகள் ஒன்று சேரப்போவதும் இல்லை அவர்கள் இப்பூமியில் புதிதாய் மீண்டும் பிறக்கப்போவதும் இல்லை.

 சீனாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மின்மினிப்பூச்சிகளின் அழிவை ஆராய்ந்து, அதை தடுக்கும் நோக்கில், தோட்டங்களில் வளர்க்கப்பட்ட மின்மினிப்பூச்சிகளை மொத்தமாக கொண்டு சென்று அப்பகுதிகளில் பறக்கவிடுகிறார்கள் . சீனாவின் ஹூபி மாகாணத்தில் வூஹான் நகரில் உள்ள ஒரு பூங்காவில், மின்மினிப்பூச்சிகளை நிறுவியிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் கோடை மாத இரவில், இரண்டு மாத மட்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. உலக அளவில் தொழில் முனைவோர் மின்மினிப்பூச்சி வளப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போதும் வெளிநாடுகளில் புத்துயிர் பெற்று வருகிறது மின்மினிப்பூச்சி வளர்ப்பு.

மின்மினிப் பூச்சிகளை பார்க்காமல் வளரும் குழந்தைகளுக்கு அவர்கள் என்ன இழக்கிறார்கள் என்பது தெரியாது. நிலப்பரப்பில் மின்சாரம் இல்லாமல், பேட்டரி இல்லாமல் ஒளிரும் விளக்குகள் இவை! மின்னும் உயிர்கள் இவை, இயற்கையான வெளிச்சம் இவை. இவர்களை காக்கத் தவறினால், அடுத்த தலைமுறையினர் மின்மினிப்பூச்சிகளை பார்க்க மாட்டார்கள். நம் கோடைகால நினைவுகளும் நம்மோடு முடிந்துபோகும்.

தற்போது எங்கோ, எப்படியோ இன்னும் சில மின்மினிப்பூச்சிகள் வாழ்கின்றன, எப்போதாவது உங்கள் பிள்ளைகளின் கண்களில் அவர்கள் படலாம், எஞ்சிய மின்மினிப் பூச்சிகளை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் காட்ட விரும்பினால், நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான்,  உங்களை சுற்றி உள்ளவர்களிடம் சொல்லுங்கள், இந்த உலகம் தனி ஒரு உயிரினம் வாழுவதற்காக மட்டுமல்ல, பல உயிரினங்கள் கூட்டாக வாழ்வதற்கான வாழ்விடமே நம் வாழிடம் என்று. இதன் மூலமாக மட்டுமே, நீங்கள் வசிக்கும் இடத்தில் மின்மினிப்பூச்சிகளை உங்களால் பார்க்க முடியும்.

No comments:

Powered by Blogger.