Breaking

மனிதர்கள் தெய்வீகமானவர்கள் என்பதை சத்தமாக இந்த உலகிற்கு சொன்னவர், அமெரிக்கா வரை சென்று சிக்காகோ சர்வ சமய மாநாட்டில் பேசி உலகின் கவனத்தை பெற்றவர் - சுவாமி விவேகானந்தர் அவரை பற்றி மேலும் சில தகவல்கள்..


மனிதர்கள் தெய்வீகமானவர்கள் என்பதை சத்தமாக இந்த உலகிற்கு சொன்னவர், அமெரிக்கா வரை சென்று சிக்காகோ சர்வ சமய மாநாட்டில் பேசி உலகின் கவனத்தை பெற்றவர் - சுவாமி விவேகானந்தர் அவரை பற்றி மேலும் சில தகவல்கள்..

அந்நியய நாட்டின் அடிமை தனத்தில் இருந்து நாடு விடுதலை பெற சிங்கம் போல் முழக்கமிட்டவர், இந்த பாரதத்தின் ஆன்மாவை தட்டி எழுப்பிய விவேகானந்தர் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். பிறப்பு: சுவாமி விவேகானந்தர் 1863-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி விஸ்வநாத தத்தருக்கும், புவனேஸ்வரி தேவிக்கும் மகனாக, கொல்கத்தாவில் பிறந்தார். இவருக்கு குடும்பத்தினர் வைத்த பெயர் “நரேந்திரநாத் தத்தா”. விவேகானந்தரின் தாத்தா துர்க்காசரன், திருமணம் ஆன ஒரு சில வருடங்களில் துறவறம் சென்றவர். விவேகானந்தரின் அப்பாவுக்கு 3 வயது இருக்கும் போதே அவர் துறவறம் சென்று விட்டார். விவேகானந்தர் சிறுவயதில் அவரது தாத்தா சாயலில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் சொல்வார்கள். குடும்பத்தில் நிலவிய ஆன்மிக சூழல் காரணமாக சிறுவயதிலேயே பக்தி பாடல்கள், சமஸ்கிரத மந்திரங்களை நன்கு தெரிந்து வைத்திருப்பவராக இருந்தார் விவேகானந்தர். படிப்பில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்த விவேகானந்தர் இளம் வயதிலேயே நல்ல அறிவு கூர்மை கொண்டவராக அறியப்பட்டார். இளம் வயதிலேயே இந்திய வரலாறு, இந்து மத சாஸ்திர புத்தகங்கள், மேற்கத்திய நாடுகளின் வரலாறு போன்றவற்றை ஆழ்ந்து படித்து தெரிந்து வைத்திருந்தார். விவேகானந்தரின் அறிவு கூர்மை: வரி வரியாக படிக்காமலேயே ஒரு புத்தகத்தின் முழு கருத்தையும் புரிந்து கொள்ளும் திறன் இயற்கையிலேயே விவேகானந்தருக்கு இருந்திருந்தது. அதை அவரது நண்பர்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டில் உள்ளவர்களும் சோதனை செய்து பார்த்து அதிர்ந்து போனார்கள். அறிவுக்கூர்மை மட்டுமில்லாமல் தைரியம், தன்னம்பிக்கை, வாத திறமை கொண்டவராகவும் விளங்கினார் விவேகானந்தர். அத்தோடு உடலையும், மனதையும் திடமாக வைத்திருக்கும் பயிர்ச்சிகளில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். சிலம்பம், வாள் பயிற்சி , மல்யுத்தம் போன்றவற்றில் சிறந்து விளங்கினார். தியான பயிற்சி: மணிக்கணக்கில் ஆழ்ந்த தியானத்திலும், மனதை நன்கு ஒருமுக படுத்தும் குணமும் அவருக்கு இயற்கையாகவே இருந்தது. ஒருமுறை சிறுவயதில் தனது நண்பர்கள் சிலருடன் அறை ஒன்றில் தியானத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். நெடுநேரமாக அவரை காணமல் வீட்டில் உள்ளர்வர்கள் அவரை தேடி கடைசியாக மூடி இருந்த ஒரு அறைக்கு வந்து கதவை தட்டி உள்ளனர். வெகு நேரம் கதவை தட்டியும் யாரும் கதவை திறக்காததால் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அவரை