Breaking

புதிய இலக்கிய வகையின் முன்னோடியும் சிறந்த எழுத்தாளருமான அ.க.செட்டியார் பிறந்த தினம்..தமிழில் பயண இலக்கியம்’ என்ற புதிய இலக்கிய வகையின் முன்னோடியும் சிறந்த எழுத்தாளருமான அ.க.செட்டியார்  பிறந்த தினம்..


திருவண்ணாமலை அருகிலுள்ள கோட்டையூரில் பிறந்தவர் (1911). இவரது இயற்பெயர் கருப்பன். திரு வண்ணாமலையில் நடுநிலைப் பள்ளிக் கல்வி வரை பயின்றார். சிறுவயது முதலே எழுதும் ஆர்வம் கொண்டிருந்தார். 17 வயதில் இவர் எழுதிய ‘சாரதாம்பாள் - சிறு தமாஷ்’ என்ற கதை ஆனந்தவிகடனில் வெளிவந்தது. பர்மாவில், 1930-ல் ‘தனவணிகன்’ என்ற மாத இதழின் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றினார். 1935-ல் ஜப்பான் இம்பீரியல் ஆர்ட்ஸ் கழகத்தில் சேர்ந்து புகைப்படக் கலையைப் பயின்றார். அதில் சிறப்புப் பயிற்சி பெற நியுயார்க் சென்று ஃபோட்டோகிராபிகல் இன்ஸ்ட்டிடியூட்டில் ஓராண்டு டிப்ளமோ பெற்றார்.முதன்முதலாக மகாத்மா காந்தியைப் பற்றிய வரலாற்று ஆவணப்படம் எடுத்தார். 1937-ல் தென்னாப்பிரிக்கா சென்றார். மேலும் பல நாடுகளுக்குச் சென்று அந்நாட்டு அரசு மற்றும் தனியார்களிடம் இருந்து காந்திஜி வாழ்க்கை தொடர்பாக சுமார் 50,000 அடிப் படச்சுருள்களைச் சேகரித்தார்.
3 ஆண்டு காலமாகத் தான் திரட்டிய தகவல்கள், ஆவணங்களின் அடிப்படையில், ‘மகாத்மா காந்தி: அவரது வாழ்க்கை சம்பவங்கள்’ என்ற படத்தைத் தமிழில் தயாரித்து, 1940-ம் ஆண்டு வெளியிட்டார். இதன்மூலம் முதன்முதலாக மகாத்மா காந்தி பற்றிய ஆவணப்படம் எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றார். அன்றைய பிரிட்டிஷ் அரசுக்கு பயந்து திரையரங்குகள் இதைத் திரையிட முன்வரவில்லை.
இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948-ம் ஆண்டு, சுதந்திர தினத்தன்று புதுடில்லியில் இந்தி மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதையே 1953-ல் ஆங்கிலத்தில் தயாரித்து ஹாலிவுட்டில் வெளியிட்டார்.1912-ல் கோகலேயின் தென்னாப்பிரிக்கப் பயணம், காந்தியுடனான அவரது சந்திப்பு, நேருஜி கைராட்டினம் சுற்றும் காட்சி, உப்பு சத்தியாக்கிரகத்தை முடித்துக்கொண்ட காந்தியடிகள், தண்டி கடற்கரையில் நீராடும் காட்சி போன்ற அரிய காட்சிகள் ஆவணப் படத்தில் இடம்பெற்றிருந்தன.
பல நாடுகளுக்கும் தான் மேற்கொண்ட பயணங்களைப் பற்றி நூல்கள் எழுதி வெளியிட்டார். ‘உலகம் சுற்றும் தமிழன்’ என்று இவர் எழுதிய நூற்பெயரே இவரது அடைமொழியாகவும் சிறப்புப் பெயராகவும் மாறியது. மேலும் ‘பிரயாண நினைவுகள்’, ‘மலேயா முதல் கனடா வரை’, ‘கயானா முதல் காஸ்பியன் கடல்வரை’, ‘குடகு’, ‘இட்ட பணி’, ‘ஐரோப்பா வழியாக’, ‘ஜப்பான் கட்டுரைகள்’ ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.விளம்பரத்தை விரும்பாதவர் என்பதால், இவரது புகைப்படம் கிடைப்பதுகூட அரிதாக இருந்தது. பாரதியிடம் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், அவரது தொகுக்கப்படாத படைப்புகளைக் கண்டெடுத்து வெளியிடுவதில் பெரும்பங்காற்றினார். 1943-ல் ‘குமரி மலர்’ என்ற மாத இதழை வெளியிட்டார்.ச.வையாபுரிப் பிள்ளை, க.அ.நீலகண்ட சாஸ்திரி, டி.எஸ்.சொக்க லிங்கம், ஏ.என். சிவராமன், பாரதிதாசன், டி.கே.சி., வ.ரா., தி.ஜ.ர., கல்கி, ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், கு.அழகிரிசாமி உள்ளிட்ட பல இலக்கியவாதிகள் இதில் தொடர்ந்து எழுதி வந்தனர்.
1850 முதல் 1925-ம் ஆண்டு வரை பல்வேறு இதழ்களில் வெளிவந்த 140 கட்டுரைகள் அடங்கிய ‘தமிழ்நாடு பயணக் கட்டுரை’ என்ற நூலைத் தொகுத்து வெளியிட்டார். தமிழில் பயண இலக்கியத்தைத் தொடங்கி வைத்தவர் என்ற பெருமைக்குரிய ஏ.கே.செட்டியார், 1983ஆம் ஆண்டு, 72ஆவது வயதில் காலமானார்.

No comments:

Powered by Blogger.