Breaking

டிசம்பர் - 11.முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறந்தநாள் ..


டிசம்பர் - 11.முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறந்தநாள் .. 

பிரணாப் முகர்ஜி, மேற்குவங்க மாநிலம் ‌பீ‌ர்கு‌ம் மாவட்டத்தில் மரா‌த்‌தி என்ற இடத்தில் மூத்த காங்கிரஸ் தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான கமட‌ா ‌கி‌ங்க‌ர் முக‌ர்‌ஜி – ராஜல‌ட்சு‌மி தம்பதியருக்கு 1935ம் ஆண்டு மகனாக பிறந்தார். சிறு வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்ட இவர் வரலாறு, அரசியல் ஆகிய இரண்டிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் சட்டமும் பயின்றுள்ளார். ஆசிரியர், பத்திரிகையாளர், எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டவர் பிரணப். தமது 22 வது வயதில் ‌சு‌வ்ரா முக‌ர்‌ஜியை மணந்த இவருக்கு, அபிஜித் முகர்ஜி, இந்திரஜித் முகர்ஜி என இரண்டு மகன்களும், ஷர்மிஷ்தா முகர்ஜி என்ற மகளும் உள்ளனர்.மேற்கு வங்கத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் கின்கர் முகர்ஜியின் மகனாக பிறந்த பிரணாப், தந்தையின் மறைவுக்குப் பின் 1960 களில் அரசியலில் நுழைந்தார். 1969 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக முதன் முறையாக நாடாளுமன்றத்தில் நுழைந்தார். 1975, 1981, 1993, 1999 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவைக்கும், 2004, 2009 ஆம் ஆண்டுகளில் மக்களவைக்கும் தேர்வானார் பிரணாப்.

காங்கிரசில் 45 ஆண்டுகள்

கரடு முரடான அரசியலிலும், ஆட்சியிலும் 45 ஆண்டுகள் கடந்த பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதியாக புதிய பயணத்தை தொடங்கிய போது வயது 77. அப்போதே அவருக்கு 45 ஆண்டுகால அரசியல் மற்றும் ஆட்சி அனுபவம் இருந்தது. இதுவரை இந்திய ஜனாதிபதிகளாக இருந்த யாருக்கும், இந்த அளவுக்கு அரசியல் மற்றும் ஆட்சி அனுபவம் கிடைத்ததில்லை என்று கூறலாம்.பிரணாப் முகர்ஜியின் வளர்ச்சி ஆரம்பத்திலிருந்தே சீராக முன்னேற்றம் அடைந்துள்ளது. மேற்கு வங்கத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் கின்கர் முகர்ஜியின் மகனாக இருந்த பிரணாப், வரலாறு மற்றும் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார். வக்கீலாக, கல்லூரி பேராசிரியராக, பத்திரிக்கையாளராக பணியாற்றினார். 60ம் ஆண்டுகளில் வங்காள காங்கிரசில் இணைந்து பொது வாழ்வில் ஈடுபட்டார். கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்தார்.கடந்த 1969ம் ஆண்டில் முதல் முறையாக மாநிலங்களவை எம்.பி.யானார். 1978ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் ஆனார். இந்திராகாந்தி ஆட்சி காலத்திலேயே பிரணாப் சிறந்த நபராக விளங்கினார். அவசரநிலை சமயத்தில் சக்திவாய்ந்த வருவாய்துறை இணையமைச்சராக இருந்தார். 80 ஆம் ஆண்டுகளிலேயே நிதியமைச்சராக இருந்தார். பிரதமர் இல்லாத நேரங்களில் மத்திய அமைச்சரவை கூட்டங்களுக்கு தலைமை தாங்கினார்.1984ம் ஆண்டில் இந்திராகாந்தி மறைவுக்குப் பின், பிரதமராக பிரணாப் விருப்பப்பட்டார். ஆனால் அவரது ஆசை அப்போது நிறைவேறவில்லை. ராஜீவ்காந்தி பிரதமரானார். அதிருப்தியடைந்த பிரணாப் காங்கிரசை விட்டு விலகினார். சிறிது காலத்துக்குப் பின் காங்கிரசில் மீண்டும் இணைந்தார். அதன்பின் அவரது வளர்ச்சியில் தொய்வு ஏற்படவில்லை.

சிறந்த நாடாளுமன்றவாதி

பிரதமர் நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் பிரணாபுக்கு மீண்டும் முக்கியத்துவம் கிடைத்தது. திட்ட கமிஷன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். பின் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். கடந்த 1997ம் ஆண்டு அவருக்கு சிறந்த நாடாளுமன்றவாதி விருது கிடைத்தது.

மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்த பிரணாப், 2004ம் ஆண்டு மேற்குவங்கம் ஜாங்கிபூர் தொகுதியில் வெற்றி பெற்று முதல்முறையாக மக்களவை உறுப்பினர் ஆனார். 2004ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார். 2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

நிதியமைச்சராகவும் கூடுதல் பொறுப்பு வகித்தார். 27 ஆண்டு இடைவெளிக்குப் பின் அவருக்கு மீண்டும் நிதியமைச்சகம் கிடைத்தது. இது தவிர வர்த்தகம், ஸ்டீல் மற்றும் சுரங்கம், கப்பல் போக்குவரத்து, தொழில்துறை அமைச்சர் என பல பதவிகளில் பிரணாப் இருந்துள்ளார். நாடாளுமன்றத்தின் பல குழுக்களுக்கும் பிரணாப் தலைமை வகித்துள்ளார். 2007ம் ஆண்டு அவருக்கு பத்ப விபூஷன் விருது கிடைத்தது.

2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அவர் மீண்டும் வெற்றி பெற்றார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் முக்கிய நபராக பிரணாப் திகழ்ந்தார். கடந்த எட்டு ஆண்டு கால ஐ.மு. கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சி சந்தித்த பல்வேறு சிக்கல்களை தீர்க்கும் பணியில் அவர் ஈடுபட்டார். லோக்பால் உட்பட முக்கிய பிரச்னைகள் பற்றி விவாதிக்கும் அமைச்சரவைக் குழுக்களுக்கு (ஜி.ஓ.எம்) பிரணாப்பே தலைமை வகித்துள்ளார். இதுவரை 33 அமைச்சரவை குழுக்களுக்கு பிரணாப் தலைமை தாங்கியுள்ளார். இதனால் அவர் ஜி.ஓ.எம் பிரணாப் என அழைக்கப்பட்டார். அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பாக ஐந்து புத்தகங்களை பிரணாப் எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வரலாற்று புத்தகம் இவரது மேற்பார்வையில்தான் வெளியானது.

ஜனாதிபதி-பாரத ரத்னா

வயதாகிவிட்டதால் இனி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என பிரணாப் முடிவு செய்திருந்த நிலையில், அவரை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அறிவித்தது. அவருக்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவு அளித்ததால் அமோக வெற்றி பெற்றார். அரசியல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் அவருக்கு ஜனாதிபதி வாய்ப்பு கிடைத்தது.மூளையில் இருந்த அடைப்பு நீக்கப்பட்டாலும், வயது முதிர்வு மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில், 13 ந்தேதி அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்தது. அதற்குப் பின் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லியில்  (ஆகஸ்ட் 31) மாலை காலமானார்.

No comments:

Powered by Blogger.