சுற்றி இருந்த அவரது நண்பர்கள் எல்லாம் வெளியே ஓடி போக விவேகானந்தர் மட்டும் அப்போதும் தியானம் செய்து கொண்டே இருந்தாராம். மேலும் அங்கு நடந்த எதுவுமே அவருக்கு தெரியாதாம். அந்த அளவுக்கு ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி கிடந்துள்ளார். கடவுளை தேடி : ஆத்திகர்களால் கடவுள் என்று கூறப்படும் மெய் பொருளை கண்டு விட துடித்த விவேகானந்தர், இறைவனை காண முடியுமா, நேருக்கு நேர் சந்திக்க முடியுமா, என்ற கேள்விகளுடன் பல பெரியவர்களை சந்தித்தார் . அப்படி அவர் சந்தித்தவர்களில் முக்கியமானவர் பிரம்ம சமாஜத்தினால் மிகவும் மதிக்க பட்ட தேவிந்திரநாத் தாகூர். அவரை கண்டவுடன் துணிச்சலாக நீங்கள் கடவுளை பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டார். அந்த கேள்வி மகரிஷி என்று அழைக்கப்படும் தேவேந்திரநாத் தாகூரை ஆச்சர்ய பட வைத்தது. அதற்க்கு நீ ஆழ்ந்து தியானம் செய்தால் மட்டுமே அதற்குரிய பலனை அனுபவிப்பாய் என்று பதில் சொன்னார். கடவுளை கண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ள விவேகானந்தருக்கு இருந்த ஆர்வம், கடைசியாக அவரை ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் கொண்டுபோய் சேர்த்தது. ராமகிருஷ்ண பரமஹம்சரின் அறிமுகம் : ராமகிருஷ்ணரை பற்றி தனது கல்லூரி ஆசிரியர்கள் மூலமும், தனது உறவினர்கள் மூலமும் முன்பே தெரிந்து வைத்திருந்தார் விவேகானந்தர். மேலும் ராமகிருஷ்ணர் அடிக்கடி பரவச நிலையை அடைய கூடியவர் என்பதையும் தெரிந்து வைத்திருந்தார். அப்போது தான் சுரேந்தரநாத் எனும் பக்தர் ஒருவரின் வீட்டில் விழா ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள ராமகிருஷ்ணர் வருவதாக இருந்தார். விவேகானந்தர் பக்தி பாடல்களை இனிமையாக படுபவராக இருந்ததால் சுரேந்தரநாத் அவரையும் விழாவிற்கு அழைத்து இருந்தார். அது தான் விவேகானதருக்கும், ராமகிருஷ்ணருக்குமான முதல் சந்திப்பு. விவேகானந்தரின் பாடல்களை கேட்டு மகிழ்ந்த ராமகிருஷ்ணர் அவரை பற்றிய எல்லா தகவல்களையும் கேட்டு தெரிந்து கொண்டார். பிறகு மீண்டும் ஒருமுறை இருவரும் சந்திக்கும் நிலை ஏற்பட்ட போது விவேகானந்தரை பக்தி பாடல்கள் பாட சொல்லி கேட்டார் ராமகிருஷ்ணர் பாட ஆரம்பித்தவுடன் பரவச நிலைக்கு சென்று விட்டார் விவேகானந்தர். கடவுளை காண முடியும், கடவுளுடன் பேச முடியும். ஆனால், யார் கடவுளை பார்க்கவும் அவருடன் பேசவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒருவன் இறைவனை காண வேண்டும் என்று உண்மையாக ஏங்கி இறைவனை அழைத்தால் அவர்களுக்கு தன்னை காட்டி அருள்கிறார் என்ற ராமகிருஷ்ணரின் பேச்சு சாதாரண சமய சொற்பொழிவாளர்களின் பேச்சாக விவேகானந்தருக்கு தெரியவில்லை. இறைவனை தரிசித்தவர் என்றே ராமகிருஷ்ணரை விவேகானந்தர் நினைத்தார். ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடன் : அதன் பிறகு கொல்கத்தா சென்ற விவேகானந்தர் ஒரு மாதம் கழித்து மீண்டும் ராமகிருஷ்ணர் இருந்த தட்சனேஸ்வரம் சென்றார். அப்போது அவருக்கு மற்றும் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. அந்த சந்திப்பின் போது ராமகிருஷ்ணர் தன்னுடைய ஸ்பரிசத்தால் விவேகானந்தரை நிலைகுலைய செய்து விட்டார். அந்த நிலை விவேகானந்தருக்கு, “தான்” என்ற எண்ணம் அழிந்து இந்த பிரபஞ்சம் முழுவதும் சூன்யத்தால் ஒன்றி கலக்கும் அனுபவத்தை அவருக்கு கொடுத்தது. தனது மனதை ராமகிருஷ்ணர் மாற்றி அமைப்பதும் அவருக்கு புரிந்தது. மீண்டும் 15 நாட்கள் கழித்து ராமகிருஷ்ணர் இருக்கும் இடத்துக்கு வந்த விவேகானந்தர், இந்த முறை கடந்தமுறை போன்று நடந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். பக்கத்தில் உள்ள காளி கோவில் தோட்டத்தில் உலவுவதற்கு விவேகானந்தரை அழைத்து சென்ற ராமகிருஷ்ணர் பரவச நிலையில் விவேகானந்தரை ஸ்பரிசித்தார், அந்த தொடுதல் விவேகானந்தரை உண்மையாகவே மெய்மறக்க செய்துவிட்டது. ராமகிருஷ்ணரின் மந்திர சக்தி மிகுந்த ஸ்பரிசம் தன் மனதில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியதாக சொன்ன விவேகானந்தர், அண்ட சராசரத்திலும் கடவுளை தவிர தனக்கு எதுவுமே தெரியாத நிலை கண்டு வியப்படைந்ததாக சொன்னார். அப்போது விவேகானந்தர் யார், எங்கு இருந்து வந்தார், எதற்காக அவர் பிறந்தார், எவ்வளவு காலம் இந்த உலகில் இருப்பார் போன்ற தகவல்களை அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டதாக பின்னால் ராமகிருஷ்ணர் சொல்லி இருந்தார். அந்த கேள்விகளுக்கான பதில்களை விவேகானந்தர் சொன்னதாகவும் அந்த பதில்கள் எல்லாம் முன்பே தான் ஊகித்து உணர்ந்து வைத்திருந்ததை உறுதி படுத்தியதாகவும் சொன்னார். பிறகு அடிக்கடி ராமகிருஷ்ணரை சந்தித்து வந்த விவேகானந்தர் நான்கு ஆண்டுகளில் அவரிடம் முழுமையாக சரணடைந்து விட்டார். பக்தி பித்து ஏறியவர் என்று ராமகிருஷ்ணரை ஆரம்பத்தில் நினைத்தவர் பின்னாளில் அவதாரங்களில் தலை சிறந்தவர் ராமகிருஷ்ணர் என்று சொன்னார். ராமகிருஷ்ணரின் தன்னலம் அற்ற அன்பினாலும் தெய்விக ஆற்றலினாலும் விவேகானந்தர் அவரின் சீடர் ஆனார். ராமகிருஷ்ண பரமஹம்சரின் இறுதி நாட்கள் : ராமகிருஷ்ணரின் சீடர் ஆன விவேகானந்தர், அவருடனே தங்கி அவருக்கு பணிவிடைகள் செய்து வந்தார். இறுதி காலத்தில் தாசிப்பூர் தோட்டத்தில், ராமகிருஷ்ணர் நோய் வாய்ப்பட்டு கிடந்த போது அவருடனே இருந்து பணி செய்து வந்தார் விவேகானந்தர். அப்போது தான் ராமகிருஷ்ணரின் மற்ற சீடர்களுடன் விவேகானந்தருக்கு நெருக்கம் ஏற்பட்டது. ராமகிருஷ்ணர் தான் தொடங்கிய ஆன்மிக பணிகள் தொடர்வது சம்மந்தமான பணிகளை தனது இறுதி நாள்களில் எடுக்க தொடங்கினர். தன்னை பேணி பாதுகாத்து வந்த சீடர்களிடம் காவி துணிகளை கொடுத்து அதை அணிந்து கொண்டு அவர்களை பிச்சை எடுத்து கொண்டு வரச்சொன்னார். இது தான் துறவிகள் சங்கம் உருவாவதற்கு முன்னோடியாக இருந்தது. பின்னர் விவேகானந்தரின் பாதுகாப்பில் அவர்களை ஒப்படைத்த ராமகிருஷ்ணர் அவர்களை வழி நடத்தி செல்லும் படி சொன்னார். 1886-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி ராமகிருஷ்ணர் முழுவதுமாக இறைவன் அடி சேர்ந்தார். ராமகிருஷ்ணரின் அன்பால் உருவெடுத்து விவேகானந்தரின் வழிநடத்தலில் வந்த 15 சீடர்களும் பிற்காலத்தில் உருவான ராமகிருஷ்ண மடத்தை நிர்வகித்தனர். 

