Breaking

புற அழகை நோக்கி ஓடும் மனிதர்களிடையே.. அகத்தை அழகாக்கிய ஒரு குட்டி நாடோடி கதை..!!


புற அழகை நோக்கி ஓடும் மனிதர்களிடையே.. அகத்தை அழகாக்கிய ஒரு குட்டி நாடோடி கதை..!!

லாக்டௌன் வாழ்வின் தன்மையை புரட்டிப்போட்டுவிட்டாலும் எங்கோ கேள்விப்படுகிற சில கதைகள், வாழ்வின் மீதான நம்பிக்கையை வயப்படுத்திவிடுகின்றன. புற அழகை நோக்கி ஓடும் மனிதர்களிடையே அகத்தை அழகாக்கிய ஒரு குட்டி நாடோடிக் கதை.

சென்னை அடையாறு காம்பௌண்ட் குடியிருப்புகளில் ஒன்றைச் சொந்தமாகக் கொண்டிருந்தார் சுமித்திராக்கா. பெண்களில் கொஞ்சம் அதிகமான உயரம், கட்டைக்குரல் இதுதான் அவரின் அடையாளம். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் என்பதால் எல்லாமே நேருக்கு நேர்தான். இருக்கும் எட்டு வீடுகளில் ஒன்றில் அவர் இருக்க, நான்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தன. மீதம் மூன்றினை கேன்சர் நோயாளிகள் தங்கிச்செல்ல எனக் குறைந்த வாடகை நிர்ணயித்து PG போல நிர்வகித்து வந்தார் சுமித்ராக்கா. அனைத்திலும் கறாராக இருந்துவிட்டு இதில் மட்டும் இலகுவதேனோ என்று தோன்ற அவரிடமே கேட்டேன். சுமித்ராக்கா ஓர் ஆழமான மௌனத்தின் பின் என்னை தீர்க்கமாக ப்பார்த்துவிட்டு காரணம் சொல்ல ஆரம்பித்தார்.

``பாப்பா, நான் இங்கன பொழைக்க வந்து வருஷம் 20 ஆகிப்போச்சு. முன்னெல்லாம் இந்த இடம் பூரா மேன்சனா இருக்கும். நாங்களும் வீடு எல்லாம் கட்டல. சும்மா ஒரு ரூம் மாடிப்படிக்கு கீழ எடுத்து மேன்சன் மாதிரி வாடகைக்கு விட்டிருந்தோம். ஒரு நாள் ராத்திரி, வயசான ஒரு தாத்தா வந்தாக, கை நரம்பு எல்லாம் மூப்புல எகிறி நின்னுச்சு, முகமெல்லாம் ரணமா இருந்துச்சு. பார்க்க விகாரமா இருந்தாலும், ரொம்ப பாவமா தெரிஞ்சார். 

அன்னைக்கின்னு பார்த்து ரூம் காலியா இல்லை. எங்கன இருந்து வந்திருக்காகன்னு விசாரிச்சா, நாகப்பட்டினம் பக்கத்துல ஒரு ஊர் பேர் சொன்னாக. தொலைவு அதிகம், ராத்திரி பஸ் கிடைக்காது எல்லாம் என் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்துச்சு. அவுக வராந்தாவுல கிடந்த ஈஸி சேர பார்த்துட்டு, `நிறைய இடத்துல காசு கூட தரேன்னு சொல்லியும் கேட்டுட்டேன். எல்லாரும் முகத்தையும் தோலையும் பார்த்துட்டு ஒதுக்கிட்டாக. ராவுக்கு மட்டும் இதுல படுத்துக்கிட்டு காலைலே வெள்ளன கிளம்பிடுவேன். படுத்திக்கிடட்டுமானு` தயக்கமா கேட்டாக.

ஏதோ ஒரு சாயல்ல என்னைக் கட்டிக்குடுத்து அனுப்பின தகப்பன் முகம் அவரைப் பார்க்கையில தோணிச்சு. வீட்டுக்கு உள்ள கூப்பிட்டு, எம் மகனுக்கு பக்கத்துல உறங்க படுக்கை போட்டுக்குடுத்தேன். `இடியாப்பமும் சொதியும் இருக்கு. சாப்பிடுறியளா'னு கேட்டேன்.

