Breaking

தமிழின் தொன்மைக்கு சான்றளித்தவர் - அய்யா, ஐராவதம் மகாதேவன் நினைவு நாள்..


நவம்பர் - 26.

தமிழின் தொன்மைக்கு சான்றளித்தவர் - அய்யா, ஐராவதம் மகாதேவன் நினைவு நாள்..

சிந்து சமவெளியில் கிடைத்த ஒரு இலச்சினையை அடையாளம் காண்பதுதான் மிகப் பெரிய சவாலாகத் திகழ்ந்தது. அதற்கு மட்டுமே அவர் 50 ஆண்டுகளைச் செலவிட்டிருக்கிறார்.

சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம்தான் என்பதற்கு ஆதாரங்களை கண்டறிந்து நிறுவியவர் தொல்லியல்துறை அறிஞர் ஐராவதம் மகாதேவன், கடந்த 26-11-2018 அன்று காலமானார்.

ஐராவாதம் மகாதேவன்.
அக்டோபர் 2, 1930 அன்று பிறந்த ஐராவாதம் மகாதேவன், திருச்சியில் தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் இரசாயனவியலில் தனது பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை முடித்துவிட்டு, இந்திய ஆட்சிப் பணிக்கு படித்து தேர்வாகி, ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றினார்.

1962-ல் தொல்லியல் துறை அறிஞர்களான கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி,  கே.வி. சுப்ரமணிய ஐயர் ஆகியோரின் பழக்கம் கிடைத்தது. அப்போதிருந்தே தொல்லியல் துறையில் ஆர்வம் காட்டிவந்த ஐராவதம் மகாதேவன், 1980-ல் விருப்ப ஓய்வு பெற்ற பின் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் செயல் இயக்குனராக செயல்பட்டார். 1987 முதல் 1991 வரையில் தினமணியின் ஆசிரியராகச் செயல்பட்டார்.

சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட இலச்சினையில் காணப்பட்ட மிருகத்தை குதிரை எனக் கூறி அது ஆரிய நாகரிகம்தான் என்ற கூற்றை முறியடித்து பல்வேறு ஒப்பீட்டு சான்றாதாரங்களின் மூலம் அது காளை என்பதை நிருபித்தார். அதன்மூலம் சிந்துச் சமவெளி நாகரிகம், திராவிட நாகரிகமே என்பதை உலகிற்கு உரக்கச் சொன்னவர் ஐராவதம் மகாதேவன்.

கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசின் “பத்மஸ்ரீ” விருது பெற்றவர் ஐராவதம் மகாதேவன். திராவிட நாகரிக ஆய்விற்கு அவரது பங்களிப்பைப் பாராட்டி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் (2009-2010)-ம் ஆண்டுக்கான “தொல்காப்பியர் விருது” வழங்கப்பட்டது.

ஐராவதம் மகாதேவன்: தமிழின் தொன்மைக்குச் சான்றுகளை கொடுத்தவர்

தமிழின் தொன்மையைத் தனது கடும் உழைப்பால், ஆய்வுத் திறத்தால் உலக அரங்குக்கு எடுத்துச்சென்றவர் ஐராவதம் மகாதேவன். 38 ஆண்டு காலம் உழைத்து அவர் உருவாக்கிய பழந்தமிழ்க் கல்வெட்டுகள் குறித்த ஆய்வு நூல் (Early Tamil Epigraphy, Harward University press and CreA, 2003) இந்திய வரலாறு என்றாலே, அது வட இந்திய வரலாறுதான் என்றிருந்த நிலையை மாற்றுவதற்கு உதவியது. தமிழ் பிராமி என அவரால் அழைக்கப்படும் பழந்தமிழ் எழுத்துகளையும் ஆரம்ப கால வட்டெழுத்துகளையும் புரிந்துகொள்ள முழுமையானதொரு வழிகாட்டியாக அது விளங்குகிறது.

சிந்துவெளி எழுத்துகளும் திராவிடமும்

ஐராவதம் மகாதேவன் கவனம் செலுத்திய இன்னொரு துறை சிந்துவெளி எழுத்துகள் குறித்தனவாகும். சிந்துவெளி நாகரிகத்தை ஆரியக் கலப்பில்லாத அதற்கு முற்பட்ட நாகரிகம் என நிறுவினார் ஐராவதம் மகாதேவன். “சிந்துவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம். ஆனால், ஆரியர்களுடைய நாகரிகமோ கிராமப்புறத்தைச் சார்ந்த மேய்ச்சல் நிலத்தோடு தொடர்புடைய நாகரிகமாகும். சிந்துவெளியில் கிடைத்த குறியீடுகள், முத்திரைகளில் பல்வேறுவிதமான விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை எதிலும் குதிரையின் உருவம் காணப்படவில்லை. குதிரை என்பது ஆரியர்களின் வருகைக்குப் பிறகே இந்தியாவில் அறிமுகமானது” என்று எடுத்துக்காட்டினார் ஐராவதம் மகாதேவன்.

சிந்துவெளிப் பண்பாடு ஒரு திராவிடப் பண்பாடுதான் என்று நீண்டகால ஆராய்ச்சியின் மூலம் நிரூபணம் செய்த அஸ்கோ பர்போலாவின் வாதத்தை வழிமொழிந்த ஐராவதம் மகாதேவன், சிந்துவெளிக் குறியீடுகளை அஸ்கோ பர்போலா படித்த முறையில் சில குறைபாடுகள் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். பர்போலா ‘அணில்’ என்ற உருவத்தை ‘பிள்ளை’ எனப் பொருள் கொண்டதையும், ‘வளையல்’ போன்ற குறியீட்டுக்கு ‘முருகு’ என்று பொருள் கொண்டதையும் மொழியியல் அடிப்படையில் தவறென்று சுட்டிக்காட்டினார்.

சிந்துவெளிக் குறியீடுகளைப் படிப்பதற்கு ஐராவதம் மகாதேவன் கையாண்ட முறையே நம்பகமானதாக உள்ளது.

காலத்தின் கல்வெட்டு!

40 ஆண்டுகளுக்கு முன் ஐராவதம் மகாதேவன் வெளியிட்ட ‘சிந்துவெளி எழுத்து, குறியீடுகளின் தொகுப்பும் அட்டவணைகளும்’, சிந்துவெளி ஆய்வில் ஒரு மறக்க முடியாத மைல் கல். சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிடக் கருதுகோளுக்கு வலுச்சேர்த்த ஆய்வறிஞர் அவர்.

சிந்துவெளிப் பண்பாட்டின் எச்சங்கள் இந்தியா முழுவதும் பரவியிருக்கும் என்பதால், அதன் தொடர்ச்சியை‌ வேத இலக்கியங்கள் மற்றும் வட இந்திய மரபுகள் மூலமாகவும், பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் தமிழ்த் தொன்மங்கள் மூலமாகவும் இரு முனைகளில் இருந்தும் மீட்டுருவாக்கம் செய்யமுடியும் என்பதே ஐராவதம் மகாதேவனின் அணுகுமுறை.

No comments:

Powered by Blogger.