ஆன்மீக பயணம்: நாடு முழுவதும் சுற்றி திரிய வேண்டும் என்ற ஆர்வத்தால் தூண்டப்பட்ட விவேகானந்தர் 1888-ஆம் ஆண்டு கொல்கத்தாவை விட்டு கிளம்பினார். இமயம் முதல் குமாரி வரை பயணம் செய்தார். அரசன் முதல் சாமானிய குடிமகன் வரை, படித்தவர் முதல் பாமரர்கள் வரை என்று பல மக்களுடன் நன்கு பழகினார். விவேகானந்தர் ஆழ்வார் என்ற இடத்திற்கு போன போது ஆழ்வார் சமஸ்தானத்தின் திவானுடைய அறிமுகம் கிடைத்தது. அவர் சமஸ்தானத்து அரசரிடம் விவேகானந்தரை அறிமுக படுத்தினார். ஆங்கில நாகரிகத்திலும் கொள்கைகளிலும் அதிக பற்று கொண்டிருந்த அந்த அரசர் இந்திய சமய பழக்க வழக்கங்களை வெறுத்து வந்தவர். உருவ வழிபாடு பற்றி அவர் தாழ்வாக பேசுவதை கேட்ட சுவாமி விவகானந்தர் உருவ வழிபாட்டின் உண்மையை அவருக்கு உணர்த்த விரும்பினார். அதன் படி அங்கு மாட்டப்பட்டிருந்த அரசரின் உருவப்படத்தை காட்டி திவானிடம் எடுத்து வர சொன்னார். பின் இது யாருடைய ஓவியம் என்று கேட்டார் அதற்கு இது மகா ராஜாவின் ஓவியம் என்று பதில் சொன்னார் திவான். அப்போது அந்த ஓவியத்தின் மேல் எச்சிலை உமிழும் படி சொன்னார் விவேகானந்தர். அதிர்ச்சி அடைந்த திவான் மன்னரை அவமானபடுத்தும் படியான அந்த செயலை தான் செய்ய மாட்டேன் என்று சொன்னார். அதற்கு வெறும் காகிதமும் வண்ணமும் கலந்த ஒன்று தானே இது. இதில் எச்சில் உமிழ்வதால் அது எப்படி மன்னரை அவமதிக்கும் செயலாக இருக்கும் என்று கேட்டார் விவேகானந்தர். ஓவியம் என்றாலும் அதில் இருக்கும் மகாராஜாவின் பிம்பம் அவரை நினைவுபடுகிறது என்றார் திவான். அதற்கு விவேகானந்தர் அதே போல் தான் தேவ, தேவியர்களின் உருவ சிலைகளும், பக்தர்களுக்கு பரம்பொருளை நினைவுபடுத்துகிறது பக்தர்கள் இறைவனை தான் வழிபடுகிறார்களே தவிர அதில் உள்ள வெறும் கல்லையும் மண்ணையும் இல்லை என்று உருவ வழிபாட்டிற்கு விளக்கம் கொடுத்தார்.  விவேகானந்தரின் இந்த பதில் மகாராஜா கொண்டிருந்த சமய வழிபாட்டின் மேலிருந்த பார்வையை முற்றிலுமாக மாற்றியது. அமெரிக்க பயணமும் சிகாகோ மாநாடும் : விவேகானந்தரின் வாழ்க்கையில் நடந்த மற்றும் ஒரு முக்கியமான சம்பவம் அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோவில் நடந்த சர்வ சமய மாநாட்டில் கலந்து கொண்டது. அந்த சம்பவம் தான் பலரும் அறிந்திராத சந்நியாசியாக இருந்த விவேகானந்தரை உலக புகழ் பெற்றவராக மாற்றியது. 1891-ஆம் ஆண்டு கடைசியில் கத்தியவான் என்னும் பகுதியில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது தான் சிக்காகோவில் நடக்க இருக்கும் சர்வ மத மாநாட்டை பற்றி கேள்வி பட்டார். யாராவது பயண செலவை ஏற்று கொண்டால் தான் அந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக அரிதாஸ் பாபு என்பவரிடம் சொன்னார் விவேகானந்தர். நாட்கள் செல்ல செல்ல மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணம் அவரது மனதில் வலுவானது பிறகு மைசூர் கேரளா என பயணம் செய்து அங்கிருந்து கன்னியாகுமரிக்கு வந்தார்.