மறுத்துட்டாக. பின்ன பேசுகையில் தோல் கேன்சருக்கு வைத்தியம் பாக்க வந்ததாகவும், முன்ன தோல் பதனிடுற கம்பெனியில வேலை பார்த்ததாகவும், மேலுக்கு முடியாமப் போக, கம்பெனிக்காரன் கணக்க முடிச்சு அனுப்பிட்டான்னும், அதுனால மீன்புடிச்சு வித்து வியாபாரம் பாக்கறதாவும் சொன்னாக. அவர் மகளையும், மக பெத்த மக்களையும் அவர்தான் பார்த்துக்குறார்னு சொல்லும் போதுகூட அவர் வருத்தமெல்லாம் படல. மாறா முருகன் நடை உடையா வச்சிருக்கான்னு சந்தோஷப்பட்டாக. அந்த நிமிஷம் `வாழ்க்கையில ஒவ்வொரு நொடியையும் இல்லாத ஒண்ணுக்காக ஏங்கியே வாழுறோம்ல நம்ம?'னு தோணிச்சு.

மறுநாள் காலையில கிளம்பும்போது, ` எப்போ ஆஸ்பத்திரிக்கு வந்தாலும் இங்கனயே தங்கிக்கவா? பொதுவா என்ன யார் பார்த்தாலும் நோய் ஒட்டிக்கும்னு நினைச்சோ இல்ல அசிங்கமா இருக்கேன்னு நினைச்சோ நெருங்க விடமாட்டாங்க. உம் மக்கள் என்ன அப்படி பாக்கல'னு தயங்கிக் கேட்டாங்க. சரிங்கனு ஒத்துக்கிட்டேன். அதுக்கப்புறம் குணமாகுறவரைக்கும் ஒரு 40 - 50 தடவ வந்து தங்கினாங்க. ஒரு முறைகூட வெறுங்கையா வரமாட்டாக.

மீன், சிப்பி, முத்து, பக்கத்து ஊர் அரிசி, கீரைனு மகவீட்டுக்கு சீதனம் போலத்தான் கொண்டுவருவாக. அன்னையில இருந்து அவங்க மறையிற வரையிலும் எனக்கு மாசாமாசம் பெத்த தகப்பனை போல தானியம் அனுப்பினாக. எந்த மனுஷனோட முகம் விகாரமா இருக்குன்னு யாரும் சேர்த்துக்கலையோ, அந்த மனுஷனோட மனசோட அழகுதான் என்னை இப்படி மாத்திடுச்சு. என்னைப் பொறுத்தவரை அழகு மனசு சம்பந்தமானது தாயி.' முடித்துவிட்டு சுமித்திராக்கா எழுந்து சென்றுவிட்டார்.

பளீரென்று பிளாட்டோவின் `அழகு என்பது பார்க்கும் கண்களின் தன்மையைப் பொறுத்தது' என்னும் வரிகள் என் நினைவில் வந்தது. சுமித்திராக்கா அந்தக் காலத்து ஆறாப்புதான். ஆனால், அவர் உணர்ந்து சொன்ன அந்த வரிகள்? அவை காலத்துக்குமானவை. அழகை நோக்கி பயணிக்கும் இன்றைய உலகில் மறந்துவிட்ட, மறைந்துவிட்ட துயரம் இரக்கமும் கருணையும். இந்தக் கொரோனா நமக்கு நல்லதொரு படிப்பினையை தந்திருக்கிறது. எதுவும் நிரந்தரமில்லா உலகத்தில், அன்புதான் அழகென்ற உண்மையை முகத்திலடித்தாற்போல் கற்றுக்கொடுத்திருக்கிறது.

இனி இந்த உலகை பணத்தால் காணாமல், மனதால , அன்பால் பார்ப்போம். பேரன்பால் உலகை இன்னும் அழகாக்குவோம்.

No comments:

Powered by Blogger.