கன்னியாகுமரி கடற்கரையில் ஒரு பாறையை கண்ட விவேகானந்தர் அங்கு மூன்று நாட்கள் தொடர்ந்து தியானத்தில் ஈடுப்பட்டார். அங்கு தான் தற்போது உள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ளது. பின்னர் சென்னைக்கு வந்த விவேகானந்தரிடம் சர்வ மத மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொண்ட சென்னை பக்தர்கள் அதற்கான பணத்தையும் தயார் செய்தனர். சிக்காகோவுக்கு பயணம் செய்வது உறுதியானதை அடுத்து, கேத்ரி சமஸ்தானத்தின் அழைப்பை ஏற்று கேத்ரி சென்றார் விவேகானந்தர், அங்கு அவரை உபசரித்த மகாராஜா விவேகானந்தர் மும்பையில் இருந்து சிகாகோவிற்கு செல்வதற்கான கப்பலில் முதல் வகுப்பு பயண சீட்டை வாங்கி கொடுத்தார். மேலும் அவருக்கு புதிய உடைகளை வாங்கி கொடுத்து, பணமும் கொடுத்து அனுப்பினார். அப்போது தான் மகாராஜாவின் வேண்டுகோளுக்கு இணங்கி தனது பெயரை விவேகானந்தர் என்று வைத்து கொண்டார். 1893-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி கப்பல் ஏறிய விவேகானந்தர் ஜூலை மாதம் 31ஆம் தேதி அமெரிக்க சென்று சேர்ந்தார். சிகாகோ பேச்சு: செப்டம்பரில் நடந்த மகாஜன சர்வ சமய மாநாட்டில் பேச எழுந்த விவேகானந்தர் சகோதர சகோதரிகளே என்று சகோதரதுவதுடன் தனது பேச்சை தொடங்கினர் அதுவரை அப்படி யாரும் பேச தொடங்கி கேட்டிடாத சபையில் இருந்த அனைவரும் விவேகானந்தரின் பேச்சை உற்று கவனித்தனர். இந்து மதத்தின் ஆழமான கருத்துக்களையும் அதன் விசாலமான தன்மையையும் தனக்கே உரிய கம்பிரத்துடன் எடுத்து சொன்னார் விவேகானந்தர். அமெரிக்க மக்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் உலக அளவிலும் புகழ் பெற காரணமாக இருந்தது அந்த பேச்சு. பலரும் அவரது பேச்சை கேட்க ஆர்வம் காட்டினார் அவருக்கு அங்கேயே சீடர்கள் கூட்டம் பெருகியது. அதனால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அங்கேயே இருந்து இந்தியாவை பற்றியும் இந்து மதத்தை பற்றியும் பல்வேறு சொற்பொழிவுகளை நடத்தினார். அதற்காக அமெரிக்காவின் பல பகுதிகளுக்கு அவர் சென்று வந்தார்.  இங்கிலாந்து பயணம்: பிறகு இங்கிலாந்தில் இருந்து ஏராளமான அழைப்புகள் வந்ததை அடுத்து 1895-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்து புறப்பட்டு சென்றார். அங்கும் பல மாதங்கள் தங்கி இருந்து சமய சொற்பொழிவுகள் செய்தார். பிறகு ஐரோப்பியாவில் பல நாடுகளுக்கு பயணம் செய்து சொற்பொழிவு நடத்தினர். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் நிறைய நண்பர்களையும், சீடர்களையும் கொண்டிருந்ததால் இரண்டு நாடுகளிலும் வேதாந்த சங்கத்தை உருவாக்கினார். 

இலங்கை பயணம்: அதனை அடுத்து 1896-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு 1897-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை தலைநகர் கொழும்பு வந்தார். அவரை வரவேற்க இந்தியாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் கொழும்பு சென்றார்கள். ஆண்டியாக வடக்கில் இருந்து தெற்கே வந்த விவேகானந்தர் வெற்றி வீரராக தெற்கில் இருந்து வடக்கு நோக்கி தனது பயணத்தை தொடங்கினர். அப்போது எளிய மக்கள் மட்டும் இல்லாமல் ராஜாக்களும் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்கள். பின்னர் சென்னையில் இருந்து கப்பல் மூலம் கொல்கத்தா சென்றார் விவேகானந்தர். அதனை தொடர்ந்து கங்கை கரையில் பேலூர் என்னும் இடத்தில் 1899-ஆம் ஆண்டு மடம் அமைத்து அதற்கு தனது குருநாதரான ராமகிருஷ்ணரின் பெயரை வைத்தார். மறைவு: ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தர் 1902-ஆம் ஆண்டு ஜூலை நான்காம் நாள் தனது 39-ஆம் வயதில் பேலூரில் காலமானார்.  மனிதர்கள் அனைவரும் தெய்விகமானவர்கள் என்பதை தனது அனைத்து பேச்சுகளிலும் எழுத்துக்களிலும் கடைசி வரை வலியுறுத்தி வந்தார் சுவாமி விவேகானந்தர். திருச்சிற்றம்பலம்

No comments:

Powered by Blogger.